உயிர்த்த ஞாயிறு தினத்தன்றைய மிலேச்சத்தனமான தாக்குதலை கண்டித்து நிந்தவூரில் அமைதிப்பேரணி.


(ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ் )
உயிர்த்த ஞாயிறு தினத்தன்று பயங்கரவாதிகளால் நமது நாட்டில் இடம் பெற்ற 
மிலேச்சத்தனமான குண்டுத் தாக்குதலை கண்டித்து இன்று(03) நிந்தவூர் பெரிய ஜூம்ஆப்பள்ளிவாசல்  வளாகத்தில் அமைதிப்பேரணி ஒன்று இடம் பெற்றது.நிந்தவூர் ஜம்மியத்துல் உலமா சபை, நிந்தவூர் பிரதேச சபை, பொது அமைப்புக்கள் என்பன ஒன்று சேர்ந்து இக்கண்டன அமைதிப் பேரணியை நடாத்தினர்.

இன்று ஜூம்ஆத் தொழுகையை முடித்துவிட்டு, பயங்கரவாதிகளுக்கு எதிரான சுலோகங்களை ஏந்தியவாறு ஆயிரக்கணக்கான பொது மக்கள், உலமாக்கள், இளைஞர்கள் எனப் பலரும் இவ்வமைதிக் கண்டனப் பேரணியில் கலந்து கொண்டனர்.


நிந்தவூர் ஜம்மியத்துல் உலமா சபைச் செயலாளர் எம்.யூ.ஆஸிக் அலி (காஸிபி) மௌலவி தலைமையில் இடம்பெற்ற இக்கண்டனப் பேரணியில் நிந்தவூர் ஜம்மியத்துல் உலமா சபை உபதலைவரும், நிந்தவூர் பெரிய ஜூம்ஆப்பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபை உபசெயலாளருமான சங்கைக்குரிய மௌலவி எம்.எம்.கமறுதீன் (சர்க்கி), நிந்தவூர் பிரதேச சபை தவிசாளர் எம்.ஏ.எம்.தாஹீர், அம்பாரை மாவட்ட நல்லிணக்க சபை உறுப்பினரும், உதவிக் கல்விப் பணிப்பாளருமான எம்.ஏ.எம்.றஸீன் ஆகியோர் கண்டன உரைகளையும் நிகழ்த்தினர்.'எமது இஸ்லாமிய மார்க்கத்தில் தற்கொலைக்கோ, கொடும்பாவங்களுக்கோ இடங் கிடையாது. எமது மார்க்கம் எப்போதும் அன்பு, காருண்யம், சமாதானம், சகவாழ்வு, தியாகம், ஒற்றுமை, சகிப்புத்தன்மை போன்ற நற்குணங்களையே கற்றுத்தந்துள்ளது. தற்கொலை புரிந்து பிறரின் உயிர்களையும் பலிகொள்ளச் செய்த கொடும்பாவிகளின் கோரச் செயலை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம். இதே வேளை இதனால் பாதிப்புக்குள்ளாகியிருக்கும் பிறமத சகோதரர்களின் சோகத்திலும் பங்கு கொள்கிறோம். எப்போதும் எல்லா இனமக்களுடனும் அன்பு கொண்டு வாழவே விரும்புகிறோம். இது போன்ற கோரச் செயல்கள் இனிஒருக்காலத்திலும் நடைபெறாமலிருக்க எல்லாம் வல்ல அல்லாஹ்வைப் பிரார்த்திக்கிறோம்' என அவர்கள் கருத்துத் தெரிவித்தனர்.


No comments