நமது இளைஞர் சமுதாயமும் தடுப்புக்காவலும்..

ஏ.ஆர். மபூஸ் அஹமட் -LLB

அண்மைய தாக்குதல் சம்பவங்களின் பின்னரான மயான அமைதியின் பின்னர் நாட்டு விவகாரம்  மெல்ல மெல்ல நிலைமைகள் வழமைக்கு திரும்பியவண்ணம் இருக்கிறது..


வெசாக் தாக்குதல் அச்சம் மற்றும் பாடசாலைகளின் பாதுகாப்பு என்பன பெரும்பான்மை சிங்கள மக்களிடையே கேள்விக்குறியாக இருந்த நிலையில் இறைவன் உதவியுடன் அந்த சந்தேகங்கள் நீங்கியுள்ள நிலையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் மும்முரமாக நடந்தேறி வருகிறது..


அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அவர்கள் மீதான அவநம்பிக்கை வாக்கெடுப்பு மற்றும் ஞானசார தேரர் விடுதலை போன்றவற்றால் அரசியல் சூடுபிடித்துள்ளது..


தற்போது விடயத்துக்கு வருகிறேன்..


அண்மைய தாக்குதல் சம்பவங்களில் நேரடி  தொடர்புடையவர்கள் என்றும் அதற்காக உதவிபுரிந்தவர்கள் என்றும் தடைசெய்யப்பட்ட  தெளஹீத் அமைப்புகளுடன் சம்பந்தப்பட்ட நபர்கள் என்றும் இதுவரையிலும் சுமார் நூற்றுக்கும் அதிகமானவர்கள் கைது செய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றனர். குறிப்பாக இதில் காத்தான்குடியை சேர்ந்த இளைஞர்களும் உள்ளனர். 


இவ்வாறான குற்றச்சாட்டுக்களுடன் கைது செய்யப்பட்ட  ஒருவர் தொடர்பான தகவல்களை பெறும் பொருட்டு கொழும்பு-9 தெமட்டகொடையில் அமைந்துள்ள கொழும்பு குற்ற தடுப்பு பிரிவுக்கு நேற்று சென்றிருந்தேன்..


பார்வையிட வந்தவர்களின் கூட்டம் கானப்பட்டது. இருப்பினும் 

சட்ட விவகாரம் என்பதால் என்னால் இலகுவாக அடையாளத்தை உறுதிப்படுத்தி உள்நுளைய கிடைத்தது. ஏனையோரில் ஒரு சிலரை மாத்திரம் நீண்ட விசாரணையின் பின்னர் அனுமதித்ததை கண்டேன்..


கைது செய்யப்பட்ட நபர் தொடர்பாக பொறுப்பில் உள்ள I.P பதவிநிலை அதிகாரியை வரவேற்பாளரிடம் வினவினேன். சற்று தாமதிக்குமாறு தகவல் வந்தது. காத்திருந்தேன்.  எனக்கு சற்று முன்னால் மூன்று சிறைக்கூடங்கள் இருந்தது. சுமார் 10×10 அறையில்  20க்கும் அதிகமானவர்களை காணமுடிந்தது. அதில் நமதூரை சேர்ந்த பலரை அவதானித்தேன். சிலர் மிகுந்த ஏக்கத்துடன் என்னை பார்த்தனர். 20 தொடக்கம் 40 வயதுக்குட்பட்ட இளைஞர்கள். இனி இவர்களது எதிர்காலம்?

ஒரு சிலரை அடையாளம் கண்டு கொண்டேன். (அவர்களும்). ஆனால் பேச முடியாது. இவர்களெல்லாம் பயங்கரவாதிகளா ?  அல்லது ஆக்கப்பட்டார்களா அல்லது ஆக்கப்பட்டு விடுவார்களா என்ற எண்ணம் மனதில் ஓடிக்கொண்டிருந்தது..


சில நிமிடங்களில் குறிப்பிட்ட போலீஸ் பரிசோதகர் வருகைதந்தார். எதற்காக சந்திக்க வேண்டும் என வினவினார். நான் என்னை அடையாளப்படுத்திக் கொண்டு கைது செய்யப்பட்ட நபர் தொடர்பாக வினவினேன். சட்ட  நடவடிக்கை எடுக்க குறிப்பிட்ட நபரது குடும்பம் முன்வந்துள்ளதாகவும் அதுதொடர்பில் தகவல்களை பெறவே நான் வந்துள்ளேன் எனவும் தெரிவித்தேன். .


மிக நிதானமாகவும் மரியாதையாகவும் உரையாடிய அந்த போலீஸ் அதிகாரி சிம் அட்டை பாவனை தொடர்பில் குறிப்பிட்ட நபரை கைது செய்துள்ளதாகவும் விசாரணை இன்னும் முற்றுப்பெறவில்லை என்றும் இதுவரையிலும் பல அறிக்கைகள் பெறப்பட வேண்டியுள்ளதாகவும் முழுமையான ஆவணங்களுடனேயே நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த முடியும் எனவும் அதற்கு சற்று காலம் தேவைப்படும் எனவும் கூறினார்..


விடயங்களை கேட்டறிந்து நன்றி கூறி விடைபெற முற்பட்டபோது அவரே நீங்கள் விரும்பினால் சந்தேக நபரை பார்வையிடலாம் என்றார். நானும் சம்மதிக்க என்னை சிறைக்கூடத்துக்குள் அழைத்து சென்றார்.  உள்ளே போனதுதான் தாமதம் பலரது சலாம் களை ஒரே நேரத்தில் கேட்டு திகைத்துப் போனேன்.(பயங்கரவாத குற்றச்சாட்டு அல்லவா) அதனால்  ஒருவகையான பயமும் ஒட்டிக்கொண்டது. 


இருப்பினும் தைரியமாக உள்ளே சென்று கைது செய்யப்பட்ட நபரை வெறும் ஓரிரு நிமிடங்களில் சுகம்விசாரித்தேன். அருகில் போலீஸ் பரிசோதகர் இருந்தார். தான்உட்பட அனைவரும் நோன்பிருப்பதாகவும் குறைவான வசதிகளே இருப்பதாகவும் தான் எந்த குற்றமும் புரியவில்லை என்றும் தன்னை வெளியே எடுக்க உதவி புரியுமாறும் வேண்டினார்..


சந்திப்பை முடித்து வெளியேறும் போது அந்த போலீஸ் அதிகாரி தினமும் பலர் கைது செய்யப்பட்டு இங்கு அழைத்து வரப்படுகின்றனர். இங்கு குறைந்தளவிலான வசதிகளே உள்ளன அதனால் இவர்களை நாரஹேனாபிட்டியில் உள்ள தடுப்பு நிலையம் ஒன்றிற்கு மாற்ற உள்ளதாகவும் கூறி வழியனுப்பினார்..


நோன்பு திறந்ததில் இருந்து சஹர்நேரம் வரை தூக்கம் வரவேஇல்லை..

மனதிற்குள் ஆயிரம் கேள்விகள்..


இவற்றுக்கெல்லாம் காரணம் யார்?


இவர்கள் அனைவரும் குற்றவாளிகளா?


இனி இவர்களது எதிர்காலம் என்ன?


இவர்களை காப்பாற்ற யார்?


இவர்கள் அப்பாவிகளா?


இவர்கள் தெரிந்து செய்தார்களா இல்லை?


வெளிநாட்டு வேலைவாய்ப்பு பெற போலீஸ் சான்று அவசியம் தெரியுமா?


இன்னும் பல..


இதில் நான்காவது கேள்வியை தவிர 

எந்த கேள்விகளுக்கும் என்னிடம் பதில் இல்லை. 

( தொடரும்)

No comments