ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செய்யித் அலி சாஹிர் மௌலானா அவர்கள் புதன்கிழமை நாடாளுமன்ற அமர்வின் போது ஆற்றிய உரை...."தலைமை தாங்கும் கௌரவ உறுப்பினர் அவர்களே!
இன்று Dr. நளிந்த ஜயதிஸ்ஸ அவர்களால் கொண்டு வரப்பட்ட ஒத்திவைப்பு பிரேரணையில் உரையாற்றுவதற்கு சந்தர்ப்பம் வழங்கியமைக்காய் நன்றியுடன் ஆரம்பிக்கின்றேன்.

எமது நாட்டின் அரசியலில் ஒக்டோபர் 26ஆம் திகதி ஒரு கரி நாள்- அன்றிலிருந்து ஆரம்பிக்கப்பட்ட அரசியல் நெருக்கடி நாளுக்கு நாள் அதிகரித்து -தான் நியமித்த பிரதமரை ஏற்பதா? இல்லையா? என்பதை பாராளுமன்றம் தீர்ப்பதற்கு முன்னாலேயே சந்தர்ப்பம் வழங்காமல் பாராளுமன்றத்தை மூடிய பெருமையும்- மூடிய பாராளுமன்றத்தை திறக்கும் முன்பே அதை கலைத்த பெருமையும் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களுக்கே உரித்தாகி விட்டது, 
இந்நிலையில் தெய்வாதீனமாக நீதிமன்ற உதவியுடன் பாராளுமன்றம் மீண்டும் கடந்த நவம்பர் 14ஆம் திகதி புதிய பிரதமர் மீதான நம்பிக்கை தொடர்பில் தீர்மானிக்க விளைந்த  போது, பாராளுமன்றத்தை குழப்பி -பெரும்பான்மையை நிரூபிக்க முடியாத இயலாத்தன்மையை வெளிப்படுத்தினார்கள்  தாங்கள்தான் அரசாங்கம் என்று கூறுகின்ற சட்டவிரோதமான அரசாங்கம் என சொல்லப்படுகின்ற இந்த பாராளுமன்ற உறுப்பினர்கள்.
தன் கட்சிக்காரர்கள் குழப்ப- அரசியலமைப்பு சட்டமும் நிலையியற் கட்டளையை நிலைநிறுத்த அனுமதி அளித்த போதும் , நிலையியற் கட்டளையை பின்பற்றாத வாக்கெடுப்பை ஏற்க முடியாது என்று கூறினார் ஜனாதிபதி அவர்கள், இதன்மூலம் ஜனாதிபதி அவர்கள் பாராளுமன்ற சிறப்புரிமையை மதியாத நிலையில் இருக்கின்றார், பாராளுமன்ற அதிகாரங்களை கேள்விக்குட்படுத்தியிருக்கின்றார், அரசியலமைப்பையும் புறக்கணித்து ஒரு எதேச்சதிகாரமான முறையிலே அவரது நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகிறது,

 எனவே இப்படிப்பட்ட ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களுக்கு எதிராக குற்றப்பிரேரணை மாத்திரம் அல்ல குடியுரிமை நீக்கப்படும் பிரேரணையும் நிறைவேற்றப்பட வேண்டும் என இன்று காலை மக்கள் விடுதலை முன்னனியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் அவர்கள் ஆற்றிய உரையும் இங்கு கவனத்திற் கொள்ளப்பட வேண்டி உள்ளது.

நவம்பர் மாதம் 15ஆம் திகதி கட்சிகளை அழைத்து மீண்டும் பெயர் குறித்து வாக்கெடுப்பு நடாத்துங்கள் என்று கூறி அவ்வாறு பெயர் குறித்து வாக்கெடுப்பு நடாத்தி அதன் முடிவுகளை தந்தால் அதனை ஏற்றுக் கொள்வேன் என்றார், இதன் அடிப்படையில் நாங்கள் பாராளுமன்ற மண்டபத்திலே அவ்வாறான ஒரு முயற்சியில் 16ஆம் திகதிய நாடாளுமன்றம் கூடிய போது எமது ஜனநாயகத்தின் ஆலயம் என்று பேணப்படுகின்ற இந்த பாராளுமன்றம் கலவர மண்டபமாக ஆகியது,
கௌரவ சபாநாயகர் அவர்கள் பொலிசார் புடைசூழ உள் நுழைந்து தனது ஆசனத்திலே அமர முடியாமல் எறிகின்ற பொருட்கள் தாக்காமல் இருக்க பொலிசார் கேடயமாகிய சூழலில் அகதி போல் ஒரு ஓரத்தில் இருந்து வாக்கெடுப்பை நடாத்த வேண்டிய ஒரு துர்ப்பாக்கிய சூழலுக்கு எமது பாராளுமன்றம் தள்ளப்பட்டது.

தமது கட்சிக்காரர்கள் மூலமாக பாராளுமன்றத்தில் குழப்பகரமான சூழ்நிலையை உருவாக்கி விட்டு எமது கௌரவ சபாநாயகர் மீது பழி போடவும் முன் வந்தார்கள் , மேலும் ஜனாதிபதியோ மீண்டும் வாக்கெடுப்பை ஏற்றுக் கொள்ள மறுத்து விட்டு மீ்ண்டும் பேச்சுவார்த்தைக்கு அழைத்தார்.
கௌரவ ரணில் விக்ரமசிங்க அவர்களை பிரதமர் ஆக்கமாட்டேன் என்ற தன் சபதத்தில் பிடிவாதமாக இருக்கும் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களின் இந்த எதேச்சதிகார போக்கை அனுமதித்தால் எதிர்காலத்திலே இந்த ஜனாதிபதியோ அல்லது வேறு எந்த ஜனாதிபதியோ அரசியலமைப்பை உதறித்தள்ளி விட்டு இவ்வாறு நடக்க நினைத்தால் நாட்டின் நிலைமைதான் என்ன? எம்மைப்போன்ற சிறுபான்மை மக்களது நிலைமைதான் என்னவாகும் என்று அங்கலாய்க்கின்றோம், 

சட்டவாக்கத்துறைக்கு மீண்டும் பிரேரணையை நிறைவேற்றுங்கள் என்பதும் அதற்கு உடன்பட்டுக்கொண்டு சட்டவாக்கத்துறையை சார்ந்த பாராளுமன்ற உறுப்பினர்களாகிய நாங்கள் பிரேரணையை நிறைவேற்றுவதும் அதனை அவர் மீண்டும் மீண்டும் நிராகரிப்பதும் ஒரு வாடிக்கையாகவும் வேடிக்கையாகவும் மாறி பாராளுமன்றம் அதிகபட்சம் சிறுமைப்படுத்தப்பட்ட இந்த செயலை வன்மையாக கண்டிக்கிறோம்.
இந்த கண்டனம் , பாராளுமன்ற உறுப்பினர்களாகிய எங்களது போராட்டமாக மட்டும் நீங்கள் கருதி விடக்கூடாது, இது நாட்டுக்கான போராட்டம், எதிர்கால சந்ததிக்கான போராட்டம் , நாட்டின் தலைவரே சட்டத்தை கேலிக்கூத்தாக்கியதற்கு எதிரான போராட்டம், பாராளுமன்றத்தை சிறுமைப்படுத்துவதற்கு எதிரான போராட்டம்,

எனவே பெரும்பான்மை எங்கள் பக்கம் உள்ளது என்று வெளிப்படையாகவே நிறுவப்பட்டுள்ளது, இவர்கள் அரசாங்கம் என்றால் கௌரவ உறுப்பினர் அவர்களே நீங்கள் இருக்கின்ற இந்த ஆசனத்திலே இருந்து எங்களை வழிநடாத்துகின்ற இந்த பாராளுமன்றத்தில் - இவர்களிடம் பெரும்பான்மை என சொல்கிறார்களாக இருந்தால் சபாநாயகர் அவர்களை பக்கச்சார்பான சபாநாயகரை நாங்கள் எதிர்க்கிறோம் என்று சொல்லுகின்றார்களாக இருந்தால் அவர்கள் ஏன் இந்த பக்கசார்பான சபாநாயகரை பதவியில் இருக்க அனுமதிக்க வேண்டும், நம்பிக்கையில்லா பிரேரணை மூலம் உடனடியாக நீக்கிவிட்டு ஏன் புதிய சபாநாயகரை நியமிக்க முடியாது? - இவர்கள் அதற்கு தேவையான வாக்குகள் கிடைக்க வக்கில்லாதவர்கள் என்றுதான் கருத வேண்டும்,
எனவே பெரும்பான்மை இல்லாத கூட்டம் தங்களை ஆட்சியாளர்கள் என்று கூறுகின்றது என்றால் இந்த நாட்டிற்கு அரசியலமைப்பு எதற்காக ? அரசியலமைப்பு இல்லாத நாடு என்று பிரகடணப்படுத்தி விட்டு ஆட்சி செய்யலாமே? இதற்குள் இவர்கள் நீதிவேறு பேசுகிறார்கள்,
எனவே தான் நிலையியற் கட்டளையையும்  , அரசியல் அமைப்பையும்  பின்பற்றித்தான் பாராளுமன்ற பிரேரணைகளை நாங்கள் நிறைவேற்றி இருக்கின்றோம், 

225 பாராளுமன்ற உறுப்பினர்களில் எவருக்கும் பிரதமராக வர உரிமை இருக்கிறது, அவர்களுக்கு பெரும்பான்மை இருந்தால் - இன்று கௌரவ ரனில் விக்ரமசிங்க அவர்களுக்கு பெரும்பான்மையை நாங்கள் காட்டி இருக்கிறோம், அவரை பிரதமராக நியமிக்க மாட்டேன் என்று கூற ஜனாதிபதி அவர்களிடம் எந்தவித அதிகாரமும் இல்லை, அவ்வாறு அதிகாரம் இருக்கின்ற சட்டம் என்னது என்றுதான் நாங்கள் கேட்கின்றோம், 

எனவே இன்னும் நீதி உயிருடன்தான் இருக்கிறது என்ற எதிர்பார்ப்பில் எமது மக்கள் இருக்கின்றார்கள், நீதி தேவதை கண்களை திறந்து கொண்டுதான் இருக்கின்றாள்,
சட்டமா அதிபரும் , பிரதம நீதியரசரும் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டவர்களாக இருந்தாலும் சட்டமா அதிபரை தவிர்த்துப்பார்த்தால் பிரதம நீதியரசரும் , உயர் நீதிமன்றமும் -அரசியலமைப்பின் கௌரவத்தையும் சுயாதீன தன்மையையும் பாதுகாக்கும் தார்மீகப் பொறுப்பை சுமந்திருக்கின்றன, அதனால் அரசியல் நெருக்கடிக்கு நியாயம் கிடைக்கும் என்ற  எதிர்பார்ப்பில் மக்கள் பிரார்த்தித்துக் கொண்டிருக்கின்றார்கள், ஆனாலும் உயர்நீதிமன்றம் கொடுக்கும் தீர்ப்பிற்கு தலை வணங்கும் நிலையில் நிறைவேற்று அதிகாரம் என்று சொல்லிக் கொண்டிருக்கின்ற எதேச்சதிகாரமான இந்த ஜனாதிபதி இருக்கின்றாரே! அவர் ஏற்றுக் கொள்வாரா என்பதுதான் மக்கள் மத்தியில் உள்ள கேள்வியாக இருக்கின்றது.

இன்று சட்டவாக்கல் , நிறைவேற்று அதிகாரம் மற்றும் நீதித்துறை ஆகிய மூன்றும் ஒன்றுடன் ஒன்று புரிந்துணர்வுடன் செயற்பட்டால் மட்டுமே நாடு சுமுகமாக பயணிக்கும் - ஆனால் அந்த நிலையில் இருந்து மாறி இந்த மூன்று துறைகளும் ஒன்றுக்கொன்று முரண்பட்டு பயணிக்கும் போது நெருக்கடிகளும் ,சிக்கல்களும் தலை தூக்கும் என்பதை மறுக்க முடியாது , எனவே இந்த ஸத்தம்பித நிலையை நீடிப்பதற்கு இடமளிக்க கூடாது, குறிப்பாக அரச நிருவாகத்துறையில் எந்த விதமான ஸ்த்தம்பித நிலைமைகளும் ஏற்பட்டு விடக்கூடாது, இந்த நாட்டின் சட்டம் ஒழுங்கு உட்பட்ட அனைத்து துறைகளும் சரியான முறையில் நிருவாகம் செய்யப்பட வேண்டும், அதற்கு அரச சேவை ஸ்த்தம்பிதம் அற்ற நிலையில் செயற்திறனாக முன்னெடுக்க வேண்டும் என்ற அடிப்படையில் இது போன்ற பிரச்சனைகள் சிக்கல்கள் ஏற்படும் போது அது முழு நாட்டினதும் இயக்க நிலையை பாதிக்கும் ஒரு நிலைமை இன்று ஏற்பட்டிருக்கின்றது.

நாட்டில் மக்களது அன்றாட செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட வேண்டும் , தொழில் மற்றும் கல்வி நடவடிக்கைகளில் மக்களும் மாணவர்களும் ஈடுபட வேண்டும் , அமைச்சுக்கள் இயங்க வேண்டும் , எனவே நாட்டில் ஸ்த்திரமற்ற தன்மையை மாற்றுவதற்கும் , இந்த நிலைமை நீடிக்காமல் பிரச்சனைக்கு ஒரு சுமுகமான தீர்வை காண வேண்டும் என சுட்டிக்காட்டப்படுகிறது, 
விஷேடமாக பொருளாதார துறையிலும் தற்போது சிக்கல் நிலைமைகள் தோன்றியிருக்கிறது, முதலீடுகளில் வீழ்ச்சி ஏற்பட்டிருக்கின்றது, அதே போன்று அரசியல்ரீதியாகவும் , தீர்மானங்கள் எடுக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டிருக்கின்றது, இவை நாட்டின் எதிர்காலத்தை பாதிக்ககூடியதாகவே அமையும், மிக முக்கியமாக அரசாங்க துறையில் தீர்மானம் எடுக்கும் நிலையில் இருக்கின்ற அதிகாரிகள் எந்த வகையிலும் சிக்கல்களை எதிர்நோக்க கூடாது, இதனை நிறைவேற்று அதிகாரமும் சட்டவாக்கமும் இணைந்து உறதிப்படுத்த வேண்டும், சட்டவாக்கத்திற்கும் , நிறைவேற்று அதிகாரத்திற்கும் முரண்பாடுகள் இருக்கலாம் , அவை சுமுகமான முறையில் தீர்க்கப்பட வேண்டும், மாறாக அந்த முரன்பாடுகள் நாட்டின் அரச சேவை மற்றும் அரச நிர்வாகத்துறையில் சிக்கல்களை ஏற்படுத்துவதாக இருக்கவே கூடாது, 
2018 டிசம்பர் 31 ஆம் திகதி வரைக்குமான அரச சேவைக்கு தேவையான நிதி ஒதுக்கீடுதான் நாங்கள் பாராளுமன்றத்திலே நவம்பர் 26ஆம் திகதிக்கு முதல் அங்கீகரித்து இருந்தோம், இதனால் இந்த ஆண்டு அரச செலவீனங்களுக்கு எந்தவித பிரச்சனைகளும் டிசம்பர் 31 ஆம் திகதி வரை ஏற்படா விட்டாலும் 2019 ஜனவரி முதல் அரச செலவீனங்கள் மேற்கொள்வதில் பாரிய சிக்கல்கள் ஏற்பட இருக்கின்றது என்பதை இந்த நேரத்தில் நான் சொல்லியே ஆக வேண்டும்.
எனவே சட்டவிரோத அரசாங்கம் ஒன்று தற்போது செயற்பட்டு வருவதால் பெரும்பான்மை ஏதுமின்றி 2019 ஆம் ஆண்டின் முதல் மூன்று மாதங்களுக்குமான நிதி ஒதுக்கீட்டினை  பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்ற முடியாத நிலை ஏற்பட்டிருக்கின்றது, எனவே இவற்றை  எல்லாம் மனதில் கருதி இந்த நாட்டிலே மிகப்பெரும் பொருளாதார நெருக்கடி நிலைமையை ஏற்படுத்தாமல் ஒரு சுமுகமான தீர்விைனை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களிடம் வினயமாக வேண்டி நிற்கிறோம் ,

சபாநாயகர் அவர்களை சந்தித்தீர்கள் , எங்களது கட்சித்தலைவர்களை சந்தித்தீர்கள் , ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர்களையும் உறுப்பினர்களையும் சந்தித்தீர்கள் , எதிர்க்கட்சி தலைவர் ரா.சம்பந்தன் அவர்கள், ஐக்கிய தேசிய முன்னனியின் பங்காளிக்கட்சிகளாக செயற்படுகின்ற எங்களது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைமை,மலையக தலைவர்கள் உட்பட பலரையும் சந்தித்து உறுதியும் அளித்திருக்கிறீர்கள்,
எனவே இந்த நெருக்கடி நிலமைக்கு தீர்வு காணக்கூடிய அளவிற்கு நீங்கள் உறுதியளித்திருக்கின்றீர்கள் எப்படி இருப்பினும் நீங்கள் இந்த சூழ்நிலையை மாற்றி வெகுவிரைவிலே எங்களுக்கு பெரும்பான்மை இருக்கின்ற அடிப்படையில் நாங்கள் இன்று முழு நம்பிக்கையோடு இருக்கின்றோம், பெரும்பான்மையானவர்கள் யார் பிரதமராக இருக்க வேண்டும் என்ற அடிப்படையில் நாங்கள் முன் வைக்கின்றோம், அதை மதித்து நீங்கள் நாட்டின் நலன் கருதி இதை நல்லதொரு முறையில் ஒரு விடிவை தாருங்கள் என வினயமாக இந்த நேரத்தில் ஜனாதிபதி அவர்களிடம் கேட்டுக் கொள்கின்றோம்...

சந்தர்ப்பத்திற்கு நன்றி கூறி விடை பெறுகிறேன்

No comments