முஸ்லிம்களுக்கு புதிய கட்சிகள் தேவையில்லை; இருப்பவற்றை கூட்டணியாக மாற்றுவதே அவசியம்..!

(01.08.2018)
(அஸ்லம் எஸ்.மௌலானா)

"முஸ்லிம் சமூகத்திற்கு மென்மேலும அரசியல் கட்சிகளை உருவாக்க வேண்டிய தேவையில்லை. இருக்கின்ற முஸ்லிம் கட்சிகள் அனைத்தையும் ஒன்றிணைத்து பலமிக்க ஒரு கூட்டணியாக செயற்படுவதே சமூகத்தின் இன்றைய தேவையாகும்" என முன்னாள் கல்முனை பிரதேச சபை உறுப்பினர் தேசகீர்த்தி ஏ.அப்துல் கபூர் தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவித்திருப்பதாவது;

"முஸ்லிம் சமூகத்தில் புதிதாக கட்சிகளை உருவாக்கும் முயற்சியில் சிலர் ஈடுபட்டு வருவதாக ஊடகங்களில் செய்திகள் கசிந்து கொண்டிருக்கின்றன. இது தேவையற்ற ஒரு சிந்தனையாகும் என்பதே எமது நிலைப்பாடாகும்.

இந்த நாட்டிலுள்ள பெரும்பான்மை சமூகமான சிங்கள சமூகத்தின் மத்தியில் முக்கிய அரசியல் கட்சிகளாக ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, ஜே.வி.பி மற்றும் பொதுஜன பெரமுன போன்ற சில கட்சிகளும் இரண்டாவது பெரும்பாண்மை சமூகமான தமிழ் சமூகத்தின் மத்தியில் தமிழரசுக் கட்சி, தமிழர்
விடுதலைக் கூட்டணி, ஈ.பி.டி.பி., ஈ.பி.ஆர்.எல்.எப்.,டெலோ போன்ற சில கட்சிகளும் செயற்பட்டு வருகின்றன. இவற்றுள் சில கட்சிகள் கூட்டிணைந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு எனும் பெயரில் பலமிக்க சக்தியாக திகழ்கிறது.

அதேவேளை மூன்றாவது சமூகமாக வாழும் முஸ்லிம் சமூகத்தின்
மத்தியில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், தேசிய காங்கிரஸ், நல்லாட்சிக்கான தேசிய முன்னணி மற்றும் ஐக்கிய சமாதான முன்னணி ஆகிய ஐந்து பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகள் முக்கிய கட்சிகளாக செயற்பட்டுக் கொண்டிருக்கும்போது மேலும் அரசியல் கட்சிகளை உருவாக்க வேண்டும் என சிந்திப்பவர்கள் அதனை மீள் பரிசீலனை செய்ய வேண்டும் என்று சமூக்கத்தின் பெயரால் வலியுறுத்துகிறேன்.

இலங்கையில் பயங்கரவாதமும் இனவாதமும் மேலோங்கியிருந்த 1980களின் முற்பகுதியில் முஸ்லிம் சமூகம் அரசியல் ரீதியாக கூனிக் குறுகியிருந்ததை கண்ணுற்ற மர்ஹும் எம்.எச்.எம்.அஸ்ரப், முஸ்லிம் சமூகத்திற்கு தனியான அரசியல் கட்சி ஒன்று தேவை என்பதை உணர்ந்து முஸ்லிம் காங்கிரஸை உருவாக்கினார். இக்கட்சியை தனது தலையில் சுமந்து கொண்டு முஸ்லிம்
சமூகத்தின் உரிமைகளுக்கும இருப்புக்கும் பாதுகாப்புக்குமாக உரத்து குரல் கொடுக்கத் தொடங்கினார். அவர் மரணிக்கும வரை மாறி மாறி ஆட்சிக்கு வந்த அரசாங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடாத்தி ஆட்சியமைக்க நிபந்தனைகளுடன் உதவினார். இதனை முஸ்லிம் புத்திஜீவிகளும் முஸ்லிம் சிவில் சமூக அமைப்புக்களும் புரிந்து கொள்ள வேண்டும்.

1986 ஆம் ஆண்டு கொழும்பு பாசா விலாவில் பெருந்தலைவர் அஸ்ரப் முஸ்லிம் காங்கிரஸை அங்குரார்ப்பணம் செய்து வைத்துப் பேசும்போது; முஸ்லிம் காங்கிரஸின் தலைமை தவறு செய்தால் அவரை தூக்கி வீசிவிட்டு வேறொரு தலைவரை தெரிவு செய்யவும்.அதற்கு மாறாக வேறொரு அரசியல் கட்சியை உருவாக்கி விடாதீர்கள் என்று கூறியிருந்ததை ஞாபகமூட்ட விரும்புகின்றேன். ஆனால் மறைந்த தலைவரின் இந்த ஆணையை மீறி முஸ்லிம் காங்கிரஸ் கட்சியில் தலைவரோடு ஒன்றாக இருந்தவர்களால் தான் பிற்காலத்தில் புதிய கட்சிகள் உருவாக்கப்பட்டுள்ளன. இதற்கும் மேலாக இன்று இன்னும் சிலர் முஸ்லிம் சமூகத்திற்காக புதிய அரசியல் கட்சிகளை உருவாக்க முயற்சிக்கின்றார்கள்.


அண்மையில் இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா, முஸ்லிம் சமூகத்தின் நலன் கருதி முஸ்லிம் அரசியல் கட்சித் தலைமைகள் ஒன்றுபட்டு கூட்டு முன்னணி அமைத்து செயற்பட முன்வர வேண்டும் என பகிரங்க வேண்டுகோள் விடுத்திருந்தார். அத்துடன் இவ்வேண்டுகோளை முஸ்லிம் காங்கிரஸ் தலைமை முதலில் ஏற்று உறுதியளிக்கும பட்சத்தில் அதற்கு தேவையான நிதி உட்பட அத்தனை ஏற்பாடுகளையும் தான் மேற்கொள்வதாகவும் அவர் கூறியதை முஸ்லிம் சமூகம் கவனத்தில் கொள்ள வேண்டும். முஸ்லிம் சமூகத்தின் நலம் சார்ந்த இவ்வேண்டுகோளை முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள், புத்திஜீவிகள், சமூக அமைப்புக்கள் ஆகிய எவருமே இதுவரை கவனத்தில் கொள்ளாமல் இருப்பது கவலையளிக்கின்றது.


சில மாதங்களுக்கு முன்னர் முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவர் என்.எம்.அமீன் மற்றும் அகில இலங்கை ஜம்மியதுல் உலமா சபை மற்றும் முஸ்லிம் அமைப்புக்களின் பிரதிநிதிகள் அடங்கிய குழுவினர் மேல் மாகாண அபிவிருத்தி மற்றும் மாநகர அபிவிருத்தி அமைச்சர் சம்பிக்க ரணவாக்கவை சந்தித்தபோது, முஸ்லிம் சமூகத்திற்கு அரசியல் ரீதியிலும சமய ரீதியிலும கூட்டுத் தலைமைத்தவமும வழிகாட்டலும் இல்லை என்றும் இதனால் முஸ்லிம் சமூகம் பல்வேறு பிரச்சனைகளை எதிர்நோக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என்றும் கூறிய கருத்துக்களை நாம் தட்டிக்கழித்து விட முடியாது.


மறைந்த தலைவர் அஸ்ரப், தென்கிழக்கு அலகினை முன்வைத்து ஒரு சந்தர்ப்பத்தில் உரையாற்றும்போது, நாடுதழுவிய ரீதியில்
முஸ்லிம்களுக்குள் ஏற்படுகின்ற ஒற்றுமை ஒன்றுதான் முஸ்லிம்களின் அரசியல் பலத்தின் அடிப்படையாகும் என்றும் வடக்கு, கிழக்கு முஸ்லிம் சமூகத்தின் ஒருமித்த குரலே அரசியல் விடுதலையின் அடிநாதமாகும் என்றும் கூறியதை இன்றைய அரசியல்வாதிகளும் சமூக சிந்தனையாளர்களும் ஒருகணம் மீட்டிப் பார்க்க வேண்டும்.


ஆகையினாள் மேலும் மேலும் புதிய அரசியல் கட்சிகளை உருவாக்கி முஸ்லிம் சமூகத்தில் உள்ள பிளவையும் பலவீனத்தையும் இன்னும் அதிகரிக்க இடமளிக்காமல் செயற்பாட்டிலுள்ள முஸ்லிம் கட்சிகள் அனைத்தையும் ஒன்றிணைத்து கூட்டு முன்னணி ஒன்றை உருவாக்கி, பலமிக்க முஸ்லிம் சக்தியாக செயற்பட முன்வர வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.

No comments