காத்தான்குடி நகரசபை மக்கள் பிரதிநிதிகளின் செப்டம்பர் மாதத்திற்கான 06 வது அமர்வு.-ஊடகப்பிரிவு-

காத்தான்குடி நகரசபையின் மக்கள் பிரதிநிதிகளின் மாதாந்த அமர்வுத் தொடரில் செப்டம்பர் மாதத்திற்கான 06 வது அமர்வு கடந்த 20.09.2018 வியாழக்கிழமை காலை 9.30 மணிக்கு தவிசாளர் S.H.M. அஸ்பர் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.

இவ்வமர்வில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சார்பிலான பத்து உறுப்பினர்களும், நல்லாட்சிக்கான தேசிய முன்னணி சார்பிலான நான்கு உறுப்பினர்களும், முஸ்லிம் தேசியக் கூட்டமைப்பு சார்பிலான உறுப்பினர்கள் இருவருமாக மொத்தம் 16 உறுப்பினர்கள் கலந்துகொண்டிருந்தனர், உறுப்பினர்களான பொறியியலாளர் சிப்லி பாறூக் மற்றும் அல்ஹாஜ் A.M.M. மாஹிர் ஆகியோர் சபை அமர்விற்கு சமுகமளித்திருக்கவில்லை.

சபை அமர்வினை ஆரம்பித்துவைத்து உரையாற்றிய தவிசாளர் அவர்கள் கடந்த சபைக் கூட்டங்களில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கமைவாக போதைப்பொருள் பாவனைக்கெதிராக சபையினால் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள் தொடர்பில் விளக்கமளித்ததோடு நகரசபை உறுப்பினர்கள் 18 பேரையும் நிரந்தர உறுப்பினர்களாகக் கொண்டு அடையாளங் காணப்பட்ட துறைசார்ந்தவர்கள் 25 பேரை உள்ளடக்கியதான உயர்மட்டக்குழு ஒன்றினை அமைத்து போதைப்பொருள் பாவனைக்கு எதிரான வேலைத்திட்டங்களை முன்னெடுக்கவுள்ளதாகக் குறிப்பிட்டார்.

அத்தோடு துருக்கிக்கான இலங்கையின் தூதுவர் P.M அம்ஸா அவர்களின் அழைப்பின்பேரில் 7 பேர் அடங்கிய உயர்மட்டக்குழு ஒன்று எதிர்வரும் 25.09.2018 அன்று துருக்கி நாட்டுக்குச் செல்லவுள்ளதாகவும், அக்குழுவில் தவிசாளர், மற்றும் உறுப்பினர்களான அல்ஹாஜ் A.A.அமீர் அலி, அல்ஹாஜ் A.M.பௌமி அவர்களும், நகரசபையின் தொழில்நுட்ப உத்தியோகத்தர் M.M. றமீஸ் ,நகரசபை காரியாலய உதவியாளரான A.L.Z. பஸ்மி அவர்களும், நகரசபையின் ஆலோசனைசபைக் குழு உறுப்பினர்களான A.G M.ஷாமில், A.M.சமீம் ஆகிய 7 பேரடங்கிய குழுவினர் 9 நாட்கள் உத்தியோக பூர்வ பயணத்தினை மேற்கொள்ளவுள்ளதாகவும் குறிப்பிட்டார், இவ்விஜயத்தின்மூலம் பல் வேறு நன்மைகளை காத்தான்குடி நகருக்கு ஈட்டிக்கொள்ளமுடியும் என தான் நம்புவதாக தவிசாளர் குறிப்பிட்டதோடு இப்பயணத்திற்கான செலவுகள் தமது சொந்த நிதியிலிருந்து செலவிடப்படுவதாகவும் குறிப்பிட்டார்.

அத்தோடு சபையினால் முன்னெடுக்கப்படும் பல்வேறு வேலைத்திட்டங்களுக்கு கட்சி வேறுபாடுகள் இன்றி அனைத்து உறுப்பினர்களும் வழங்கிவரும் ஒத்துழைப்புக்களுக்கு நன்றி தெரிவித்ததோடு எதிர்வரும் காலங்களிலும் ஊரின் நலன்சார்ந்த விடயங்களில் அனைவரும் ஒத்துழைப்போடு செயற்படவேண்டும் எனவும் வேண்டிக்கொண்டார்.

அதனைத்தொடர்ந்து ஆகஸ்ட் மாதத்திற்கான 05 வது அமர்வின் கூட்டறிக்கை வாசிக்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்டதுடன், ஆகஸ்ட் மாதத்திற்கான வருமானம், செலவறிக்கை மீதான விவாதம் இடம்பெற்றது,

ஆகஸ்ட் மாதத்திற்கான செலவறிக்கையில் உள்ள சில விடயங்களில் தெளிவின்மை நிலவுவதாகச் சுட்டிக்காட்டிய நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் உறுப்பினர் M.B.M. பிர்தௌஸ் நளீமி அவர்கள் அது தொடர்பான விளக்கங்களையும் சபையில் கோரினார்,அது தொடர்பான விளக்கங்கள் தவிசாளரால் வழங்கப்பட்டதனைத்தொடர்ந்து ஆகஸ்ட் மாதத்திற்கான சபை வருமானமாக ரூபா 8291652.68 உம், ஆகஸ்ட் மாதத்திற்கான சபையின் செலவீனமாக ரூபா 14713612.20 மும் அங்கீகரிக்கப்பட்டது.

அதனைத்தொடர்ந்து 2018.08.30 தொடக்கம் 2018.09.19 ம் திகதி வரையான காலப்பகுதியில் ரூபா 1500.00 - 5000.00 ரூபாவிற்கு மேற்பட்ட செலவுகளுக்கான உறுதிச்சீட்டுகளுக்கு அனுமதி வழங்குவதற்கான அங்கீகாரம் தவிசாளரினால் சபை உறுப்பினர்களிடம் கோரப்பட்டது, அதன்படி பின்வரும் இரண்டு கொடுப்பனவுகளுக்குமான அனுமதி சபையினால் வழங்கப்பட்டது.

(1) கடற்கரையைச் சுத்தப்படுத்தும் Beach Tech இயந்திரத்திற்கு Screen Belt மாற்றி திருத்தம் செய்தமைக்கான கொடுப்பனவு ரூபா 2446625.00.

(2) சபைக்குரிய PF 7385 இலக்க பிக்அப் வாகனத்திற்கு ( தவிசாளரின் பாவனைக்கானது) நான்கு டயர்கள் கொள்வனவு செய்தமைக்கான கொடுப்பனவு ரூபா 169694.00

அதனைத் தொடர்ந்து ஆதனவரிப்பதிவேடு எழுதுவதற்கான ஊக்குவிப்புக் கொடுப்பனவு வழங்கக் கோரி ஆதனவரிப் பொறுப்பாளரினால் சபைக்கு அனுப்பப்பட்ட கடிதம் தொடர்பில் ஆராயப்பட்டு  அதற்கான அனுமதி சபையினால் வழங்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து நிலுவையாக உள்ள ஆதன வரிகளை நடமாடும் சேவையொன்றின் மூலம் அறவிடுவதற்கும் , அந்நடமாடும் சேவையில் ஈடுபடும் சபையின் உத்தியோகத்தர்களுக்கு நாளாந்தக் கொடுப்பனவாக ரூபா 500/= இனை வழங்குவதற்கும் சபையினால் அனுமதி வழங்கப்பட்டது.அதனைத்தொடர்ந்து பிற விடயங்கள் தொடர்பான கலந்துரையாடல் இடம்பெற்றது, இக்கலந்துரையாடலில் காத்தான்குடி பிரதேச செயலாளரினால் அனுப்பப்பட்ட இரண்டுகடிதங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.

காத்தான்குடி 06 ம் குறிச்சியைச்சேர்ந்த ஒருவர் நாளாந்த உணவுத்தேவையைக்கூட பூர்த்திசெய்வதற்கு வசதியின்றிக் கஷ்டப்படுவதாகவும் அவருக்கான வாழ்வாதார உதவிகளைச் சபை மூலம் வழங்க ஆவண செய்யுமாறு பிரதேச செயலாளரால் கோரப்பட்டதற்கிணங்க  அதற்கான மேலதிக நடவடிக்கைகளை மேற்கொள்ள சபை அனுமதி வழங்கியது,

அதனைத்தொடர்ந்து நகர அபிவிருத்தி அதிகார சபையின் கட்டுப்பாட்டின்கீழ் உள்ள பகுதிகளில் நான்கு பேர்ச் அளவுள்ள காணிகளுக்குள் கட்டடங்கள் அமைப்பதற்கான அனுமதியினை வழங்குவதற்கு ஆவண செய்யுமாறு பிரதேச செயலாளரால் அனுப்பப்பட்ட கடிதம் கலந்துரையாடலுக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது அது தொடர்பில் நகர அபிவிருத்தி அதிகாரசபையுடன் கலந்துரையாடி தீர்மானத்திற்குவருவதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது,

அதனைத்தொடர்ந்து நகரசபையின் காசாளரிடம் கையிருப்பில் வைத்திருக்கும் Petty Cash பணத்தொகையினை ரூபா 5000.00 இலிருந்து ரூபா 20000.00 ஆக உயர்த்துமாறு நகரசபை கணக்காளரினால் விடுக்கப்பட்ட வேண்டுகோளினை சபை ஏற்றுக்கொண்டது.

அதனைத்தொடர்ந்து நகரசபையின் பழைய மடுவக்காணியில் உருவாக்கப்பட்டுள்ள வேலைத்தளத்தில் Work shop ஒட்டுவேலைகளைச் செய்வதற்கான Welding  gas plant ஒன்றினைக் கொள்வனவு செய்வதற்காக ரூபா 46250.00 இற்கான அனுமதி வழங்கப்பட்டது.

அதனைத்தொடர்ந்து காத்தான்குடியில் இயங்கிவரும் மாற்றுத் திறனாளிகளின் அமைப்பினால் அனுப்பப்பட்ட கடிதம் தொடர்பில் ஆராயப்பட்டது, காத்தான்குடியில் நகரசபையினால் முன்னெடுக்கப்படும் உத்தியோக பூர்வ நிகழ்வுகளில் தமது அங்கத்தவர்களை இணைத்துக்கொள்ளுமாறும்,சபையினால் முன்னெடுக்கப்படும் வாழ்வாதார நிகழ்ச்சித்திட்டங்களிலும் தம்மை இணைத்துக் கொள்ளுமாறும் கோரியிருந்தனர், இதற்கான அனுமதியினை சபை வழங்கியது இதன்போது கருத்துத்தெரிவித்த நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் உறுப்பினர் M.B M.பிர்தௌஸ் நளீமி அவர்கள் அரச கட்டிடங்கள், மற்றும் சமயத்தலங்கள், தனியார் நிறுவன கட்டிடங்கள் என்பவற்றில் மாற்றுத் திறனாளிகளின் போக்குவரத்திற்கேற்றவாறான வசதிகள் செய்யப்பட்டுள்ளனவா என்பது உறுதிப்படுத்தப்பட்ட பின்னரே கட்டிட அனுமதி வழங்கப்படவேண்டும் எனக்கேட்டுக்கொண்டார்.

அதனைத்தொடர்ந்து நகரசபையின் காரியாலய உதவியாளராகக் கடமைபுரியும் A.L.Z.பஸ்மி என்பவரால் 100 மணித்தியாலய மேலதிக நேரக் கொடுப்பனவு கோரிய கடிதம் கலந்துரையாடலுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது, A.L Z பஸ்மி என்பவர் தற்போது தவிசாளரின் உதவியாளராக கடமைநேரம் தவிர்ந்த நேரங்களில் முழுமையாகக் கடமையாற்றுவதால் மேலதிக நேரக்கொடுப்பனவினை வழங்க அனுமதிக்குமாறு தவிசாளர் பரிந்துரைத்தார் அதற்கிணங்க 60 மணித்தியாலய மேலதிக நேரக்கொடுப்பனவினை வழங்குவதற்கான அனுமதியினை சபை வழங்கியது,

அதனைத்தொடர்ந்து நகரசபை உறுப்பினர் சல்மா அமீர்ஹம்ஸா அவர்களினால் பலநோக்குக்கட்டட நிருமானத்திற்காக நகரசபைக்குரிய  காணியொன்றினை அடையாளப்படுத்தித்தருமாறு கோரிய கடிதம் கலந்துரையாடலுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது, அதன்போது பெண்களுக்கான தொழில் வழிகாட்டல் பயிற்சிக்கான கட்டிடமாகவே இது அமையவுள்ளதாக உறுப்பினர் சல்மா அமீர் ஹம்ஸா குறிப்பிட்டார்,இதற்கு பதிலளித்த தவிசாளர் இதற்குப் பொருத்தமான சபைக்குச்சொந்தமான காணியொன்றினைத் தான் அடையாளப்படுத்தித்தருவதோடு அதற்கான திட்டமுன்மொழிவினையும் வழங்குவதாகவும் குறிப்பிட்டார், எனினும் அக்கட்டடம் நகரசபைக்குச் சொந்தமானதாகவே காணப்படவேண்டும் எனவும் சபை வலியுறுத்தியது.

அதனைத்தொடர்ந்து நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் உறுப்பினர் M.B.M. பிர்தௌஸ் நளீமி அவர்கள்  ஒழுங்குப் பிரச்சினை ஒன்றினை முன்வைப்பதற்கான அனுமதியினை தவிசாளரிடம் கோரியபோது அதற்கான அனுமதி வழங்கப்பட்டதற்கிணங்க பின்வரும் ஒழுங்குப்பிரச்சினையினை பிர்தௌஸ் நளீமி அவர்கள் முன்வைத்தார்கள்.

கடந்த 15.09.2018 அன்று தொழில்நுட்ப ஆலோசனைக்குழுக் கூட்டம் நகரசபையில் இடம்பெற்றுள்ளது, இக்கூட்டத்திற்கு தங்களுக்கு  அழைப்பு அனுப்பப்படாத நிலையில்  எங்களுக்கும் அழைப்பு அனுப்பப்பட்டதாக தவிசாளர் அவர்கள் கருத்துத்தெரிவித்தமையானது தவிர்க்கப்படவேண்டும் எனக் குறிப்பிட்டார், இதற்கு பதிலளித்த தவிசாளர் அவர்கள் நிருவாகரீதியான சிக்கல்கள் காரணமாக இத்தவறு இடம்பெற்றதாகவும், இதற்குப் பின்னர் இவ்வாறான தவறுகள் இடம்பெறமாட்டாது எனவும் உறுதியளித்து செப்டம்பர் மாதத்திற்கான கூட்டம் நிறைவடைந்தது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.