மீராவோடை வைத்தியசாலையினை தரமுயர்த்தி அதன் தேவைப்பாடுகளை நிவர்த்தி செய்ய ஆளுநர் ஹிஸ்புல்லாஹ் துரித நடவடிக்கைமட்டக்களப்பு மாவட்டத்தின், மீராவோடை பிரதேச வைத்தியசாலை அபிவிருத்திக் குழுவின் வேண்கோளுக்கமைவாக ஸ்ரீலங்கா சதந்திரக் கட்சியின் கல்குடாத் தொகுதி அமைப்பாளரும், கிழக்கு மாகாண வீதிப் போக்குவரத்து அதிகார சபையின் பணிப்பாளருமான அஷ்ஷேக். எம்.எம்.எஸ். ஹாறூன் (ஸஹ்வி) இன் அழைப்பின் பேரில் கிழக்கு மாகாண ஆளுநர் கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் 2019.02.21ஆம் திகதி - வியாழக்கிழமை மீராவோடை பிரதேச வைத்தியசாலைக்கு விஜயம் ஒன்றினை மேற்கொண்டார்.

வைத்திய பொறுப்பதிகாரி எச்.எம்.எம். முஸ்தபா அவர்களின் தலைமையில் வைத்தியசாலை அபிவிருத்திக் குழுவினரால் இவ்வைத்தியசாலையில் நிலவும் ஆளணி மற்றும் வளப்பற்றாக்குறைகள் தொடர்பாக கிழக்கு மாகாண ஆளுநர் கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்வுக்கு விரிவாக விளக்கமளிக்கப்பட்டதுடன், அதற்கான உடனடித் தீர்வுகளையும் ஆளுநர் பெற்றுக்கொடுத்தார்.

அந்த வகையில் வைத்திய பொறுப்பதிகாாி மற்றும் வைத்தியசாலை அபிவிருத்திக் குழுவினரால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளான.

முகாமைத்துவ உதவியாளர் ஒருவரை நியமித்தல், சிற்றூழியர்கள் தேவைப்பாட்டினை நிவர்த்தி செய்தல், பகல் நேர பாதுகாப்பு ஊழியர் (Security) ஒருவரை நியமித்தல், சுகாதார சுத்திகரிப்பு (Hospital Cleaners) ஊழியர்களை நியமித்தல், மருத்துவ ஆய்வு கூட தொழிநுட்பவியலாளர் (MLT) ஒருவரை நியமித்தல், வைத்தியர்கள் தேவைப்பாட்டினை நிவர்த்தி செய்தல் மற்றும் வைத்தியசாலையினை தரமுயர்த்தி தரக்கோரல் போன்ற ஏழு அம்ச கோரிக்கைகளும், வைத்தியசாலையினை தரமுயர்த்துவதற்கான ஆவணங்களும் வைத்திய பொறுப்பதிகாரி மற்றும் வைத்தியசாலை அபிவிருத்திக் குழுவினரால் ஆளுநரிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.

அதன் தொடரில், முதலாவதாக, வைத்தியசாலையில் முகாமைத்துவ உதவியாளர் ஒருவர் இல்லாத நிலையில் வைத்தியசாலையின் நிருவாக ரீதியான முழு செயற்பாடுகளும், முடக்கப்படுவதாகவும், குறிப்பாக, வைத்தியசாலையின் நாளாந்த தரவுகளை பதிவிடல், காகித தேவைப்பாடு, ஊழியர்களின் சம்பளம் மற்றும் விடுமுறை போன்ற விடயங்களை செய்து முடிக்க முடியாத நிலை காணப்படுவதாக ஆளுநரிடம் சுட்டிக்காட்டப்பட்டது. 

இதற்கு பதிலளித்த ஆளுநர் முகாமைத்துவ உதவியாளர் அல்லது அபிவிருத்தி உத்தியோகத்தர் ஒருவரை மிக விரைவில் நியமிக்க நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சுகாதார அமைச்சின் செயலாளர், மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மற்றும் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆகியோருக்கு பணிப்புரை விடுத்தார்.

இரண்டாவதாக, வைத்தியசாலையில் ஆண் நோயாளர் விடுதி, பெண் நோயாளர் விடுதி, மகப்பேற்று மருத்துவ விடுதி, சிறுவர் விடுதி, வெளி நோயாளர் பிரிவு, பற்சிகிச்சை பிரிவு, மருந்து கட்டும் அறை, சமயலறை, அம்புலன்ஸ் மூலம் நோயாளிகளை மாற்றுதல் ஆகிய 24 மணி நேர கடமைகளின் பொருட்டு சிற்றூழியர்களின் தேவைப்பாடு காணப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டது. 

இதற்கு பதிலளித்த ஆளுநர் சிற்றூழியர்களை நியமிக்க நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சுகாதார அமைச்சின் செயலாளர், மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மற்றும் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆகியோருக்கு பணிப்புரை விடுத்தார்.மூன்றாவதாக, பகல் நேர காவலாளிகள் எவரும் நியமிக்கப்படாத நிலையில் வைத்தியசாலை நிருவாகம் பல்வேறுபட்ட பிரச்சினைகளை எதிர்கொண்டு வருவதுடன், பாதுகாப்பற்றச் சூழலும் காணப்படுகின்றது. அத்துடன், நோயாளிகளை பார்வையிட வருபவர்கள் நோயாளிகளை பார்வையிடும் நேரங்கள் தவிர்ந்த ஏனைய நேரங்களிலும் பார்வையிட வருவதனால் வைத்தியசாலை நிருவாகமும், நோயாளிகளும் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். குறிப்பிட்ட நேரம் தவிர்ந்து ஏனைய நேரங்களில் பார்வையிட வரும்போது சில நேரங்களில் நோயாளர்களின் உறவினர்களுக்கும் ஊழியர்களுக்கும் இடையில் பிணக்குகளும் ஏற்படுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டது. 

இதற்கு பதிலளித்த ஆளுநர் இவ்வாறான வைத்தியசாலைகளுக்கு இரவு நேர காவலாளிகள் மாத்திரமே நியமிக்கப்பட்டுள்ள போதும், தங்களின் கோரிக்கையினை ஏற்று பகல் நேர காவலாளி ஒருவரை நியமிப்பதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்வதாக தெரிவித்தார்.

நான்காவதாக, வைத்தியசாலையில் சிற்றூழியர்களின் பற்றாக்குறை காரணமாக வைத்தியசாலையின் மலசலகூடங்கள் மற்றும் வெளிச்சூழல் என்பன சுத்தப்படுத்தப்படாத நிலை காணப்படுகின்றது. இதனால் வைத்தியசாலையின் வளாகம் குப்பைக்காடாக காணப்படுவதுடன். டெங்கு நுளம்புகள் அதிகம் பரவும் இடமாகவும் மாறி வருவதாகவும் இதனால், வைத்தியசாலையின் சூழல், வைத்திய விடுதி மற்றும் மலசலகூடங்கள் என்பனவற்றை துப்பரவு செய்து சுத்தமாக வைத்திருப்பதற்கு சுகாதார சுத்திகரிப்பு தொழிலாழிகளின் தேவைப்பாடு தொடர்பாக சுட்டிக்காட்டப்பட்டது. 

இதற்கு பதிலளித்த ஆளுநர் சுத்திகரிப்பு தொழிலாழி ஒருவரை மிக அவசரமாக நியமிக்க நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சுகாதார அமைச்சின் செயலாளர், மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மற்றும் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆகியோருக்கு பணிப்புரை விடுத்தார்.ஐந்தாவது விடயமாக, வைத்தியசாலையில் அதிகளவான நோயாளிகள் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் நிலை உள்ளது. அத்துடன் சாதாரண நாட்களிலும் இவ்வைத்தியசாலையில் காய்ச்சல் காரணமாக சிகிச்சை பெறவரும் நோயாளர்கள் அவர்களின் உடல்நலத்திற்கேற்ப வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறுகின்றனர். இவ்வாறான சந்தர்ப்பங்களில் நோயாளிகளின் இரத்த பரிசோதனைகளை மேற்கொள்வதற்கு இவ்வைத்தியசாலையில் மருத்துவ ஆய்வுகூட தொழிநுட்பவியலாளர் ஒருவர் இல்லாத நிலைமை காணப்படுகின்றது. இதனால் நோயாளர்கள் சிரமப்படும் நிலையும், இவர்களுக்கான உடனடி சிகிச்சையினை வழங்க முடியாத நிலையும் காணப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டது. 

இதற்கு பதிலளித்த ஆளுநர் குருதி பரிசோதனைக்காக Auto Analyzer ஒன்றை முதற்கட்டமாக பெற்றுக் கொடுக்குமாறும், அதன் பின்னர் மருத்துவ ஆய்வு கூட தொழிநுட்பவியலாளர் ஒருவரை நியமிப்பதற்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சுகாதார அமைச்சின் செயலாளர், மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மற்றும் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆகியோருக்கு பணிப்புரை விடுத்தார்.

ஆறாவது விடயமாக வைத்தியசாலையில் நெடுங்காலம் தொட்டு இன்றுவரை வைத்தியர்கள் பற்றாக்குறை காணப்படுகின்றது. இங்கு முழுநேர கடமையாற்றும் வைத்தியர்கள் நான்கு பேர் தேவைப்பாடாக உள்ள நிலையில் தற்போது இரு வைத்தியர்கள் மாத்திரமே முழுநேர கடமையாற்றி வருகின்றனர். இவ்விருவரதும் கடமை நேரம் முடிந்ததன் பிற்பாடு வருகின்ற நோயாளர்கள் சில நேரங்களில் திருப்பி அனுப்பப்படும் சந்தர்ப்பங்களில் நோயாளர்களின் உறவினர்களுக்கும் ஊழியர்களுக்கும் இடையில் பிணக்குகளும் ஏற்படுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டது. 

இதற்கு பதிலளித்த ஆளுநர் மத்திய அரசாங்கத்துடன் இணைந்ததாக இதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு இதற்கான தீர்வினை பெற்றுத்தருவதாக தெரிவித்ததுடன், இதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சுகாதார அமைச்சின் செயலாளர், மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மற்றும் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆகியோருக்கு பணிப்புரை விடுத்தார்.

இறுதியாக மேற்படி வைத்தியசாலையானது கிராம எழுச்சித் திட்டத்தின் கீழ் 1982ஆம் ஆண்டு மருத்திய மருந்தகமாக ஆரம்பிக்கப்பட்டு, அதன் பிற்பாடு இப்பிரதேச மக்களின் தேவைக்கும், சனத்தொகை அதிகரிப்பிற்குமைய 2003ஆம் ஆண்டு கிராமிய வைத்தியசாலையாக தரமுயர்த்தப்பட்டு பின்னர் பிரதேச வைத்தியசாலையாக தனது வைத்திய சேவையினை வழங்கி வருகின்றது.

37 வருட கால வரலாற்றைக் கொண்ட இவ்வைத்தியசாலை மீராவோடை, பதுரியா - மாஞ்சோலை, ஓட்டமாவடி, வாழைச்சேனை, செம்மண்ணோடை, மாவடிச்சேனை, கண்ணகிபுரம், கருவாக்கேணி, கிண்ணியடி, மீராவோடை தமிழ், பிரம்படித்தீவு, பொண்டுகச்சேனை, வாகனேரி மற்றும் காரமுனை உட்பட பல கிராமங்களைச் சேர்ந்த முஸ்லிம் மற்றும் தமிழ் இரு இன மக்களுக்குமான வைத்திய சேவையினை வழங்கி வருகின்றது. அந்த வகையில், இவ்வைத்தியசாலையினை தற்போதுள்ள தரத்திலிருந்து மேல் தரத்திற்கு தரமுயர்த்தி தருமாறு சுட்டிக்காட்டப்பட்டது. 

இதற்கு பதிலளித்த ஆளுநர் தங்களின் கோரிக்கைகளையும், வைத்தியசாலையின் செயற்பாடுகளையும் அவதானிக்கும்போது இவ்வைத்தியசாலை தரமுயர்த்தப்பட வேண்டிய தேவைப்பாடு காணப்படுவதாக தெரிவித்ததுடன், அத்துடன், மேற்சொன்ன அனைத்து விடயங்களையும் நிறைவேற்றி இவ்வைத்தியசாலையினை தரமுயர்த்துவதற்குரிய சகல நடவடிக்கைகளையும் உடனடியாக செய்து தனக்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறு கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர், மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மற்றும் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆகியோருக்கு பணிப்புரை விடுத்தார்.

மீராவோடை பிரதேச வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் எச்.எம்.எம். முஸ்தபா தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் எஸ். அன்சார், கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் எஸ். அருள்குமரன், மட்டக்களப்பு மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் திருமதி. கே. நவரெட்ணராஜா, ஸ்ரீலங்கா சதந்திரக் கட்சியின் கல்குடாத் தொகுதி அமைப்பாளர் அஷ்ஷேக். எம்.எம்.எஸ். ஹாறூன் (ஸஹ்வி), ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளர் ஐ.டீ. அஸ்மி, பிரதித் தவிசாளர் யூ.எல். அஹமட் லெப்பை, பிரதேச சபை உறுப்பினர்கள், மீராவோடை மீரா ஜூம்ஆப் பள்ளிவாசல் நிருவாக சபையின் தலைவர் ஏ.எல். அலியார் ஹாஜியார், முன்னாள் வடகிழக்கு மாகாண சபை உறுப்பினர் எஸ்.எல்.எம். ஹனீபா மற்றும் வைத்தியசாலை அபிவிருத்திக் குழுவினர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதன்போது வைத்தியசாலைக்கு வருகை தந்த கிழக்கு மாகாண ஆளுநர் நோயாளர் விடுதிகளை பார்வையிட்டதுடன், நோயாளிகளிடம் உடல்நலமும் விசாரித்தார்.

No comments