கல்முனை மாநகர சயையில் தற்காலிக ஊழியர்களை புறக்கணித்து புது முகங்களுக்கு நிரந்தர நியமனம்..!

000
(அஸ்லம் எஸ்.மௌலானா)

கல்முனை மாநகர சயையில் 102 ஊழியர்கள் தற்காலிக அடிப்படையில் கடமையாற்றி வருகின்ற நிலையில் அவர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்காமல், அரசியல் ரீதியாக புதிதாக சிலருக்கு நிரந்தர நியமனம் வழங்கப்பட்டிருப்பதாக அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்கத்தின் தலைவர் எஸ்.லோகநாதன் கவலையும் கண்டனமும் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக இன்று செவ்வாய்க்கிழமை (31) கல்முனை மாநகர முதல்வர் சட்டத்தரணி ஏ.எம்.றகீபை அவரது அலுவலகத்தில் குறித்த ஊழியர்கள் சகிதம் சந்தித்து மகஜர் ஒன்றையும் இவர் கையளித்துள்ளார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்;

"கல்முனை மாநகர சயையில் சுகாதாரம் மற்றும் வேலைப் பிரிவுகளில் 102 பேர் நீண்ட காலமாக அமைய, ஒப்பந்த, மாற்று நிலை, நிமிர்த்த அடிப்படை என்று தற்காலிக ஊழியர்களாக கடமையாற்றி வருகின்றனர். இவர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்குமாறு விடுக்கப்பட்ட கோரிக்கைகள் இன்னும் நிறைவேற்றப்படாமல் இழுத்தடிப்பு செய்யப்பட்டு வருகின்றது. இதனால் சிலர் தமது வயது எல்லையை தாண்டிச் செல்கின்றனர்.

எவ்வாறாயினும் என்றோ ஒரு நாள் நிரந்தர நியமனம் கிடைக்கும் என்ற பெரும் எதிர்பார்ப்புடனும் நம்பிக்கையுடனும் இவர்கள் கடமையாற்றி வருகின்ற நிலையில் அரசியல் ரீதியாக கிழக்கு மாகாண ஆளுநரினால் புதிதாக சிலருக்கு கல்முனை மாநகர சபையில் நிரந்தர தொழில் நியமனம் வழங்கப்பட்டிருப்பதாக அறிகிறோம். இது போன்று ஏனைய உள்ளூராட்சி மன்றங்களிலும் முறைகேடான நியமனங்கள் வழங்கப்படலாம்.

உள்ளூராட்சி மன்றங்களில் நிரந்தர நியமனம் வழங்குவதாயின் பகிரங்கமாக விண்ணப்பங்கள் கோரப்பட்டு, சம்மந்தப்பட்ட உள்ளூராட்சி மன்றங்களின் ஆணையாளர் அல்லது செயலாளரின் பரிந்துரையில் மாகாண உள்ளூராட்சி ஆணையாளரின் அனுமதியுடனேயே வழங்கப்பட வேண்டும். ஆனால் இந்த விதி முறைகளை மீறி ஆளுநர் தன்னிச்சையாகவே இந்நியமனங்களை வழங்கியிருக்கிறார். 

இது உண்மையில் கடந்த பல வருடங்களாக குறைந்த ஊதியத்தில் அர்ப்பணிப்புடன் கடமையாற்றி வருகின்ற ஊழியர்களுக்கான நிரந்தர நியமனத்தை கேள்விக்குறியாக்கியுள்ளதுடன் தொழிலை இழக்கும் ஆபத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த அரசியல் ரீதியான நியமன நடவடிக்கையை நாம் வன்மையாக கண்டிக்கிறோம்.

ஆகையினால் புதிய நபர்களுக்கான நியமனத்தை உடனடியாக ரத்து செய்யுமாறு வேண்டுகின்றோம். இவ்விடயத்தில் மாநகர முதல்வரின் ஒத்துழைப்பை எதிர்பார்க்கின்றோம். இது தொடர்பில் ஆளுநரையும் நேரடியாக சந்தித்து எமது கோரிக்கையை வலியுறுத்தவுள்ளோம். எமது கோரிக்கைக்கு செவிசாய்த்து உரிய தீர்வு தர அவர் முன்வரா விட்டால் அனைத்து உள்ளூராட்சி மன்றங்களினதும் தற்காலிக ஊழியர்களை அணிதிரட்டி கிழக்கு மாகாண சபை ஆளுநரின் அலுவலகத்திற்கு முன்னால் தொழிற்சங்கப் போராட்டத்தில் குதிப்போம்" என்றார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி முக்கியஸ்தர்களின் சிபாரிசுகளின் பேரில் கிழக்கு மாகாண ஆளுநரின் உத்தரவுக்கமைவாக மாகாண சபையினால் கல்முனை மாநகர சபையில் புதிதாக 10 பேருக்கு நிரந்தர நியமனம் வழங்கப்பட்டிருப்பதாக தெரிய வருகிறது.

No comments