மட்டக்களப்பு பல்கலைக்கழக கல்வி நடவடிக்கைகள் ஜுலையில் ஆரம்பம் பல்கலைக்கழகத்தின் தலைவர் பொறியலாளர் அஹமட் ஹிராஸ் ஹிஸ்புல்லாஹ் வழங்கிய நேர்காணல்


செல்வங்களுள் சிறந்தச் செல்வம் கல்விச் செல்வமாகும். அதனால்தான் வள்ளுவர் "கேடில் விழுச் செல்வம் கல்வி" என்றார். கெடுதல் அல்லது அழிதல் இல்லாத செல்வம் கல்வி என்பதே இதன் பொருள். கல்வி அழிவில்லாதது மட்டுமல்ல என்றும் நிலைத்து நிற்கக்கூடியது. எந்தவொரு செயலினாலும் அதை அழிக்க முடியாது.

எனவேதான், கற்றோருக்கு அனைத்து வழிகளிலும் முக்கியத்துவம் வழங்கப்படுகின்றது. அதேபோல் கல்வி கண் திறப்பவர்களும் இச் சமூகத்தில் தனிமரியாதையுண்டு.
இலங்கையில் இன்று உயர்கல்விக்கான கேள்வி உச்சம் தொட்டுள்ளது. எனினும், கேள்விக்கேற்ற நிரம்பலை பூர்த்திசெய்வதற்கான வளங்கள் அரச பல்கலைக்கழகங்களில் இல்லை. இதனால், பல மாணவர்களின் எதிர்;ப்பார்ப்புகள் தவிடுபொடியாகின்றன. எதிர்காலம் குறித்த கனவுகளும் கலைகின்றன.

ஆகவே தனியார் பல்கலைக்கழகத்தின் முக்கியத்துவம் இன்று உணரப்பட்டுள்ளது. அந்தவகையில் உயர்கல்வி என்ற கனவை நனவாக்குவதற்கு உதயமாகியுள்ளது மட்டக்களப்பு பல்கலைக்கழகம். இந்நிலையில், குறித்த பல்கலைக்கழகம் தொடர்பில் அதன் தலைவர்  மட்டக்களப்பு பல்கலைக்கழகத்தின் தலைவர் பொறியலாளர் அஹமட் ஹிராஸ் ஹிஸ்புல்லாஹ் வழங்கிய நேர்காணல் வருமாறு,


கேள்வி:- மட்டக்களப்பு பல்கலைக்கழகம் (Batticaloa campus) ஆரம்பிக்கப்பட்டதன் நோக்கம் என்ன, கல்வி நடவடிக்கைகள் எப்போது ஆரம்பமாகும்?
பதில்:- போரால் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உயர்கல்வியை தொடர முடியாமல் நிறைய மாணவர்கள் உள்ளனர். பல்வேறு சிரமங்களால் அவர்கள் முறையான உயர் கல்வியைப் பெறுவதில்லை. இரு மாகாணங்களிலும் மூன்று அரச பல்கலைக்கழகங்கள் இருக்கின்றன. என்றாலும் ஒவ்வொரு வருடமும் பல்கலைக்கழகம் தெரிவு செய்யப்படும் வீதமானது மிகவும் குறைவாகவே உள்ளது. ஏனைய மாணவர்கள் விவசாயம், வியாபாரம், பரம்பரை தொழில்களிலேயே ஈடுபடுகின்றனர். ஒரு சிலரே தனியார் பல்கலைக்கழகங்களில் கல்வி பயில்கின்றனர். 
அதிகமான மாணவர்களுக்கு பிரதான நகரங்களுக்கு சென்றோ அல்லது வெளிநாடுகளுக்கு சென்றோ தனியார் பல்கலைக்கழகங்களில் கல்வி கற்பதற்கான வாய்ப்பு – வசதி போதியளவு இல்லை. தாம் வாழும் சூழலில் குறைந்த செலவில் சிறந்த கல்வியைப் பெற்றுக்கொள்வதற்கு தேவையான வசதி – வாய்ப்புக்களை அமைத்துக் கொடுப்பதே எமது எதிர்பார்ப்பாகும். 

அத்துடன், மூவின மக்கள் வாழும் இந்நாட்டில் இனங்களுக்கிடையில் நல்லிணக்கம் இல்லாத நிலைக்காணப்படுகின்றது. கல்வியின் ஊடாக இன நல்லிணக்க சமூகத்தை கட்டியெழுப்ப முடியும் என நாம் நம்புகின்றோம். அதற்கான சிறந்த அடித்தளத்தை இந்த பல்கலைக்கழகத்தில் நாங்கள் அமைத்துள்ளோம். 
நவீன வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ள இப்பல்கலைக்கழகத்தின் கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் ஜுலை மாதம் ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளோம். குறிப்பிட்ட சில பாடநெறிகளை முதலில் ஆரம்பிக்கவுள்ளதுடன் அதற்கான விண்ணப்பங்கள் வெகுவிரைவில் கோரவுள்ளோம்.  

கேள்வி:- ‘கல்வி’ என்பது வியாபாரமாக இன்று மாறியுள்ளதாக கூறப்படுகின்றது. இந்நிலையில் தனியார் பல்கலைக்கழகமொன்றை ஆரம்பித்துள்ள நீங்கள் இதனை எவ்வாறு பார்க்கிறீர்கள்?

பதில்:- கல்வி வியாபாரமாக மாறிவருகின்றது என்று கூறுவது தனியார்மயப்படுத்தலை விரும்பாதவர்கள்.  ஏனைய பல்கலைக்கழகங்களின் செயற்பாடுகளுக்கும் எமக்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளன. மட்டக்களப்பு பல்கலைக்கழகமானது இலாபம் ஈட்டும் நோக்கத்தில் முதலீடு செய்யப்பட்ட வியாபாரம் கிடையாது. சிறந்த தரமான கல்வியை வழங்க வேண்டும் - அது ஏழை பணக்காரன் என்ற வேறுபாடுகளுக்கு அப்பால் அனைவருக்கும் சென்றடைய வேண்டும் என்பதற்காக ஒரு தொண்டாகவே இத்திட்டத்தை நாங்கள் ஆரம்பித்தோம்.  
அதன் அடிப்படையில் உயர்கல்வியை தொடர முடியாதுள்ள பின்தங்கிய மாணவர்களை உள்வாங்கும் நோக்குடன் பிரதான நகரங்களுக்கு அப்பால் ரிதிதென்னை, புனானை பிரதேசத்தில் இப்பல்கலைக்கழத்தை அமைத்துள்ளோம். கல்விக்கான சிறந்த சூழல் அங்குள்ளது.
சகல இன மாணவர்களையும் இப்பல்கலைக்கழகத்துக்கு உள்வாங்குவோம். வடக்கு, கிழக்கு வெளியே பொலன்னறுவை, அநுராதபுரம், பதுளை, மொனராகலை போன்ற பகுதிகளில் இருந்து அதிகளவான மாணவர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கின்றோம். 
  
கேள்வி:- இப்பல்கலைக்கழகத்துக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன. இனவாத அடிப்படையில் பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. இவ்வாறான சவால்களை எதிர்காலத்தில் எவ்வாறு எதிர்கொள்வீர்கள்? 

பதில்:- மட்டக்களப்பு பல்கலைக்கழக நிர்மாணப்பணிகள் ஆரம்பிக்கப்பட்ட நாள் முதல் இனவாத அடிப்படையிலான கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. நாங்கள் இதனை பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை. அவ்வப்போது அவற்றுக்கான பதில்களை ஊடகங்கள் வாயிலாக வழங்கியுள்ள போதிலும், இந்த பல்கலைக்கழகத்தின் கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிப்பதன் ஊடாக சகல தரப்புக்கும் தெளிவான பதிலை வழங்குவதே எமது அவாவாகும். 
அதாவது, இது முஸ்லிம்களுக்கு மாத்திரம் ~ரீஆ கற்பிப்பதற்காக அமைக்கப்படும் பல்கலைக்கழகம் என இனவாத அடிப்படையில் கூறுகின்றனர். நாங்கள் எமது பல்கலைக்கழக செயற்பாடுகளை ஆரம்பித்தால் நாங்கள் சகல இன மக்களையும் உள்வாங்குவோம் - பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ள பாடநெறிகளையே போதிப்போம். இனவாத சந்தேகங்களுக்கு இதனை விட சிறந்த பதிலை வழங்க முடியாது.
இவ்வாறான பாரிய திட்டமொன்றை முன்னெடுக்கும் போது அதனை சீர்குழைப்பதற்கு திட்டமிட்ட ரீதியில்  குற்றச்சாட்டுக்களை முன்வைப்பது சாதாரணமான விடயம். 

கேள்வி:- இப்பல்கலைக்கழகத்தில் எவ்வாறான பாடத்திட்டங்கள் உள்ளன? மாணவவர்களுக்கு எவ்வாறான வசதிகளை செய்து கொடுத்துள்ளது?

பதில்:- மட்டக்களப்பு பல்கலைக்கழகமானது சர்வதேச தரம்வாய்ந்த அதி நவீன வசதிகளைக் கொண்டது. ஆறு பீடங்களைக் கொண்டதாக இது திட்டமிடப்பட்டுள்ளது. எனினும், எதிர்வரும் ஜுலை மாதம் மூன்று பாடத்திட்டங்களுடனேயே பல்கலைக்கழக கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளது.

Bachelor of Law, Bachelor of Computer Science and information technology, Business Management ஆகிய பாடங்கள் முதலில் ஆரம்பிக்கப்பட்டாலும் எதிர்காலத்தில் Bachelor of Science in Civil Engineering , Bachelor of Science in Electrical & Electronic Engineering , Bachelor of Science in Mechanical Engineering, Mechatronics and Robotics Engineering, Bachelor of Science in Quantity Surveying, Bachelor of Science in Agriculture Technology and Resource Management போன்ற பல முக்கிய பாடநெறிகளையும் ஆரம்பிக்கவுள்ளோம்.

நாங்கள் இந்த பாடநெறிகளை சர்வதேச தரம்வாய்ந்த முன்னணி பல்கலைக்கழகங்களுடன் கைகோர்த்து முன்னெடுக்கவுள்ளோம். இங்கிலாந்தின் Buckingham university , Nottingham Trent University மற்றும் University of Kualalumpur, Universiti Teknologi Mara, sultan Azlan shah university, Management and Science University, Erican college, Megatech international college உள்ளிட்ட மலேசியாவின் முன்னணி பல்கலைக்கழங்கள் பலவற்றுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்துள்ளோம். குறிப்பாக Mechatronics and Robotics Engineering கற்கை நெறி தொடர்பில் ஜப்பானின்  Nagoya University உடன் விசேட ஒப்பந்தம் ஒன்றையும் செய்துள்ளோம்.

இதன் மூலமாக தரம்வாய்ந்த விரிவுரையாளர்கள்; கற்றல் நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதுடன்,  வெளிநாடுகளில் மேற்படிப்பை தொடர விரும்பும் மாணவர்களுக்கு புலமைப்பரிசில்களை வழங்கி அதற்கான வாய்ப்புக்களையும் வழங்கவுள்ளோம்.

இதேவேளை, உள்நாட்டில் ஸ்ரீலங்கா டெலிகொம் நிறுவனத்தின் Sri Lanka Technological Campus (SLTC) உடனும் நாங்கள் கைகோர்த்துள்ளோம். அத்துடன் கொழும்பு பல்கலைக்கழகத்துடன் இணைந்து BIT Degree நடத்துவது தொடர்பிலும் எமக்கிடையில் புரிந்துணர்வு எட்டப்பட்டுள்ளது.
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் வரையரைகளை பூர்த்தி செய்த மாணவர்கள் மாத்திரமே எமது பல்கலைக்கழகத்துக்கு உள்வாங்கப்படுவார்கள். அவர்களுக்கு தேவையான சகல வளங்களும் எமது பல்கலைக்கழக வளாகத்துக்குள் கிடைக்கும். 

கேள்வி:- பல்கலைக்கழகத்தில் எவ்வாறான வளங்கள் உள்ளன? பாடநெறியொன்றை தொடர்வதற்கான கட்டண விபரங்களை குறிப்பிட முடியுமா? 

பதில்:- பாடநெறிகளுக்கான கட்டண விபரங்கள் அது சார்ந்த பாடநெறிகளை மையமாக வைத்தே தீர்மானிக்கப்படுகின்றது. நான் ஆரம்பத்தில் கூறியது போன்று இதனை நாங்கள் இலாப நோக்கத்துக்காக செய்யும் வியாபாரம் கிடையாது. தொண்டாகவே செய்கின்றோம். ஆகையினால் நாங்கள் பல்கலைக்கழகத்தை இயக்குவதற்கு தேவையான செலவீனங்களை பூர்த்தி செய்வதற்கும் விரிவுரையாளர்களுக்கான கொடுப்பணவுகளை வழங்குவதற்குமே மாணவர்களிடமிருந்து கண்டனங்களை அறவிடுவோம். ஆகையினால் ஏனைய பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளுடன் ஒப்பிடும் போது நாங்கள் மிக மிக குறைவான கண்டனத்தையே அறவிடுவோம். பல்கலைக்கழகத்துக்கான கட்டணத்தை செலுத்த முடியாத மாணவர்களுக்கு கடன் திட்டமொன்றையும் நாங்கள் அறிமுகப்படுத்தவுள்ளோம்.

எமது நோக்கம் சிறந்த தரமான கல்வியை வழங்குவதே ஆகையினால் கட்டணம் என்பதை நாங்கள் பெரிய விடயமாக கருதவில்லை. அதிக மாணவர்களை புலமைப்பரிசில் அடிப்படையிலும் உள்வாங்கவுள்ளோம். தரமான கல்வியே எமது நோக்கம்.

இதேவேளை பல்கலைக்கழகம் அமையப்பெற்றுள்ள சூழலே கல்விக்கான சிறந்த இடமாகும். பல்கலைக்கழக நிர்மாணப் பணிகள் முழுமையாக பூர்த்தி செய்யப்படவில்லை. இதுவரை நான்கு கணணி கூடங்கள், 21 lecture halls, smart classrooms, 2 Auditoriums, நவீன வசதிகளுடன் கூடி வாசிகசாலை, தங்குமிடம், உடற்பயிற்சி கூடம் உள்ளிட்ட பல முக்கிய தேவைகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன.    

கேள்வி:- உங்கள் தந்தை ஒரு அரசியல்வாதி தற்போது ஆளுநராக உள்ளார். நீங்கள் எப்போது அரசியலுக்கு வருவீர்கள்?

பதில்:- எனது தந்தையின் தூர நோக்குப்பார்வை, கனவு தான் இந்த பல்கலைக்கழகம். எனக்கு அரசியலுக்கு வருவதில் அவ்வளவு பெரிய விருப்பம் கிடையாது. இவ்வளவு காலம் நான் அவ்வாறான நோக்கத்தில் எதுவும் செய்யவில்லை. எனது நூறு வீத உழைப்பு எனது தந்தையின் கனவான இந்த பல்கலைக்கழகத்தை சிறந்த முறையில் இயக்குவதாகும். இந்த பல்கலைக்கழத்தை எவ்வாறு செய்ய வேண்டும் என எனது தந்தை கனவு கண்டுள்ளாரோ அதனை விட சிறப்பாக முன்னெடுக்க வேண்டும் என்பதே எனது தற்போதைய இலக்காகும். 

கேள்வி:- இறுதியாக மாணவர்களுக்கு என்ன கூற விரும்புகிறீர்கள்? 

பதில்:- இந்த பல்கலைக்கழகம் முஸ்லிம்களுக்கு மட்டும் என்று பிரச்சாரம் செய்யப்படுகின்றது. ஆனால்  சகல இன மக்களுக்குமான ஒரு பல்கலையாகவே இது இயங்கும். மாணவர்களுக்கு என்ன தேவையே அதனை வழங்கு வேண்டும் என்பதற்காக மிகவும் சிறப்பாக இதனை நாங்கள் வடிவமைத்துள்ளோம்.

கல்வி கற்ற மாணவர் சமுதாயம் உருவாக வேண்டுமானால் மாணவர்கள் கல்வியை இடைநடுவில் விட்டுவிடாது தொடர வேண்டும். பணம் இல்லாதவர்களும் எம்மிடம் வரலாம் அவர்களுக்கு நாங்கள் புலமைப்பரிசில் வழங்கி தமது உயர்கல்வியை தொடர ஒத்துழைப்போம். நாங்கள் முதலாம் வருடத்தில் மாணவர்களுக்கு இலவசமாக தங்குமிட வசதிகளை செய்து கொடுக்கவுள்ளோம்.  எமக்கு சிறந்த கல்வி கற்கக்கூடிய மாணவர்களே தேவை. அவர்களுக்கான வழிகாட்டல்களை நாங்கள் வழங்குவோம்.


நேர்காணல்:- ஆர்.எஸ்.மஹி


No comments