பல வருடங்களாக முஸ்லிம்கள் மீது இருந்த நம்பிக்கை ஒரு சம்பவத்தினால் அவ நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது- பிரிகேடியர் அஷாத் இஸ்ஸதீன்.


(எம்.பஹ்த் ஜுனைட்)

காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இரானுவ அதிகாரிகளுக்கும் பள்ளிவாயல்கள் மற்றும் சிவில் அமைப்புகளின் நிர்வாகிகளுக்கும் இடையிலான  சந்திப்பு  வியாழக்கிழமை (9) சம்மேளனத்தின் அஷ்ஷஹீத் அஹமது லெப்பை ஞாபகார்த்த மண்டபத்தில் இடம்பெற்றது.


இச் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த பிரிகேடியர் அஷாத் இஸ்ஸதீன்


இலங்கை வரலாற்றில் பல நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக அரசர்கள் காலம் தொட்டு மாற்றுமத மக்கள் மத்தியில் நூறுவீதமான நம்பிக்கையை கட்டிக் காத்துவந்த இலங்கை முஸ்லிம்கள் ஏப்ரல் 21 உயிர்த்த ஞாயிறு சம்பவத்தின் பின்னர் முஸ்லிம்கள் மீது அவ நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது மிகவும் மன வேதனையான விடயமாகும் இந்த அவ நம்பிக்கையை மீண்டும் நம்பிக்கையோடும் ஒற்றுமையோடும் கட்டி எழுப்ப வேண்டிய பொறுப்பு முஸ்லிம்களுக்கே உரியது.

இந்த மாதிரியான சகோதரத்துவம், சமாதானம் உடைய சமூக நல்லுறவை கட்டியெழுப்பும் எமது பணிகளை பள்ளிவாயல்களில் இருந்து ஆரம்பிக்க வேண்டும் பள்ளிவாயல்கள் வெறுமென தொழுகைக்கு மட்டும் பயன்படுத்தக்கூடிய இடம் அல்ல பள்ளிவாயல்களில் பல் வேறுபட்ட சமூக நலன் மிகுந்த நிகழ்வுகளை நடாத்துவதுடன் ஒழுக்கம் , சமாதானத்தை கற்றுக்கொடுக்கும் இடமாக பள்ளிவாயல்கள் மாற வேண்டும் என கேட்டுக்கொண்டார்.


மேலும் அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கும் போது 

ஒரு சிரிய குழுவினர்கள் செய்த மிலேச்சத்தனமான பயங்கரவாத செயற்பாடுகளால் இன்று முழு முஸ்லிம் சமூகமும் பயங்கரவாதியாக பார்க்கப்படுவது மிகவும் கவலையாக இருந்தாலும் நாம் பொறுமை செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டு தலை குனிய வேண்டிய நிலை உருவாகி இருக்கிறது.

இன்றைய சூழலில் இஸ்லாம் காட்டித்தந்த வாழ்க்கை பிரகாரம் எமது எதிர்கால சந்ததிகளை நல்லொழுக்கம் உடையவர்களாகவும் இன நல்லுறவை பேணி நடக்க கூடியவர்களாகவும் வளர்த்து எடுக்க வேண்டிய பொறுப்பு நம் ஒவ்வொரு வருக்கும் உண்டு இனிமேலும் இந்த ஸஹ்றான் போன்ற பயங்கரவாதிகள் உருவாகக் கூடாது.


முஸ்லிம்கள் மத்தியில் பல பிரிவுகள், கொள்கை வேறுபாடுகள் இருக்கலாம் ஆனால் நாம் முஸ்லிம்கள் என்ற அடிப்படையில் ஒற்றுமையுடன் செயற்பட்டு தீவிரவாதத்தையும்,பயங்கரவாதத்தையும் அடியோடு அழித்து இலங்கை நாட்டில் இன ஒற்றுமையை கட்டியெழுப்ப வேண்டும் என பிரிகேடியர் அஷாத் இஸ்ஸதீன் கேட்டுக்கொண்டார்.

இச் சந்திப்பில் காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்தின் தலைவர் எம்.ஐ.ஆதம்லெப்பை (பலாஹி) ,செயலாளர் எஸ்.எச்.எம்.ரமீஸ் (ஜமாலி),  இரானுவ அதிகாரிகளான கேனல் ரஊப், கேனல் பாரிஸ், கேனல் பெளமி கிச்லான், கேனல் ஹமீம், மேஜர் ஹலீம், மேஜர் முஹம்மத், மேஜர் மொனசிங்க மற்றும் கொழும்பு இஹ்ஸானியா அரபுக் கல்லூரி விரிவுரையாளர் மெளலவி பரூத் பாறூக் , சம்மேளனத்தின் உறுப்பினர், பள்ளிவாயல்கள் மற்றும் சிவில் அமைப்புகளின் நிர்வாகிகள் என பலரும் கலந்துகொண்டனர்.

No comments