பயங்கரவாதத்திற்கு எதிராக அனைவரும் ஒன்றினைய வேண்டும்- ஊடக கற்கைகள் மற்றும் சமாதானத்தை கட்டியெழுப்புவதற்கான நிலையம் வேண்டுகோள்

கடந்த 30 ஆண்டுகால கொடூர யுத்தத்தின் பாதிப்புக்களில் இருந்து இன்னும் நாம் முழுமையாக விடுதலை பெறாத நிலையில் மீண்டும் இலங்கையில் பொது மக்களை இலக்கு வைத்து நேற்று(21) நாட்டின் பல இடங்களிலும் மிலேச்சத்தனமாக பயங்கரவாதத் தாக்குதல்கள் இடம் பெற்றிருக்கின்றன. நேர்மையான எந்தவொரு மனித உள்ளத்தினாலும் அங்கீகரிக்க முடியாத இத்தாக்குதல்களை ஊடக கற்கைகள் மற்றும் சமாதானத்தை கட்டியெழுப்புவதற்கான நிலையமும்  மிக வன்மையாக கண்டிக்கிறது என அதன் செயலாளர் எம்.ஏ.டி.ஹம்ஷியா அமீர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது

இலங்கை நாடு சமாதானத்தை நோக்கி பயணிக்கும் இத்தருணத்தில் மத வழிபாட்டில் ஈடுபட்டுக் கொண்டிந்த கிறிஸ்தவ பக்தர்கள் மீதும் அப்பாவி பொது மக்கள் மீதும் தொடரப் பட்டிருக்கும் இப்பயங்கரவாதத் தாக்குதல்கள் அனைவருடைய உள்ளங்களிலும் மீண்டுமொரு முறை ஆறாத காயங்களையும், மன வேதனையையும் உண்டு பண்ணியிருக்கிறது.

இதனால் பல பெறுமதியான மனித சொத்துக்கள் எங்களை விட்டும் பிரிந்திருக்கின்றன.பலர் நிரந்தர அங்கவீனர்களாக மாறியிருக்கின்றனர்.மக்களுக்கு பாதுகாப்பையும் மன நிறைவையும் அளிக்கும் மத வழபாட்டு நிலையங்கள் அச்சத்தையும் பீதியையும் கொண்டு வரும் இடகளாக காட்சியளிக்க ஆரம்பித்துள்ளன.

இது தொடர்பாக நாம் ஒவ்வொருவரும் பொறுப்புக் கூற கடமைப் பட்டிருக்கின்றோம்.மீண்டும் மீண்டும் இப்படியான துரதிஷ்டவசமான நிகழ்வுகள் ஏற்படாதிருக்க பயங்கரவாதத்திற்கு எதிராக அனைவரும் ஒன்றினைய வேண்டுமெனவும் அவ்வறிக்கையில் செயலாளர் ஹம்ஷியா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அத்துடன் மேற்படி குண்டு வெடிப்பு சம்பவங்கள் மற்றும் பயங்கரவாத தாக்குதல் சம்பவங்களின் போது உயிரிழந்த அனைவருக்கும் தமது சமாதான  நிலையம் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிப்பதுடன் பாதிக்கப்பட்டுள்ள அனைவருக்கும் ஆறுதல்களையும் தெரிவித்துக் கொள்கிறது எனவும் அவர் தனது கண்டன அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

எம்.எல்.எஸ்.முஹம்மத்
இரத்தினபுரி

No comments