பரீட்சை முடிவுகளை நள்ளிரவில் வெளியிடும் நடைமுறை பொருத்தமில்லாதது இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம்-ஏ.எச்.ஏ. ஹுஸைன்- 

இலங்கையில் நடைபெறும் பாடசாலை சார்ந்த மாணவர்களின் பரீட்சை முடிவுகளை நள்ளிரவில் வெளியிடும் நடைமுறை மிகமோசமானதொரு செயற்பாடு என இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் விமர்சனம் தெரிவித்துள்ளது.

இவ்விடயம் தொடர்பில் சங்கம் ஞாயிற்றுக்கிழமை 30.12.2018 வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

13 ஆண்டுகாலம் பாடசாலைக் கல்வியைத் தொடர்ந்து, பரீட்சை எழுதி பெறுபேற்றை ஆவலுடன் எதிர்பார்த்திருக்கும் மாணவர்களின் பெறுபேறுகளை பொருத்தமில்லாத நேரத்தில் அதுவும் நடுநிசியில் வெளியிடும் நடைமுறை இலங்கையில் பல ஆண்டுகளாக நடைபெற்று வருகின்றது.

இது கண்டிக்கத்தக்கது மட்டுமன்றி, கல்வி உளவியல் சார்ந்த கல்வியியலாளர்களும், பெற்றோர்களும்கூட தமது விமர்சனங்களை வெளியிட்டு வருகின்றனர்.

இலங்கையில் மாணவர் சார்ந்த பரீட்சைப் பெறுபேறுகளை நள்ளிரவில் வெளியிடும் நடைமுறை ஏன் பின்பற்றப்படுகின்றது. என்பதனை பலர் வினாவாக பல ஆண்டுகள் முன்வைத்தும், விடை தெரியாமல் உள்ளனர்.

இலங்கையில் பொருட்களின் விலைமாற்றம் உட்பட பல வெளியீடுகள் நடுநிசியிலேயே அறிவிக்கப்படுகின்றது.

இதற்கான காரணத்தை மக்கள் பிரதி நிதிகளாக நாடாளுமன்றத்தில் உள்ளவர்களும் அங்கீகரிப்பது வேதனையான விடயம்.

மனித மனங்களின் தாக்கம், குழந்தைகளில் ஏற்படும் உளவியல் ரீதியிலான தாக்கங்கள். அதனால் ஏற்படும் விளைவுகள் இவையெல்லாம் கருத்தில் கொள்ளப்படாமல் இவ்வாறு நடந்துகொள்வது விமர்சனத்திற்குரியது மட்டுமன்றி மனித உரிமைகளை மீறும் செயலாகவும் பார்க்கப்படவேண்டியுள்ளது.

இதனோடு சம்பந்தப்பட்டவர்கள் இனிவரும் காலங்களில் இதுபோன்ற நடைமுறைகளைக் கைவிட்டு. மனித மனங்கள் பாதிக்கப்படாத வகையில், விசேடமாக பாடசாலைப் பிள்ளைகளின் மனங்கள் பாதிக்கப்படாத வகையில் தீர்மானங்களை எடுக்க வேண்டும் என இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் வேண்டுகோள் விடுக்கின்றது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.