தாக்குதல்களை மேற்கொண்டவர் பாரபட்சமின்றி தண்டிக்கப்பட வேண்டும்


மிலேச்சத்தனமான தாக்குதல்கள் மூலம் நாட்டில் வன்முறையை தோற்றுவித்து இனங்களுக்கிடையிலான ஒற்றுமையை குலைக்கும் சக்திகள் எந்த விதமான பாரபட்சமுமின்றி தண்டிக்கப்பட வேண்டுமென அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் கோரிக்கை விடுத்துள்ளார். 


இவ்விடயம் தொடர்பில் அவர் இன்று (22) விடுத்துளள் ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடுகையில், கொழும்பு உட்பட பல பிரதேசங்களில் ஞாயிற்றுக் கிழமை மேற்கொள்ளப்பட்ட வெடிகுண்டு தாக்குதல் சம்பவத்தை நாங்கள் வன்மையாக கண்டிக்கின்றோம். இதே வேளை இந்த குண்டுத் தாக்குதலில் பலியானவர்களின் உறவினர்களுக்கும் மற்றும் காயமடைந்தவர்களுக்கும் எனது ஆழ்ந்த துயரத்தை தெரிவிக்கின்றேன். இந்த சம்பவத்தை யார் செய்தாலும் அவர்களுக்கு எதிரான அனைத்து கடுமையான நடவடிக்கைகளையும் அரசாங்கம் எடுக்க வேண்டியதுடன், இவ்வாறான மிலேச்சத்தனமான சம்பவங்களின் பின்னணி தொடர்பில் கண்டறிந்து இந்தநாட்டில் குழப்பத்தை ஏற்படுத்தும் சக்திகளை இனம் கண்டு அவற்றை துடைத்தெறிந்து மக்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்துவது அரசாங்கத்தின் பொறுப்பாகும். கத்தோலிக்க மக்களின் உயிர்த்த ஞாயிறு தினமான நேற்றைய தினத்தில் தேவாலயங்களில் தமது மத அனுஷ்டானங்களில் ஈடுபட்டுக் கொண்டிருந்த அப்பாவி மக்களை இலக்கு வைத்தும், அதே போன்று தலை நகரில் பிரசித்தம் கொண்ட நட்சத்திர ஹோட்டல்களில் மேற்கொள்ளப்பட்ட இந்த தொடர் தாக்குதலினால் ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் மற்றும் வெளிநாட்டவர்கள் கொல்லப்பட்ட சம்பவத்தை கேள்வியுற்றதும் பெரும் அதிர்ச்சிக்குள்ளானேன். இவ்வாறான பயங்கரவாத செயற்பாடுகளால் இதனை மேற்கொண்டவர்கள் எத்தகைய இலாபத்தை அடையப்போகின்றார்கள் என்பது தெரியவில்லை. இது போன்ற மனித நேயமற்ற தாக்குதல்களை ஒரு போதும் எம்மால் ஏற்றுக் கொள்ளமுடியாது. குறிப்பாக இஸ்லாமியர்கள் ஒரு போதும் வன் முறைகளை நாடியதில்லை என்பதற்கு எமது நாட்டில் பல உதாரணங்களை கூறலாம். இஸ்லாமிய மதம் எந்த சந்தர்ப்பத்திலும் ஏனைய சகோதரர்களின் உயிரினை பறிக்கும் அதிகாரத்தினை எவருக்கும் வழங்கவில்லை என்பதை தெளிவாக எடுத்துக் கூறுகின்றது. சமாதானம், சாந்தி அகிம்சை என்பனவற்றை மக்கள் மத்தியில் எடுத்துச் செல்லும் மதமாக இஸ்லாம் இருக்கின்றது. குறிப்பாக பல்லின சமூகங்கள் வாழும் எமது தாய் திருநாட்டில் இவ்வாறானதொரு குரூரச் சம்பவம் மனித மனங்களால் நினைத்தும் பார்க்க முடியாததொன்று. இத்தகைய கொடிய தாக்குதல் சம்பவங்களினால் மீண்டும் இனக் கலவரத்தை ஏற்படுத்தி அதன் மூலம் இந்த தீய சக்திகள் எதிர்பார்க்கும் இலக்கை அடைய ஒரு போதும் இந்த நாட்டுமக்கள் இடம் கொடுக்க மாட்டார்கள் என்பதை உறுதியாக கூறிக் கொள்ளவிரும்புகின்றேன். இதே போல் இந்த தாக்குதலின் பின்னணி கண்டறியப்படல் வேண்டும், அதற்கான துரித செயற்பாடுகளை ஜனாதிபதி, பிரதமர் மற்றும் பாதுகாப்பு தரப்பினர் மேற்கொள்ள வேண்டும். இதன் மூலம் எமது நாட்டில் மக்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படல் வேண்டும் என்பதுடன் இந்த அநாகரிகமான செயலை மேற்கொண்ட எவராயினும், தகுதி, தராதரம், சாதி, இனம், மதம் பாராது உரிய தண்டனை வழங்கப்படல் வேண்டும். குறிப்பாக இந்த நாட்டின் இன ஒற்றுமைக்கு பங்கம் விளைவிக்கும எந்த சக்திகளுக்கும் எமது மக்கள் விலைபோகக் கூடாது . என்று இந்த தருணத்தில் நான் வேண்டுகோள்விடுப்பதுடன், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் எமது செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்வது காலத்தின் தேவையாகும் என குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. (மன்னார் நிருபர் லெம்பட்)

No comments