Batticaloa Campus தொடர்பிலும் அதன் தலைவர் ஹிஸ்புல்லாஹ் மீதும் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் உண்மைக்கு புறம்பானவை!

batticaloa campus தொடர்பிலும் அதன் தலைவர், நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் சம்பந்தமாகவும் ஊடகங்கள் வாயிலாக வெளியிடப்பட்ட போலியான செய்திகள் அவரை தனிப்பட்ட ரீதியில் பழிவாங்கும் நோக்கத்தில் திட்டமிட்டு செய்யப்பட்டதாகும் என  batticaloa campus நிறுவனம் தெரிவித்துள்ளது. 

அண்மைக்காலமாக ஊடகங்கள் வாயிலாக batticaloa campus தொடர்பிலும் அதன் தலைவர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தொடர்பிலும் மேற்கொள்ளப்பட்ட போலிப் பிரச்சாரம் சம்பந்தமாக batticaloa campus விசேட ஊடக அறிக்கையொன்றினை வெளியிட்டிருந்தது. 

அதில் கூறப்பட்டுள்ளதாவது:- 

நாட்டிலுள்ள சகல மாணவர்களுக்கு தரமான உயர் கல்வியை வழங்குவதற்காக ‘batticaloa campus’ நிறுவனம் சட்டரீதியாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது. எனினும், இது தொடர்பில் சில தரப்பினர் உண்மைக்கு புறம்பான போலியான தகவல்களை பரப்பி மக்களை குழப்புவதற்கு முயற்சிக்கின்றனர். கடந்த சில நாட்களாக ஊடகங்கள் வாயிலாக திட்டமிட்ட ரீதியில் மேற்கொள்ளப்படும் போலிப் பிரச்சாரங்கள் மூலம் எம்மால் அதனை உணர்ந்து கொள்ள முடிகின்றது. 

இந்த பல்கலைக்கழகமானது மதம் சார்ந்த பல்கலைக்கழகம் எனவும், அதில் ஷரீஆ சட்டம் கற்பிக்கப்படுவதாகவும், இது தெற்காசியாவிலேயே மிகப்பெரிய பள்ளிவாசல் என்றெல்லாம் ஆதாரமற்ற முற்றிலும் பொய்யான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றது. 

இவ்வாறான குற்றச்சாட்டுக்களை எமது நிறுவனத்தின் மீது சுமத்துவதன் ஊடாக அரசியல் ரீதியாக இலாபம் அடைந்து கொள்வதற்கும், இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தை சீர்குலைப்பதற்கும் சிலர் முயற்சிக்கின்றனர். இந்தக் குற்றச்சாட்டுக்களை நாங்கள் முற்றாக நிராகரிக்கிறோம். இந்த பல்கலைக்கழகத்தில் ஷரீஆ சம்பந்தமான எதுவும் போதிப்பதில்லை என்பதுடன் இது மதம் சார்ந்த ஷரீஆ பல்கலைக்கழகம் அல்ல. உயர் கல்வி அமைச்சினால் அனுமதி வழங்கப்பட்டுள்ள சகல பாடநெறிகளும் இந்த பல்கலைக்கழகத்தில் கற்பிப்பதற்கு தேவையான வசதி – வாய்ப்புக்களை செய்துள்ளோம். மாறாக வேறு எந்த கல்வி நடவடிக்கைகளையும் இதில் முன்னெடுப்பதில்லை என்பதை பொறுப்புடன் கூறுகின்றோம். 

பொது மக்களை குழப்பி, மாணவர்களுக்கு இருக்கின்ற கல்வி உரிமையை தடுக்கும் வகையில்  சுமத்தப்படுகின்ற குற்றச்சாட்டினால் எமது நிறுவனத்தின் நற்பெயருக்கு கலங்கம் ஏற்பட்டுள்ளதுடன் பெரும் பாதிப்பாகவும் அமைந்துள்ளது. 

நாட்டில் வாழ்கின்ற சாதாரண சிங்கள, தமிழ், முஸ்லிம் உள்ளிட்ட சகல இனங்களைச் சேர்ந்த பொருளாதார ரீதியில் பின்தங்கிய மக்களின் பிள்ளைகள் தமக்கு விரும்பிய உயர்கல்வியினை குறைந்த செலவில் முன்னெடுக்கும் வாய்ப்பினை ‘batticaloa campus’ வழங்கியுள்ளது.

சகல இன மக்களும் எவ்வித பாதிப்புக்களும் இன்றி கல்வியைத் தொடர வேண்டும் என்பதற்காகவே பொலன்னறுவை, வெலிகந்தை பகுதியில் இப்பல்கலைக்கழகம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. முஸ்லிம் மாணவர்களுக்கு மாத்திரம் இப்பல்கலைக்கழகம் அமைப்பதாயின் அதனை காத்தான்குடி, சம்மாந்துறை, கல்முனை போன்ற பகுதிகளிலேயே அமைத்திருக்க வேண்டும். மாறாக கல்வி கற்கும் உரிமை சகலருக்கும் உள்ளது என்ற அடிப்படையிலேயே இப்பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்டது. அடுத்த வருட ஆரம்பத்தில் இதன் கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிக்கவுள்ளோம். அப்போது இதில் சகல இன மாணவர்களும், விரிவுரையாளரும் உள்ளடக்கியதாக இருக்கும் அதேவேளை, போலிக் குற்றச்சாட்டுக்களுக்கு தக்க பதிலாகவும் அது அமையும். 

இப்பல்கலைக்கழகத்தின் நிர்மாணப் பணிகளின் போது பல ஒப்பந்தக்காரர்களைக் கொண்டே பணிகளை ஆரம்பித்தோம். அதில் பிரபாத் உக்குவத்த என்பவருடனும் சட்டரீதியாக ஒப்பந்தம் செய்யப்பட்டு பணிகளை ஆரம்பித்த போதிலும், அவரது பணிகளில் அதிகளவான சிக்கல்களையும் - பிரச்சினைகளையும் எமது நிறுவனம் முகம்கொடுத்தது. நிர்மாணப் பணிகளுக்காக ஒப்பந்தம்  செய்யப்பட்ட தொகைக்கு மேலதிகமாக நிதி வழங்குமாறு கோரி  அழுத்தம் பிரயோகித்து வந்ததுடன் தேவையற்ற பிரச்சினைகளையும் அவர் ஏற்படுத்தியிருந்தார். 

பிரபாத் உக்குவத்த என்பவரது நிறுவனத்துக்கு 250 மில்லியன் ரூபாய் முற்பணம் செலுத்தியுள்ளதுடன், முழு பணிகளுக்காக 950 மில்லியன் ரூபாய் எமது நிறுவனத்தால் வழங்கப்பட்டுள்ளது. எனினும், குறித்த நிறுவனத்தால் 650 மில்லியன் ரூபாய் பொறுமதியான பணிகளே மேற்கொள்ளப்பட்டுள்ளதை அவர்கள் தரப்பு சட்டத்தரணி ஏற்றுக்கொண்டுள்ளார். 

நிர்மாணப் பணிகளின் போது ஒதுக்கப்பட்ட இயந்திர உபகரணங்கள் சிலவற்றை குறித்த நிறுவனம் எமது பல்கலைக்கழக வளாகத்தில் கைவிட்டுச் சென்றிருந்தது. ஒரு வருடத்தின் பின்னர் 91 மில்லியன் ரூபாய் பொறுமதியான இயந்திர உபகரணங்கள் எமது வளாகத்தில் இருப்பதாக கூறி குற்றப் புலனாய்வுப் பிரிவில் முறைப்பாடு செய்தது. 

மேற்படி இயந்திர உபகரணங்கள் பாவனைக்கு உற்படுத்தப்பட்ட பழைய பொருட்கள் என்பதுடன் அதனை குறித்த நிறுவனமே எமது வளாகத்தில் கைவிட்டுச் சென்றிருந்தது. மாறாக அதனை நாங்கள் பலவந்தமாக வைத்திருக்கவில்லை என்பதை கூறிக்கொள்கின்றோம். இது சம்பந்தமாக முன்னெடுக்கப்பட்ட விசாரணையின் போது எமது நிறுவனத்தின் தலைவரும் இராஜாங்க அமைச்சருமான கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் உள்ளிட்ட நிறுவனத்தின் அதிகாரிகள் நீதிமன்றில் ஆஜராகி தமது தரப்பு கருத்துக்களை முன்வைத்துள்ளனர். 

இந்த நடவடிக்கைகளின் போது, வாழைச்சேனை நீதிவான் நீதிமன்றத்தால் இராஜாங்க அமைச்சர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் உள்ளிட்ட எமது நிறுவனம் சார்பில் எவரையும் கைது செய்யுமாறு உத்தரவு பிறப்பிக்கவோ, பிடியாணை பிறப்பிக்கவோ இல்லை. அது ஊடகங்கள் வாயிலாக  மேற்கொள்ளப்பட்ட போலிப் பிரச்சாரமாகும். 

இந்த சம்பவம்  தொடர்பாக கொழும்பு வணிக நீதிமன்றத்தில் எமது நிறுவனத்தால் வழக்குத்; தொடரப்பட்டுள்ளதுடன்,  இந்த சிவில் வழக்கின் உண்மைத் தன்மையினை மறைத்து குற்றப்புலனாய்வுப் பிரிவின் ஊடாக வழங்கத்துத் தொடரப்பட்டுள்ளமை நீதிமன்றத்தையே அவமதிக்கும் செயலாகும்.  இராஜாங்க அமைச்சர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வை தனிப்பட்ட ரீதியில் பழிவாங்கும் எண்ணத்தில் திட்டமிட்ட ரீதியில் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. – என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.