தேசியவிருதுடன் இங்கிலாந்து மகாராணியின் கரங்களால் சர்வதேச விருது பெற பயணிக்கும் ரஸ்னி ராஸிக் : இலங்கை திருநாட்டிற்கோர் அறிவுப் பொக்கிஷம்தேசியவிருதுடன்  இங்கிலாந்து மகாராணியின் கரங்களால் சர்வதேச விருது பெற பயணிக்கும் ரஸ்னி  ராஸிக் : இலங்கை திருநாட்டிற்கோர் அறிவுப் பொக்கிஷம்

சிறுவர் வழிநடாத்தல் மற்றும் ஆலோசனை வழங்குனர், சமூக செயற்பாட்டாளர், ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான அமைப்பு (UNHCR) இன் இலங்கையிலுள்ள Muslim Aid உடன் இணைந்த அகதிகளுக்கான அமைப்பின் ஆலோசகருமான இளம் பெண்மணி ரஸ்னி ராஸிக் 
Junior Chamber International (JCI) வழங்கிய “சிறுவர்களுக்கான பங்களிப்பு, உலக சமாதானம், மற்றும் மனித உரிமைகள்” தேசிய விருதை கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வில் பேராசிரியர் சுஜீவ அமரசேனவின் கரங்களால் வென்றுள்ளார். தான் கற்ற கல்வி மூலமும், பரம்பரை பரம்பரையாக சமூக தொண்டாற்றுவதில் தனது குடும்பம் காட்டிவரும் உத்வேகம் மூலமும், இயல்பிலேயே சிறுவர்களின் கல்வி விவகாரங்களிலும், வாழ்வாதார மேம்பாட்டிலும் கவனம் செலுத்தும் தனது மனப்பாங்குமே இவ்விருதை வெல்ல துணை செய்ததாக அவர் குறிப்பிடுகின்றார்.

கம்பளை ஸாஹிராவில் ஆரம்பித்து கண்டி Ecole சர்வதேசக் கல்லூரியில் அடிப்படை கல்வியை முடித்து, இளம் வயதிலேயே சிறுவர் உளவியல், முன் பள்ளிக் கல்வி கற்கை, சர்வதேச கற்கைகள் என்பவற்றை பூர்த்தி செய்த ரஸ்னி ராஸிக், கண்டி வைத்திய கற்கைகள் நிலையத்திலுள்ள வைத்தியர்களின் நலன்புரி சமூகத்தினது அங்கவீன விஷேட தேவையுடையோர்க்கான கல்வி புகட்டலில் சேவையாற்றினார். ரஸ்னியின் சேவைகளில் முக்கியமான ஒன்றை சொல்கிறேன் கேளுங்கள், பாதையில் கைவிட்ட நிலையிலுள்ள சிறுவர்களுக்கான நிலையம் (Centre for Street Children) ஒன்றிற்கு இவர் மேற்கொண்ட விஜயம் அவரது வாழ்க்கையின் முக்கியமான திருப்புமுனை. அந் நிலையத்தில் உள ரீதியாகவும், ஆன்மீக ரீதியாகவும் அச் சிறுவர்கள் எதிர்கொள்ளும் சிரமங்களை உணர்ந்த ரஸ்னி ராஸிக், துருக்கி அமைப்பொன்றின் நிதி பங்களிப்புடன் சிறந்த பராமரிப்பு நிலையம் ஒன்றை (Pearls of Paradise) இலங்கையில் நிறுவ உதவினார். இன்றும் அது 65 அநாதரவான சிறுமிகளுடன் சிறப்பாக இயங்குகின்றது. மற்றும் அவரது “If not us who? if not now when?” எனும் கேள்வியுடனான www.CareStation.lkஇணையதள உருவாக்கம் மூலமாக வறுமை ஒழிப்புக்கான முன்னெடுப்புக்கள், நிதித் திரட்டல் மற்றும் தன்னார்வ தொண்டர் உருவாக்கம் என்பன மேற்கொள்ளப்படுகின்றது.


JCI அமைப்பு 115 நாடுகளில், 5000 இற்கும் மேற்பட்ட உள்ளூர் அமைப்புக்களின் மூலம் 200,000 துடிப்பான பிரசைகளைக் கொண்ட சர்வதேச வலையமைப்பாக இயங்குகின்றது. உலகளாவிய ரீதியில் ஆக்கபூர்வமான மாற்றங்களை ஏற்படுத்த தம்மை ஒன்றிணைந்த செயற்பாட்டின்மூலம் வளர்த்துக்கொள்ள வேண்டும் என்ற நம்பிக்கையுடைய, இளமையும், துடிதுடிப்பும் மிக்க பிரசைகளுக்காக வருடாந்தம் இவ்விருதை வழங்கி கௌரவிக்கின்றது JCI. 1981 இல் இவ் அமைப்பு TOYP – Ten Outstatnding Young Persons எனும் திட்டத்தை அறிமுகம் செய்தது. இதற்கிணங்க 18 முதல் 40 வயதிற்கு இடையில் 10 இளம் மனிதர்களை இனங்கண்டு கௌரவிக்கும் திட்டத்தை தொடக்கி வைத்தது. இவ்வாறு தெரிவு செய்யப்படுபவர்கள் 115 நாடுகளிலும் பரந்துள்ள JCI இன் வலையமைப்பினால் அங்கீகரிக்கப்படுவார்கள்.

பின்வரும் குறிப்பிடப்பட்ட நிரல்படுத்தலின் அடிப்படையிலேயே தெரிவுகள் தீர்மானிக்கப்படுகின்றது.

வியாபாரம், பொருளாதாரம், முயற்சியாண்மை அடைவுகள்
அரசியல், சட்டம் மற்றும் பொது நிர்வாகம்
கல்விசார் தலைமைத்துவம் மற்றும் அடைவுகள்
கலை, கலாசாரம், இலக்கியம், ஊடகவியல் பங்களிப்பு
தார்மீக மற்றும் சூழல்சார் தலைமைத்துவம்
சிறுவர்களுக்கான பங்களிப்பு, உலக சமாதானம் மற்றும் மனித உரிமைகள்
மனிதாபிமான மற்றும் தன்னார்வ சேவை
விஞ்ஞானம் மற்றும் தொழிநுட்ப அபிவிருத்தி
சுய முன்னேற்ற அடைவுகள்
மருத்துவ புத்தாக்கம் அல்லது ஆய்வு

பத்து அதிசிறந்த இளம் ஆளுமைகளை தேர்ந்தெடுக்கும் இத் திட்டம் 1980 இல் இலங்கையில் ஒரு தேசிய திட்டமாக அங்குரார்ப்பணம் செய்ததை அடுத்து, தேசிய மட்டத்தில் முன்மாதிரியான நுண்ணிய திறமைகளை வெளிப்படுத்தும் 300 பேர் இதுவரை விருது வென்றுள்ளனர். அதில் அமைச்சர் ரவூப் ஹக்கீம், பிரதமரின் பேச்சாளர் ரோசி சேனாநாயக்க, சூழலியலாளர் ஒட்டாரா குணவர்தன, Dr. சுனில் ஆரியரத்ன, முத்தையா முரளிதரன் ஆகியோரும் அடங்குவர்.கொலை செய்யப்பட்ட பிலிப்பைன்ஸின் தலைவர் Benigno Aquino, மறைந்த அமெரிக்க ஜனாதிபதி ஜோன் F. கென்னடி, ஐக்கிய அமெரிக்க முன்னாள் இராஜாங்க செயலாளர் Dr. Henry Kissinger என்போர் உலக மட்ட தெரிவில் விருது வென்றோர்களில் சிலராவர்.

TOYP – 2017 தேசிய விருதுக்காக ரஸ்னி ராஸிக் மேற்கொண்ட குறிப்பிடத்தக்க 1000 சேவைகளுக்கான அத்தாட்சிப் படங்கள் ஒரு கோவையாக JCI இலங்கைக் கிளைக்கு சமர்ப்பிக்கப்பட்டிருந்தது. இதை விட மகள் ரஸ்னி மேற்கொண்ட சேவைகள் அதிகம் என்றும், அதில் ஒன்றாக லண்டன் பயணம் சென்று மீண்டும் இலங்கை வரும்போது தனக்கு செலவு செய்ய கொண்டு சென்ற பணத்தில் 50 பாதணிகளை அவர் சிறுவர்களுக்கு வழங்க வாங்கி வந்து தன்னை ஆச்சர்யப்படுத்திய அனுபவத்தையும், வருடா வருடம் லொரி ஒன்றின் கொள்ளளவிற்கு தனது நண்பர்களுடன் கூட்டிணைந்து பல்லின பாடசாலைகளுக்கு கற்கை உபகரணங்கள், பைகள் வழங்கும் திட்டத்தையும் மேற்கொள்வதை பகிர்ந்துகொண்டார் அவரது தந்தை அல்-ஹாஜ் I.L.M. ராஸிக். “எவரொருவர் ஒரு அநாதை பிள்ளையின் தலையை இரக்கமாகத் தடாவி விடுவாரோ, அவருக்கு மறுமையில் மிகப் பெரிய தரஜா (அந்தஸ்த்து) கிடைக்கும்” என்று மொழிந்தது அவரது நாவு.

வரலாற்றை சற்று பின்னோக்கி நீட்டினால் “கண்டியின் இறுதி மன்னனான ஸ்ரீ விக்ரமராஜசிங்க மன்னனின் நம்பிக்கைக்குரிய 10 முஸ்லிம்களில் முதன்மையானவராக போற்றப்பட்டவர் “பொல்லதே முகந்திரம்லாகே கெதர இஸ்மாயீல் லெப்ப வெதமஹத்தயா” எனும் வைத்தியர். தியவட நிலமே நிரஞ்சன் விஜேரத்ன அவர்கள் 15 வருடங்களுக்கு முன் பத்திரிகை பேட்டியொன்றில் இவர் குறித்து விரிவாகப் பேசியிருந்தார். இவரது பேரனின் பேரனின் பேரன் தான் நான். அவரைத் தொடர்ந்து எனது மூத்த அப்பப்பாவும் பிரதிபலனை எதிர்பார்க்காது வைத்தியமே மேற்கொண்டார். மலேரியா நோய் இலங்கையில் பரவிய காலத்தில் ஊர் ஊராகச் சென்று குணப்படுத்தியமைக்கு இவருக்கு பிரிட்டிஷ் அரசு விருது வழங்கியது. எனது தந்தை பௌத்த விகாரைகளிலும் நாட்டு வைத்தியத்தை செய்தவர். கலுகமுவ பழைய பள்ளிவாயலுக்கும், மையவாடிக்கும் காணி கொடுத்து உதவியவர். இன்றும் எமது குடும்பம் கம்பளை, இலாவத்துறையில் “பொல்லதே” என்று கௌரவமாக மதிக்கப்படுகின்றது” என்கிறார் ARENCO ஸ்தாபனத்தின் பணிப்பாளரும், கடன் இணக்க சபையின் உறுப்பினரும், ஐ.தே. கட்சியின் உயர் மட்டக் குழு உறுப்பினரும், அகில இலங்கை சமாதான நீதவானும், பல பள்ளிவாயல்களின் வடிவமைப்பாளருமான பொறியியலாளர், ரஸ்னியின் தந்தை அல்-ஹாஜ் I.L.M. ராஸிக். தந்தையின் சேவை குணத்தின் அடையாளமாக கேகாலை மற்றும் ராஜகிரிய பள்ளிவாயல்களை குறித்துக் காட்டுகின்றார் மகள் ரஸ்னி.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட பல அமைச்சர்களுடன் சட்டக் கல்லூரியில் படிப்பை பூர்த்தி செய்த சேவை உணர்வுள்ள சட்டத்தரணியான தனது தாய்க்கும், பொறியியலாளரான தனது தந்தைக்கும் ரமழான் மாதங்களிலும், இதர நாட்களிலும் தாய்மார், சகோதர சகோதரிகள், நண்பர்கள் உள்ளிட்ட பலர் இவர்கள் மூலம் கிடைத்த உதவிகளுக்காக துஆக்களை வாயார மேற்கொண்டதை கண்டும், கேட்டும் மனத் திருப்தியும் உவகையும் ரஸ்னிக்கு ஏற்பட்டது. தந்தை வடிவமைத்துக் கட்டிய பள்ளிவாயல்கள், மத்ரசாக்களின் திறப்பு விழாக்களின் சிறப்பு மலரில் புன்னகையுடன் கூடிய அவரது விபரங்கள் பார்த்தும், வாசித்தும் தன்னிலிருந்து ஆரம்பித்த ஒரு சேவைப் புரட்சியின் விளைவே ரஸ்னிக்கு இந்த விருது. இது வெறும் விதை மட்டுமே. தேசிய மட்டத்தில் வென்ற அங்கீகாரத்தை அடுத்து சர்வதேச மட்ட அங்கீகார விருதை பெரும் முயற்சியில் ரஸ்னி களமிறங்கியுள்ளார். சர்வதேச மட்ட விருது இங்கிலாந்து எலிசபத் மகாராணியின் பொற்கரங்களால் வழங்கி வைக்கப்படுகின்றமை விஷேட அம்சமாகும்.

ரஸ்னியின் இப்பயணத்தில் பெற்றோரை அடுத்து ஆக்கமும் ஊக்கமும் கொடுத்து முன் நகர்த்தியவர்களில் அன்புக் கணவர், இங்கிலாந்தில் சட்டத்தரணியாக இருக்கும் ரஸ்னியின் சகோதரர், டாக்டராக பணிபுரியும் மைத்துனி மற்றும் குடும்ப உறவுகள், நண்பர்கள் ஆகியோர் போற்றுதலுகுரியவர்கள். இவ்விருது இவர்களுக்கும் அநாதை இல்லங்களிலும், வீதிகளிலும் வாழும் பிள்ளைகளுக்கும் உரியது என்கின்றார் கம்பளையைச் சேர்ந்த 28 வயதுடைய ரஸ்னி.

தேசிய ரீதியாக தெரிவு செய்யப்படுபவர்கள் உலக மட்டத்தில் நடைபெறும் TOYP திட்டத்திற்கு முன்மொழியப்படுவார்கள். உலக மட்ட போட்டிக்கு முன்மொழியப்பட்டு விருது வென்ற ஒரே இலங்கையர் என்ற பெருமை புகழ்பெற்ற சித்திரக் கலைஞர் திரு. சேனக சேனாநாயக்கவை சாரும். தான் இந்தப் பாதையில் எதிர்கொண்ட சிரமமாக சேவை செயற்திட்ட அனுமதி பெறலுக்காக கொழும்புக்கும், கண்டிக்கும் பயணித்த கனதியான நாட்களை நினைவுகூர்ந்த ரஸ்னி “If there is a will, there is a way. விருது பெறுவது எனக்கு நோக்கமாக இருக்கவில்லை, இப்பொழுது அதை அங்கீகாரமாகப் பெற்றிருக்கின்றேன்” என்று நாளைய தலைவர்களான இளையோர்க்கு ஒரு உற்சாக அறிவுரையையும் உதிர்க்கிறார்.

செலவுகள் பல செய்து தான் கற்ற கல்வியால் அவுஸ்திரேலியாவில் கிடைத்த குடியுரிமையையும் உதரித்தள்ளிவிட்டு, நாட்டின் மறுமலர்ச்சிக்கு சர்வதேச ரீதியான தனது அறிவுப் பெருகையை பயன்படுத்திய தயாள மனம் கொண்ட ரஸ்னி, இலங்கை திருநாட்டிற்கோர் அறிவுப் பொக்கிஷம்.
sor/sn
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.