பிறந்த நாள் வீடு மரண வீடாக மாறிய சோகம் பிறந்த நாளுக்காக கேக் வாங்கச் சென்றவர் பிறந்த நாளுக்கு முந்திய தினமே வீதி விபத்தில் சிக்கி மரணம்-ஏ.எச்.ஏ. ஹுஸைன்- 

பிறந்த நாள் வீடு மரண வீடாக மாறிய சோகம் களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவில் இடம்பெற்றுள்ளது.

தனது பிறந்த நாளை சிறப்பாகக் கொண்டாட எண்ணி, வீட்டிற்கு வரும் நண்பர்களுக்கும் உறவினர்களுக்குமாக உபசரிக்கவென கேக் வாங்கச் சென்றவர் பிறந்த நாளுக்கு முந்திய தினத்திலேயே வீதி விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் களுவாஞ்சிக்குடியில் ஞாயிற்றுக்கிழமை 09.12.2018 இரவு இடம்பெற்றுள்ளது.

களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையம் மற்றும் நீதி மன்றத்திற்கு முன்னாலுள்ள வளைவில்  இடம்பெற்ற இந்த விபத்துச் சம்பவத்தில் களுதாவளை வன்னியனார் வீதியைச் சேர்ந்த வேலுப்பிள்ளை தீசன் (வயது 38) என்பவரே உயிரிழந்துள்ளார்.

அவர் செலுத்திய நிலையில் வேகமாக சென்ற அவரது மோட்டார் சைக்கிள் வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதி மருங்கிலிருந்த வடிகான் ஒன்றிற்குள் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியதிலேயே இம்மரணம் சம்பவத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவருடன் கூடவே மோட்டார் சைக்கிளில் பயணித்த அவரது நண்பரான வன்னியனார் வீதியைச் சேர்ந்த கே. ஜெகதீஸ்வரன் (வயது 35) என்பவர் விபத்தில் சிக்கி படுகாயமடைந்த நிலையில் முன்னதாக களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையில் சேர்ப்பிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மரணித்த தீசனது 38வது பிறந்த நாள் திங்கட்கிழமை 10.12.2018 என்றிருந்த நிலையில் தனது பிறந்த நாளை நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் விருந்தளித்துக் கொண்டாடுவதற்காக தீசன் முதல் நாளான ஞாயிற்றுக்கிழமை மாலை கல்முனை நகரத்திற்கு கேக் வாங்கச் சென்று திரும்பும் வேளையிலேயே இந்த விபத்தில் சிக்கி சற்று நேரத்தில் மரணித்ததாக உறவினர்கள் தெரிவித்தனர்.

இச்சம்பவம் பற்றி களுவாஞ்சிக்குடி பொலிஸார் விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.

No comments