இம்றான் மஹ்றூப் எம்.பியின் பாராளுமன்ற உரைக்கு மீராவோடை வைத்தியசாலை அபிவிருத்திக் குழுவினர் பதிலடி


எம்.ரீ. ஹைதர் அலி

நேற்று 2019.03.27ஆம் திகதி பாராளுமன்றத்தில் நடைபெற்ற சுகாதார அமைச்சின் நிதியொதுக்கீட்டு விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் திருகோணமலை மாவட்டத்திலுள்ள வைத்தியசாலைகளின் தேவைப்பாடுகளுடன் இணைந்ததாக அண்மையில் சுகாதார அமைச்சினால் வைத்தியசாலைகளுக்கு வழங்கப்பட்ட அம்பியுலன்ஸ் வண்டி தொடர்பாகவும் சபையில் உரையாற்றி இருந்தார்.

அதிலும் குறிப்பாக, அவர் மட்டக்களப்பு மாவட்டத்தில் அமைந்துள்ள மீராவோடை பிரதேச வைத்தியசாலைக்கு வழங்கப்பட்ட அம்பியுலன்ஸ் வண்டி தொடர்பில் சுகாதார இராஜாங்க அமைச்சர் பைசல் காசிம் மீது குற்றச்சாட்டினை முன்வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இப்பிரதேசத்தின் மீதும், இவ்வைத்தியசாலையின் மீதும் இப்பிரதேச மக்களுக்குரிய சிகிச்சைகளை திறம்பட மேற்கொள்ள வேண்டும் எனும் நோக்கிலும் செயற்பட்டு வரும் மீராவோடை வைத்தியசாலை அபிவிருத்திக் குழுவினர் என்ற அடிப்படையில், இதன் உண்மை நிலை தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினருக்கும், பொது மக்களுக்கும் தெளிவுபடுத்த வேண்டிய தார்மீகப் பொறுப்பு எமக்குள்ளது.

குறித்த மீராவோடை வைத்தியசாலையில் ஆண், பெண் நோயாளர் விடுதி மற்றும் மகப்பேற்று விடுதி, சிறுவர் விடுதி, வெளிநோயாளர் பிரிவு, பற்சிகிச்சைப் பிரிவு, மருந்து கட்டும் அறை, அம்புலன்ஸ் மூலம் நோயாளிகளை மாற்றுதல் என 24 மணி நேர சேவை இடம்பெற்று வருகின்றது.

நாளாந்தம் சுமார் 300க்கும் மேற்பட்டோர் வெளிநோயாளர் பிரிவிலும், ஞாயிற்றுக்கிழமை தவிர்ந்த ஏனைய ஆறு நாட்களும் நாளாந்தம் பற்சிகிச்சை இடம்பெறுவதுடன், மாதத்தில் 8 தினங்கள் உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு, ஆஸ்த்மா, தொற்றா நோய்களுக்கான பரிசோதனைகளும் நடைபெறுகின்றன. இதற்காக சுமார் 1400க்கும் மேற்பட்ட நோயாளர்கள் இவ்வைத்தியசாலையில் பதிவு செய்யப்பட்டுள்ளனர்.

37 வருட கால வரலாற்றைக் கொண்ட இவ்வைத்தியசாலை மீராவோடை, பதுரியா - மாஞ்சோலை, ஓட்டமாவடி, வாழைச்சேனை, செம்மண்ணோடை, மாவடிச்சேனை, கண்ணகிபுரம், கறுவாக்கேணி, கிண்ணியடி, மீராவோடை தமிழ், பிரம்படித்தீவு, பொண்டுகச்சேனை, ஊத்துச்சேனை, வடமுனை, றிதிதென்னை, ஜெயந்தியாய, வாகனேரி மற்றும் காரமுனை உட்பட பல கிராமங்களைச் சேர்ந்த முஸ்லிம், தமிழ் மக்கள் பயனடைவதுடன், இவ்வைத்தியசாலையினூடாக சிறந்த சேவையினையும் பெற்று வருகின்றனர்.

இந்நிலையில், நாடு பூராகவும் வைத்தியசாலைகளுக்கு வழங்கப்பட்ட 152 அம்பியுலன்ஸ் வண்டிகளில் பாராளுமன்ற உறுப்பினர் இம்றான் மஹ்ரூப் அவர்களுக்கு மீராவோடை வைத்தியசாலைக்கு சுகாதார இராஜாங்க அமைச்சர் பைசல் காசிம் அவர்களால் வழங்கப்பட்ட வண்டி மாத்திரம் தான் கண்ணுக்கு தென்பட்டதா? அரசியல் வங்குரோத்துக்காக நீங்கள் பாராளுமன்றத்தில் எதை வேண்டுமானாலும் பேசலாமா? இவ்வாறு ஒரு மக்கள் பிரதிநிதி பாராளுமன்றத்தில் உரையாற்றுவதை வன்மையாகக் கண்டிக்கின்றோம்.

நாட்டின் எந்தப்பகுதி மக்களாயினும் அவர்களுக்கு உரிய மருத்துவ சேவை சென்றடைவதை பாராளுமன்றில் அங்கம் வகிக்கும் மக்கள் பிரதிநிதிகள் ஊர்ஜிதப்படுத்த வேண்டுமேயொழிய எமது வைத்தியசாலைக்கு வழங்கப்பட்ட அம்பியுலான்ஸ் வண்டி தொடர்பில் காழ்ப்புணர்ச்சியுடன் பேசுவதை தவிர்ந்திருக்க வேண்டும். இது இப்பிரதேச ஏழை மக்களின் உயிரைக்காக்கவே தரப்பட்டுள்ளது.

இவ்வைத்தியசாலை 1982ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு, கடந்த மாதம் புதிய அம்பியுலன்ஸ் வண்டி கிடைக்கும் வரை சுமார் 37 வருட காலமாக ஆரம்பத்தில் வழங்கப்பட்ட அம்பிலண்ஸ் வண்டியைக் கொண்டே நோயாளிகளை ஏற்றுவதற்குப் பயன்படுத்தப்பட்டு வந்தது.

பழுதடைந்த நிலையில் காணப்பட்ட அம்பியுலன்ஸ் வண்டியானது, நோயாளிகளை ஏற்றிச்செல்லும் போது, இடைவழியில் பழுதடைந்த சந்தர்ப்பங்களுமுண்டு. அவ்வாறான நிலையில், கடந்த இரண்டு வருட காலமாக இவ்வைத்தியசாலைக்கு முற்றுமுழுதாக அம்பியுலன்ஸ் வண்டி இல்லாத நிலையும் காணப்பட்டது.

இந்த இரண்டு வருட காலத்தில் நோயாளிகளை மீராவோடை வைத்தியசாலையிலிருந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு இடமாற்றுவதற்கு சந்திவெளி அல்லது வாழைச்சேனை வைத்தியசாலைகளின் அம்பியுலண்ஸ் வண்டியைக் காத்திருக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலை காணப்பட்டது.

சில நேரங்களில் அம்பியுலண்ஸ் வண்டிக்காக பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலையும், பல மணி நேரம் காத்திருந்த பின்னர் அம்பியுலன்ஸ் வண்டி மறுக்கப்பட்ட சந்தர்ப்பங்களும், அதனால் நோயாளிகளும் வைத்தியசாலை நிருவாகமும் அபிவிருத்திக் குழுவும் பல்வேறு அசெளகரியங்களை எதிர்கொண்ட சந்தர்ப்பங்களுமுண்டு.

இதற்கு முன்னர் மீராவோடை வைத்தியசாலையில் காணப்பட்ட அம்பியுலன்ஸ் வண்டி வைத்தியசாலையில் தரித்து நின்றதை விட வாகனம் திருத்தும் இடங்களில் தரித்து நின்றது தான் அதிகம். அதுதான் உண்மையும் கூட. இது விடயமாக தாங்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளைத் தொடர்பு கொண்டால் தகவல்களைப் பெற்றுக்கொள்ள முடியுமென வைத்தியசாலையின் அபிவிருத்திக் குழு என்ற வகையில் தங்களிடம் வினயமாகக் கேட்டுக்கொள்கின்றோம்.

ஒரு குற்றச்சாட்டையோ அல்லது ஒரு விடயத்தையோ உதாரணம் காட்டிப்பேசுவதாக இருந்தாலும், அதன் உண்மைத்தன்மை, மக்கள் நலன்களை தீர விசாரித்து முன்வைக்க வேண்டும். ஒலிவாங்கி கிடைத்து விட்டது அல்லது நானும் பாராளுமன்றத்தில் உரையாற்றினேன் என்று சமூக, இலத்திரனியல் ஊடகங்களில் பெயர் வர வேண்டுமென்பதற்காக மக்களின் உயிர் சார்ந்த விடயங்கள் பாதிக்கப்படும் வகையில் நடந்து கொள்ளாதீர்கள்.

நீங்கள் திருமலையில் குறிப்பிட்டு பேசிய வைத்தியசாலைகளில் ஒரு அம்பியுலன்ஸ் வண்டியாவது காணப்படுகின்றது, ஆனால், புதிய அம்பியுலன்ஸ் வண்டி பெற்றுக்கொள்ளும் வரை மீராவோடை வைத்தியசாலைக்கு அம்பியுலன்ஸ் வண்டி இல்லாமல்தான் இருந்தது என்ற உண்மையையும் அறிந்து கொள்ளுங்கள்.

அதனையும் நாங்கள் படம் காட்டுவதற்கும், எங்கள் தேவைகளுக்கு பயன்படுத்துவதற்கும் பெறவில்லை. உயிர்களைக் காப்பாற்றவே பெற்றுள்ளோம். நிருவாக ரீதியாக அதிகாரிகள் மட்டத்தில் இவ்வைத்தியசாலைக்கு அம்பியுலன்ஸ் வண்டி கட்டாயம் வழங்கப்பட வேண்டும், அதற்கான தேவைப்பாடு இங்கு காணப்படுகின்றது என்ற அடிப்படையில் அபிவிருத்திக் குழுவும் வைத்திய அதிகாரியும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு, அதிகாரிகளின் எழுத்து மூலமான ஆவணங்களின் பின்னர் தான் அதனை ஆராய்ந்து சுகாதார இராஜாங்க அமைச்சர் இவ்வைத்தியசாலைக்கு அம்பியுலன்ஸ் வண்டியைப் பெற்றுத்தந்துள்ளார்.

மீராவோடை வைத்தியசாலைக்கு வழங்கிய அம்பியுலன்ஸ் வண்டியை ஏன் எங்கள் மாவட்டத்திலுள்ள வைத்தியசாலைக்கு தர முடியவில்லையென்று நீங்கள் எழுப்பும் கேள்வி மனிதாபிமானமற்றது. நீங்கள் குறிப்பிடும் மீராவோடை வைத்தியசாலை அரசியல்வாதிகளால் சரியாக கவனிக்கப்பட்டிருக்குமானால் பல காலங்களுக்கு முன்னர் தரமுயர்த்தப்பட்டு சகல வசதிகளுடன் கூடிய சேவைகளை வழங்குமளவுக்கு வளர்ந்திருக்கும் என்பது நிதர்சனமான உண்மையாகும். 

நீங்கள் குறிப்பிட்டது போன்று உங்கள் மாவட்டத்திலுள்ள வைத்தியசாலைகளுக்கு தேவைப்பாடுகள் இருப்பதை நாம் ஏற்றுக்கொள்கின்றோம். அதை விடவும் கூடுதல் தேவைப்பாடுகளுடன் பின்தங்கியதாகவே எங்கள் வைத்தியசாலை காணப்படுகின்றது.

அத்துடன், நீங்கள் முன்வைத்த குற்றச்சாட்டை சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன மறுதலித்துபேசியதுடன், கிண்ணியா வைத்தியசாலையில் வைத்தியர்கள் இல்லையென்ற கூற்றை அமைச்சரே ஆதாரத்துடன் உங்கள் வைத்தியசாலையில் 34 வைத்தியர்கள் கடமையாற்றுவதாகவும், வைத்தியசாலையின் ஆளணி வெற்றிடத்தில் 28 வைத்தியர்கள் கடமையாற்றுவதற்கே அனுமதியுள்ளதாவும் தெரிவிக்கின்றார். அவ்வாறு பார்த்தால் உங்கள் வைத்தியசாலையில் மேலதிகமாக 6 வைத்தியர்கள் காணப்படுகின்றார்கள்.

ஆனால், எமது மீராவோடை வைத்திசாலையின் ஆளணிக்கேற்ப 4 வைத்தியர்கள் கடமையாற்ற வேண்டும். தற்போது 3 வைத்தியர்களே கடமையாற்றுகின்றனர். அதுவும், கடந்த மாதம் வரை இரு வைத்தியர்களே கடமையாற்றினர். புதிய நியமனத்தின் போதே ஒருவர் நியமனம் பெற்றார்.

ஆகவே, தங்களின் வைத்தியசாலையில் ஆளணிக்கு மேலதிகமாகவுள்ள வைத்தியர்களை உங்கள் மாவட்டத்திலே, உங்களுக்கு வாக்களித்த மக்களுக்கு சேவை செய்யும் நோக்கில் மிக நீண்ட காலமாக நிலவி வருகின்ற வைத்தியர்கள் பற்றாக்குறையாக உள்ள வைத்தியசாலைகளுக்கு நியமிக்க நடவடிக்கை எடுப்பீர்களா?

குறிப்பாக, புல்மோட்டை தள வைத்தியசாலையை குறிப்பிடலாம். ஆகவே, கிண்ணியா வைத்தியசாலையில் மேலதிகமாகவுள்ள வைத்தியர்களை இடமாற்றம் செய்து ஏனைய மக்களின் சுகாதார தேவையினை நிவர்த்தி செய்ய உங்களால் நடவடிக்கை மேற்கொள்ள முடியுமா?

அவ்வாறு செய்தால், உங்களின் எதிர்கால அரசியல் வாக்கு வங்கிக்கும் வித்திட்டதாக அமையும். எதனையும் அரசியல் கண் கொண்டோ அல்லது குரோதத்துடனோ பார்க்காமல், மக்களின் நன்மைக்கும் சிந்தியுங்கள். ஏனைய மாவட்டத்திலுள்ளவர்களும் தான் சார்ந்த சமூகத்தினரே என்ற பார்வையை பார்க்கப் பழகிக் கொள்ளுங்கள். அத்துடன், ஏனைய சமூகங்களும் பாதிக்காத வகையிலும் சில விடயங்களை உற்று நோக்கி உரையாற்ற வேண்டும்.

மீராவோடை வைத்தியசாலை கடந்த 37 வருட காலமாக புறக்கணிக்கப்பட்டு வந்த நிலையில், சில மாத காலமாகத்தான் இவ்வைத்தியசாலை ஒரு வைத்திய அதிகாரி தலைமையிலான அபிவிருத்திக் குழுவின் முயற்சியினால் ஆளணி மற்றும் வளப்பற்றாக்குறைகள் நிவர்த்திக்கப்பட்டு வருகின்றது. இவ்வைத்தியசாலையின் பொறுப்பதிகாரி மற்றும் அபிவிருத்திக் குழுவினரின் தொடர் முயற்சியும், பல வருட கால உழைப்பும், ஓட்டமும் தான் அவைகள் நிவர்த்திக்கப்பட காரணமாகும். அதுவும் முற்றுமுழுதாக கிடைத்து விட்டதாக குறிப்பிட முடியாது.

இதுவரை எமது வைத்தியசாலையிலுள்ள ஆளணி, வளப்பற்றாக்குறைக்கு மேலதிகமாக நாங்கள் எதனையும் கேட்டுப்பெறவுமில்லை. அவ்வாறு நாங்கள் முயற்சிகளை மேற்கொண்டாலும், சம்பந்தப்பட்டோர் தருவதற்கு உடன்படுவதும் கிடையாது.

ஆளணி, வளப்பற்றாக்குறைக்கேற்பவே கேட்கின்றோம். அதனையும் சண்டையிட்டு, பல விமர்சனங்களை எதிர்கொண்டுதான் பெற்றுக் கொள்கின்றோம். நீங்கள் சொல்வது போன்று சுகாதார இராஜாங்க அமைச்சர் பைசல் காசிம் தன் கட்சி சார்ந்த பிரதேசங்களுக்குத்தான் சேவை செய்கின்றார் என்ற குற்றச்சாட்டு மிகவும் அபாண்டமானது, .

எங்கள் வைத்தியசாலையில் நாங்கள் ஒரு ஆளணியையோ அல்லது வளத்தினையோ பெற்றுக்கொள்வதற்காக பல அதிகாரிகளைச் சந்திக்கின்றோம். தொடர் முயற்சிகளை மேற்கொள்கின்றோம். பல கோரிக்கைக் கடிதங்களை அனுப்புகின்றோம் என்பதெல்லாம் உங்களுக்குத் தெரிய வாய்ப்பில்லை. வெறுமெனே எதுவிதமான முயற்சிகளைச் செய்யாமல் ஒலிவாங்கி கிடைத்து விட்டதென்பதற்காக விடும் வெறும் அறிக்கைகளினால் மாத்திரம் எதனையும் சாதித்து விட முடியாது.

அத்தோடு, சீ தரத்திலுள்ள மீராவோடை கிராமிய வைத்தியசாலை என தங்கள் உரையில் குறிப்பிட்டிருந்தீர்கள் ஆனால் இவ்வைத்தியசாலை பீ தரத்திலுள்ள பிரதேச வைத்தியசாலையாகும். ஆகவே, இனி வருங்காலங்களிலாவது எது விடயமாக பேசுவதாக இருந்தாலும், சரியான தரவுகளைப் பெற்று, ஆதாரத்துடன் உரையாற்றுங்கள். அத்துடன், எந்தவொரு சமூகத்தையும் பிரதேசத்தையும் பிரித்து நடக்காதீர்கள் என கேட்டுக்கொள்கிறோம்.

அபிவிருத்திக் குழு
மீராவோடை பிரதேச வைத்தியசாலை

No comments