காசிநாதரின் இழப்பு கல்விச் சமூகத்துக்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும்! அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் அனுதாபம்மட்டக்களப்பு மாவட்டத்தில் கல்வித்துறையில் அரும்பெரும் சேவையாற்றிய முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பிரன்ஸ் காசிநாதரின் இழப்பு கல்விச் சமூகத்துக்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும் என நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார். 

பிரின்ஸ் காசிநாதரின் மறைவு தொடர்பில் அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் விடுத்துள்ள இரங்கல் செய்தியில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:-

“பிரின்ஸ் காசிநாதர் மட்டக்களப்பு மாவட்டத்தில் கல்வித்துறை வளர்ச்சியில் பெரும் பங்காற்றிய ஒரு மூத்த கல்வியலாளர். அவர் மட்டக்களப்பு மெதடிஸ்த் கல்லூரியில் ஆசிரியராக, உதவி அதிபராக, அதிபராக சுமார் 35 வருட காலம் சேவையாற்றியுள்ளார். யுத்த சூழ்நிலையிலும் கல்வித்துறையில் பாதிப்பு ஏற்படாத வகையில் மிகவும் நேர்த்தியாக தனது கல்வி நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தார். 

குறிப்பாக மெதடிஸ்த் கல்லூரி மட்டக்களப்பு மாவட்டத்தில் மாத்திரமல்லாது தேசிய ரீதியில் முன்னணி பாடசாலையாக மாற்றிய பெருமை அவருக்கும் உள்ளது. 

1989ஆம் ஆண்டு நான் முதன்முறையாக நாடாளுமன்றம் தெரிவான போது ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி சார்பில் பிரின்ஸ் காசிநாதரும் நாடாளுமன்றத்துக்கு தெரிவாகியிருந்தார். மட்டக்களப்பு மாவட்ட பிரதிநிதிகளாக நாங்கள் இருவரும் மிகவும் நெருக்கமாக செயற்பட்டோம். இன, மத பேதங்களுக்கு அப்பால் மக்களுக்கு எம்மால் முடியுமான உதவிகளை செய்தோம். 

எப்போதும் மாவட்டத்தின் கல்வி வளர்ச்சியில் அதிக அக்கறையுடன் செயலாற்றும் அன்னாரின் இழப்பு மட்டக்களப்பு மாவட்டத்தில் கல்விச் சமூகத்துக்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும். அவரது இழப்பால் துயருற்றுள்ள  குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள், அவரது மாணவர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.” – என்றார். 

No comments