தண்ணீர்த் தகறாறும் தடுமாறும் தலைமைத்துவமும் - சாதிக்கப் போவது என்ன...?சிரேஷ்ட்ட ஊடகவியலாளர்,
பிரபல கவிஞா் மதியன்பன் மஜீட்


தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் ஆயுத ரீதியாக எதனைப் பெற்றுக் கொள்ள முனைந்தார்களோ அதனை அரசியல் ரீதியாக பெற்றுத் தருவார்கள் என்ற நம்பிக்கையில்தான் இதுவரை தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு தமிழ் மக்களில் பெரும்பாலானோர் ஆதரவை வழங்கி வருகின்றனர்.

ஆனால், தற்போது தமிழ் தேசிய கூட்டமைப்பினர் நல்லாட்சி என்று சொல்லப்படுகின்ற தற்போதைய அரசில் சரணாகதி அரசியல் செய்து கொண்டிருப்பதால் தமிழ் மக்களிடத்தில் வெகுவாக ஆதரவினை இழந்து வருவதை காணக்கூடியதாக இருக்கின்றது.

தமது இலக்குகளை மறந்தவர்களாகவும், குறைந்தபட்சம் தமக்கு வாக்களித்த மக்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்துவதற்கு காத்திரமான முன்னேற்பாடுகளை செய்யத் தவறியவர்களாகவும் மாறி தமது வாக்கு வங்கிளை எவ்வாறேனும் தக்கவைத்துக் கொள்ள வேண்டும் என்ற அடிப்படையில் தற்போது குறுக்கு வழிகளை கையாளத் துவங்கியிருக்கின்றனர்.

அந்த வகையில், கடந்த சில மாதங்களுக்கு முன்னர் திருமலையில் பிரபல இந்து மகளிர் கல்லூரியொன்றில் ஏற்பட்ட தனிப்பட்ட ரீதியான பிரச்சினை யொன்றை பாடசாலை நிர்வாகம் மக்கள் மயப்படுத்திய போது தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் இந்நாட்டின் பொறுப்புள்ள எதிர்கட்சித் தலைவருமான இரா. சம்பந்தன் அவர்கள் பக்க சார்பாகவும் இனத்துவேசத்தை வளர்க்குமுகமாகவும் கருத்தொன்றை வெளியிட்டிருந்தார்.

இக்கருத்தானது சரிந்து வரும் தமது வாக்கு வங்கியை தூக்கி நிறுத்துவதற்கான ஒரு சந்தர்ப்பமான கருத்தாகவே புத்தி ஜீவிகளால் பார்க்கப்பட்டது.

அந்த வரிசையில் இன்று (07.09.2018) அனாமதேய சுவரொட்டிகள் வாயிலாகவும் துண்டுப் பிரசுரங்கள் மூலமாகவும் ஹர்தால் ஒன்றுக்கு தமிழ் மக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இதன் பின்னணியில் தமிழ் தேசிய கூட்டமைப்பில் புதிதாக பாராளுமன்றம் சென்ற திரு.வியாழேந்திரன் (அமல் ஆசிரியர்) அவர்கள் செயற்பட்டதாக ஊர்ஜிதமான தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஏற்கனவே மட்டக்களப்பு மாவட்டத்தின் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான திரு. யோகேஸ்வரன் திரு. அரியநேந்திரன் போன்றோர் மாவட்ட அபிவிருத்திக் குழுக்கூட்டங்களிலும் ஏனைய பொது இடங்களிலும் வளர்ந்து வரும் தமிழ் முஸ்லிம் உறவினை சீர்குலைக்கும் வகையில் துவேசக் கருத்துக்களை வெளிப்படையாக கூறி வரும் நிலையில் தற்போது புதிதாக இணைந்த மேற்படி பாராளுமன்ற உறுப்பினர் திரு. வியாழேந்திரன் அவர்களும் இணைந்து கொண்டுள்ளார் என்பதனையே இது காட்டுகின்றது.

ஒரு குறிப்பிட்ட தனிநபரின் தொழில் விவகாரம் ஒன்றினை மக்கள் மயப்படுத்தி அதை ஒரு சமூகப் பிரச்சினையாக சித்தரித்து தங்களை தமிழ் மக்களின் பாது காவாலர்கள் என காட்டிக்கொள்வதற்கான ஒரு யுக்தியே நடந்து முடிந்த இந்த ஹர்தாலுக்கான அழைப்பாகும். இதனை நன்கு உணர்ந்து கொண்ட தமிழ் மக்களில் பெரும் பாலானோர் இந்த ஹர்தாலை உதாசீனப்படுத்தியிருந்தனர்.

தனிநபர் பிரச்சினை யொன்றை கையாள்வதற்கு இந்நாட்டில் காவல்துறை, சட்டத்துறை போன்ற பல்வேறு வழிமூலங்கள் இருக்கின்றன. மாத்திரமின்றி மட்டக்களப்பு மாவட்டத்தில் நிர்வாக கட்டமைப்புக்கள் பெரும் பாலும் தமிழ் அதிகாரிகளிடமே இருக்கின்றன. குறித்த தண்ணீர் ஆலையும் முழுக்கக முழுக்க தமிழ் அதிகாரிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்திலேயே இருக்கிறது.

எனவே, இப்பிரச்சினையை சுமூகமாகத் தீர்ப்பதற்கோ அல்லது சட்ட ரீதியாக தீர்ப்பதற்கோ வழிவகைகள் தாராளமாக இருக்கும் போது ஹர்தால் எனும் குறுக்கு வழியை தேர்ந்தெடுத்தற்கான காரணம் என்ன என்பதையும் நாம் புரிந்தாக வேண்டும்.
முஸ்லிம்கள் மீதான தாக்குதல்களும் அடாவடித்தனங்களும் பரவலாக இடம்பெறறுவரும் நிலையில் இனவாதத்தையும் இனமுறுகலையும் தோற்றுவிக்கும் இவ்வாறான செயற்பாடுகள் மிக வன்மையாக கண்டிக்கப்பட வேண்டியதொன்றாகும்.

அண்மையில் புணர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினர் இன்பராசா அவர்களின் முஸ்லிம்களிடம் ஆயதம் இருக்கிறது அவையனைத்தும் களையப்பட வேண்டும் என்ற கருத்தும் இந்த அரசியல் பின்னணியிலேயே இடம் பெற்றுள்ளதா எனவும் சந்தேகிக்படவேண்யுள்ளது.

அரசியலையும் தங்களின் பதவிகளையும் தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக ஒற்றுமையாக வாழும் சமூகத்தை பிரித்தாள நினைக்கும் இவ்வாறான அரசியல் வாதிகளை மக்கள் ஓரங்கட்டவேண்டும்
இவ்வாறானவர்களின் சுயரூபங்களை சிவில் சமூகம் நன்றாகப் புரிந்து கொண்டால் மாத்திரமே எதிர்காலத்தில் இனங்களுக்கிடையிலான நிரந்தர சமாதானத்தையும் ஒற்றுமையையும் வளர்த்தெடுக்க முடியும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.