அனைத்து பல்கலைக்கழகங்களினதும் பாதுகாப்பை உறுதிப்படுத்த சோதனை நடவடிக்கைகள்


சதீஸ்

நாட்டில் ஏற்பட்டுள்ள பாதுகாப்பு நெருக்கடி நிலையைக் கருத்தில் கொண்டு அனைத்து பல்கலைக்கழகங்களினதும் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வண்ணம் சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.இந்த சோதனை நடவடிக்கைகளை முப்படையினர் மற்றும் பொலிஸார் ஒன்றிணைந்தே முன்னெடுத்துள்ளதாகவும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.பல்கலைக்கழக கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ள நிலையிலேயே மாணவர்களின் பாதுகாப்பு கருதி இந்த சோதனைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

இதன் போது பல்கலைக்கழகங்களின் ஆய்வு கூடங்கள், கேட்போர்கூடம், நூலகம் மற்றும் விடுதிகள் உள்ளிட்ட பல்கலைக்கழகம் முழுவதுமாக சோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளது.அத்துடன், பாதுகாப்பு தரப்பினரால் வழங்கப்பட்டுள்ள திகதிக்கு அமைய மாணவர்களுக்கு பல்கலைக்கழகங்களை மீள திறப்பதற்கான திகதி அறிவிக்கப்படவுள்ளது.இவ்வாறாக பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர்கல்வி நிலையங்கள் ஆரம்பித்ததன் பின்னர் மாணவர்கள் செயற்படவேண்டிய விதம் தொடர்பிலும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.அதற்கமைய மாணவர்கள் தமது பல்கலைக்கழக அடையாள அட்டைகளை எப்போதும் காட்சிப்படுத்துமாறும், தமது புத்தகப்பை பொதிகள் என்பவற்றை சோதனைக்கு உட்படுத்த ஒத்துழைப்பு வழங்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இதேவேளை, முகத்தை மறைக்கும் வகையிலான ஆடைகளை அணிதல் உட்பட  வெளிநபர்கள் பல்கலைக் கழகத்திற்குள் பிரவேசிப்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடப்பட்டுள்ளது. ‪தென்கிழக்குப் பல்கலைக்கழகம் ஏற்கெனவே சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதும் இங்கு குறிப்பிடத்தக்கது.No comments