இலங்கை நூலக வரலாற்றில் சாதனை படைத்துள்ள வாழைச்சேனை பேத்தாழை பொது நூலகம்
வாழைச்சேனை பேத்தாழை பொது நூலகமானது கிழக்கு மாகாணத்திற்கான முன்னை நாள் முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் அவர்களால் கடந்த 2011.12.10 ஆம் திகதி ஸ்தாபிக்கப்பட்டு தற்போது ஏழு ஆண்டுகள் நிறைவடைந்துள்ளதமையினை சிறப்பித்தும், இவ்வாண்டுக்கான தேசிய வாசிப்பு மாத இறுதி நிகழ்வை கொண்டாடுவதை முன்னிட்டும் இந்நூலகத்திற்கான நூலகக் கொடியும் நூலகக் கீதமும் வெளியிடும் நிகழ்வுடன், தேசிய வாசிப்பு மாத நிகழ்வுகளில் சாதனை படைத்த மாணவர்களுக்கு பரிசில்கள் வழங்கி கெளரவிக்கும் நிகழ்வும்  இன்றைய தினம் பேத்தாழை பொது நூலகத்தில் பிரமாண்டமாக நடைபெற்றது.

தேசிய வாசிப்பு மாதத்தினை ஒட்டி இந்நூலகத்தால் நடாத்தப்பட்ட பாடசாலை மாணவர்களிடையேயான கலை இலக்கியம் சார்பான போட்டிகளில் வெற்றியீட்டியவர்களுக்கான பரிசளிப்பும், பிரதேசத்திலுள்ள கலைஞர்களுக்கான கெளரவிப்பும் பேத்தாழை பொது நூலகப் பொறுப்பாளர், திருமதி.தாரணி தங்கத்துரை தலைமையில் நூலக மேற்தளத்தில் நடைபெற்றது. இதன் போதே இலங்கை நூலக வரலாற்றில் புதிய தடம் பதிக்கும் வகையிலான நூலகக்கொடி அறிமுகமும், நூலகக் கீதம் வெளியீட்டு நிகழ்வும் இடம்பெற்றது.இந்நிகழ்வின் பிரதம அதிதியாக கோறளைப்பற்று பிரதேச சபையின் தவிசாளர் திருமதி ஸோபா ஜெயரஞ்சித், மற்றும் சிறப்பு அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய உள்ளூராட்சி உதவி ஆணையாளர் எஸ்.பிரகாஸ் அவர்களும், கௌரவ அதிதிகளாக,கோறளைப்பற்று பிரதேச சபை செயலாளர் திருமதி பத்மலோஜினி லிங்கேஸ்லரன், கிழக்குப்பல்கலைக்கழக சிரேஷ்ட உதவி நூலகர் எம்.என்.ரவிக்குமார், கோறளைப்பற்று பிரதேச சபை சனசமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் எஸ்.குகநேசன், நூலகர் திருமதி அப்துல் மஜித் ஜெஸ்மி கப்சா, மற்றும் முன்னாள் பேத்தாழை நூலகர் ரி.சரவணபவான், பேத்தாழை பொது நூலக தாபகரின் தாயார் திருமதி கமலா சிவநேசதுரை ஆகியோருடன் எழுத்தாளர் ஆ.மூ.சி.வேலழகன், கவிஞர்.முத்துமாதவன் ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.மேலும் இந்நிகழ்வின் போது பாடசாலை அதிபர்கள், கிராம சேவகர்கள், சமுர்த்தி உத்தியோகத்தர்கள், நூலக உத்தியோகத்தர்கள், முன்பள்ளி ஆசிரியர்கள், சனசமூக நிலைய உறுப்பினர்கள், கிராம அபிவிருத்திச் சங்கத்தினர், விளையாட்டுக் கழகத்தினர், வாசகர் வட்டத்தினர், ஆசிரியர்கள், மாணவர்கள், பொதுமக்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர். 

கணனி மயப்படுத்தலை கொண்ட இந்நூலகமானது தேசிய ரீதியில் மூன்று விருதுகளைப் பெற்றுள்ளதுடன், பல்வேறு சிறப்பம்சங்களை கொண்டியங்குகின்றமயும்  குறிப்பிடத்தக்கது.


No comments