முரண்பாட்டில் ஈடுபட்டுள்ள சாராரிடமே மாற்றுத் தீர்வுக்கான ஆலோசனைகளும் இருக்கும் முகாமைத்துவ ஆலோசகர் ஜே. பெனடிக்ற் ஏ.எச்.ஏ. ஹுஸைன்- 

முரண்பாட்டிலும் அதன் பின்னர் மோதலிலும் ஈடுபட்டுள்ள சாராரிடமே தமது முரண்பாடுகளுக்கான மாற்றுத் தீர்வுகளும்  ஆலோசனைகளும் நிறையவே இருக்கும் என முகாமைத்துவ ஆலோசகர் ஜே. பெனடிக்ற் தெரிவித்தார்.

தேசிய சமாதானப் பேரவையின் மட்டக்களப்பு மாவட்ட சர்வமதப் பேரவையினால் ஒழுங்கு செய்யப்பட்ட மோதல் பகுப்பாய்வுக் கருவிகள் பற்றிய பயிற்சி நெறி மட்டக்களப்பு கிறீன் கார்டன் விடுதியில் ஞாயிற்றுக்கிழமை 09.12.2018 இடம்பெற்றது.மட்டக்களப்பு மாவட்ட சர்வமதப் பேரவையின் மாவட்ட இணைப்பாளர் இராசையா மனோகரன் தலைமையில் இடம்பெற்ற இந்தக் கலந்துரையாடலில் மாவட்டத்திலுள்ள சர்வமத சமாதான செயற்பாட்டாளர்கள் கலந்து கொண்டனர்.


அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், முரண்பாட்டுக்கு அல்லது மோதலுக்குள்ளான குடும்பம், குழுவினர்,  அல்லது சமூகம் ஆகியோருக்கிடையில் இணக்கப்பாட்டைத் தோற்றுவிக்க முனைகின்ற தரப்பினர் முரண்பாட்டுக்கு அல்லது மோதலுக்குள்ளான அந்தத் தரப்பினரிடமிருந்தே தீர்வுக்கான யோசனைகளைப் பெறுவதற்கு வழிகாட்ட வேண்டும்.

இது ஒரு சவால் நிறைந்த பணி, ஆனாலும் சவால்களை எதிர்கொண்டு இப்பணியை திறம்பட செய்து முடிப்பதே சமாதான ஆர்வலர்களின் அர்ப்பணிப்பாக இருக்க வேண்டும்.பல கோணங்களில் முரண்பாடுகளுக்கான அல்லது மோதலுக்கான காரணங்கள், விளைவுகள் மனப்பாங்குகள் நடத்தைகள் இருக்கக் கூடும்.

இவற்றைப் பகுப்பாய்வு செய்து முரண்பாட்டுக்கு அல்லது மோதலுக்கு முகங்கொடுத்த சாராருக்கிடையில் மத்தியஸ்தம் வகிக்க வேண்டும்.

முரண்பாட்டின் பின்னர் சாதகமான நிலையை ஏற்படுத்துவற்கு மாற்றுவழிகள் பல உள்ளன.

ஆனால், அது முரண்பாட்டுக்கு அல்லது மோதலுக்கு முகங்கொடு:த்தவர்களிடமிருந்தே இத்தகைய மாற்று யோசனைகளைப் பெற்றுக் கொள்வதற்கு இலகுபடுத்தலைச் செய்ய வேண்டும்.

ஒரு தரப்பார் அல்லது பல தரப்பார் முரண்பாட்டு அல்லது மோதல் சூழ்நிலைகளை அப்படியே தக்கவைத்துக் கொண்டிருக்க சமாதான விரும்பிகளான மற்றவர்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியாது.

அவ்வாறு நிகழுமாக இருந்தால் அழிவுகளே மிஞ்சும். அதனால் எந்தத் தரப்பாருக்கும் விமோசனம் கிட்டப் போவதில்லை.புரிந்துணர்வோடு எல்லாத் தரப்பாருக்கும் 'வெற்றி வெற்றி' என்று கிடைக்கப்பெறும் அடைவே நிரந்தர முரண்பாட்டு அல்லது மோதல் தீர்வுக்கு வழிவகுத்து சமாதானப் பாதையில் அனைவரும் பயமின்றிப் பயணிக்க உதவும்.' என்றார்.

இந்நிகழ்வில் தேசிய சமாதானப் பேரவையின் திட்ட முகாமையாளர் சம்சுதீன் ஷாபி நயாஜ் உட்பட இன்னும் பல அலுவலர்களும் கலந்து கொண்டனர்.

தற்போது தேசிய சமாதானப் பேரவையின் நாடு பூராகவுமுள்ள மாவட்ட சர்வமத சமாதானப் பேரவை அங்கத்தவர்களுக்கு 'இலங்கையில் அனைத்து சமயங்கள், மற்றும் அனைத்து இனங்களுக்கும் இடையிலான கலந்துரையாடல்' நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் மோதல் பகுப்பாய்வுக் கருவிகள் பற்றிய பயிற்சி நெறி இடம்பெற்று வருகின்றது.

No comments