கொலை செய்யப்பட்ட ‘சன்டே லீடர்’ ஆசிரியரின் மகள் ஜனாதிபதிக்குக் காட்டமான பகிரங்க கடிதம்


மொழி ஆக்கம் : வி. சிவலிங்கம்

சில தினங்களுக்கு முன்னர் குற்றவியல் உளவுத் திணைக்களப் பிரிவின் பொலீஸ் அதிபர் நிஸான்த சில்வா அவர்கள் திடீரென நீர்கொழும்பு பொலீஸ் பிரிவிற்கு ஜனாதிபதியால் இடமாற்றம் செய்யப்பட்டார். அவர் இவ்வாறு திடீரென இடமாற்றம் செய்யப்பட்டதற்கான காரணங்கள் பல வெளிவந்துள்ளன. பொலீஸ் அதிகாரி நிஸான்த சில்வா பல முக்கியமான குற்றங்கள் தொடர்பான விசாரணைகளில் ஈடுபட்டுள்ளார். உதாரணமாக ‘சன்டே லீடர்’ எனப்படும் ஆங்கில வார இதழின் ஆசிரியரான விக்ரமதுங்க அவர்களின் மரணம்,‘நேஷன்’ எனப்படும் இன்னொரு ஆங்கிலப் பத்திரிகையின் உதவி ஆசிரியர் ஹீத் நொயர் என்பவரைக் கடத்திக் கொலை செய்ய முயற்சித்தமை, உபாலி தென்னக்கோன், நமல் பெரேரா போன்ற முக்கியஸ்தர்கள் மீதான தாக்குதல்கள், கொழும்பிலும் அதன் சுற்றுப் புறங்களிலும் வாழ்ந்த 11 இளைஞர்கள் வெள்ளை வான்களில் பணத்திற்காகக் கடத்தப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டமை போன்ற பல முக்கிய குற்றச் செயல்கள் தொடர்பான விசாரணைகளை சில்வா மேற்கொண்டு வந்தார்.

இப்பின்னணியில் அவரது இடமாற்றம் ஜனாதிபதி மைத்திரியின் உள் நோக்கங்கள் குறித்த பலத்த சந்தேகங்களை எழுப்பியுள்ளது. இவை பத்திரிகையாளர் லஸந்த விக்ரமதுங்க அவர்களின் மகளின் பகிரங்க கடிதத்தில் விரிவாக தரப்பட்டுள்ளது. எனவே வாகர்களின் நலன் கருதி அக் கடிதம் தரப்படுகிறது.

அன்பார்ந்த ஜனாதிபதி சிறிசேன அவர்கட்கு,

இக் கடிதம் குற்றவியல் பிரிவின் பொலீஸ் இன்ஸ்பெக்டர் ஏட்றியன் நிஸான்த சில்வா அவர்களின் இடமாற்றம் சம்பந்தமானதாகும்.

கடந்த 2018ம் ஆண்டு நவம்பர் மாதம் 18ம் திகதி முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ அவர்களின் பிறந்த தினமாகும். இந்தத் தினத்தைக் கொண்டாடும் பொருட்டு அவரது உத்தியோகபூர்வ வாசஸ்தலத்திற்கு அண்மையிலுள்ள விகாரையில் ;பிங்கம’ பூஜைகளில் கலந்து கொண்டார். அங்கு உங்களின் பொலீஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவும் கலந்து கொண்டார். இந் நிகழ்வுகளின் பின்னர் முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதபய ராஜபக்ஸ, ஜயசுந்தர ஆகியோர் பொலீஸ் தலைமையகத்திற்குச் சென்று இந்த இடமாற்ற உத்தரவிற்கு நவம்பர் 18ம் திகதியிடப்பட்டு ஒப்பமிட்டுள்ளனர்.

இக் கடிதம் என்பது குழுக் கொள்ளையர்களை விசாரிக்கும் பிரிவில் முக்கிய அதிகாரி என்பதும், குறிப்பிடப்படாத முக்கிய தேவையின் நிமித்தம் எனக் குறிப்பிட்டு பொலீஸ் அதிபர் ஏட்ரியன் நிஸான்த சில்வா அவர்களை பொலீஸ் மா அதிபர் மிகவும் தயக்கத்துடன் உங்களின் வற்புறுத்தல் காரணமாக உத்தரவிட்டார் என்பதை நீங்கள் நன்கு அறிவீர்கள். இந் நிகழ்வு நீங்கள் மிகவும் சிந்தித்து மகிந்தவின் பிறந்த தினத்திற்கு வழங்கிய பரிசாகும். அது கோதபயவிற்கானதாக அல்ல.
எனது தந்தை லஸன்தவின் 6 ஆண்டுகளுக்கு முன்னர் இடம்பெற்ற கொலை தொடர்பாக விசாரணை செய்யும் பிரதான அதிகாரியாக அவர் இருந்தார். அதாவது நீங்கள் வெற்றி பெற்ற வரலாற்று நிகழ்வாக இடம்பெற்ற தேர்தலில் எனது தந்தையின் கொடுமை நிறைந்த மரணம் குறித்தும் அதே போன்ற பல நிகழ்வுகளை விசாரிப்பதாக நீங்கள் கூறினீர்கள்.
2009ம் ஆண்டு ஜனவரியில் இரண்டு அப்பாவி இளைஞர்கள் வவுனியாவில் கடத்தப்பட்டுக் கொலை செய்யப்பட்டதோடு அவர்களது சடலங்கள் அனுராதபுரத்தில் எரிக்கப்பட்டது. இத்தனைக்கும் பின்னர் குற்றச் செயல் நடந்த இடத்தில் கிடைக்கப் பெற்றதாகக் கூறி இரண்டு மோட்டார் சக்கர வண்டிகள் சாட்சியமாக முன்வைக்கப்பட்டன. பொலீஸ் உயர் அதிகாரிகளில் சிலர் எனது தந்தையால் எழுதப்பட்ட குறிப்புகள் அவை ஒருவேளை குற்றவாளிகளை அடையாளம் காட்டியிருக்கக் கூடும் என்ற போதிலும் அவற்றை அழித்துள்ளனர்.

நாம் இந்த விபரங்களை நன்கு அறிந்திருந்தோம். ஏனெனில் நிஸாந்த சில்வா கடந்த இரண்டு வருடங்களாக வவுனியா, அனுராதபுரம் என பல இடங்களுக்கும் ஓய்வில்லாமல் சென்றதோடு பல சாட்சியங்களை விசாரித்தும், பல ஆண்டுகள் கடந்த போதும் மரபணு பரசோதனை மேற்கொண்டு ஈற்றில் பொறுப்பான பொலீசாரை ( மூத்த உதவிப் பொலீஸ் மா அதிபர் உட்பட) கைது செய்ய உதவினார்.

2010ம் ஆண்டு ஜனவரி 18ம் திகதி குற்றவியல்துறைப் பொலிசார் எனது தந்தையின் மரணத்திற்கான முக்கிய குற்றவாளிகளை அதாவது ‘திரிப்போலி’ படைப் பிரிவின் உளவுப் பகுதியைச் சார்ந்த ஒருவர் மெக்கானிக் என்ற போர்வையில் நுவரெலியாவில் தனது அடையாள அட்டையைக் காட்டி ‘சிம்’ அட்டை வாங்கி அதனைப் பயன்படுத்தி எனது தந்தையைக் கொல்வதற்கான திட்டங்களைத் தீட்டியுள்ளார் என்பது தெரிய வந்தது. அச் சாட்சியம் எழுதி அந்த மை காயுமுன்னர் சகல சக்தி வாய்ந்த கோதபய ராஜபக்ஸ திரிப்போலி ராணுவப் பிரிவின் கட்டளை அதிகாரியை நாட்டின் ராஜதந்திரியாக தனது நேரடி தலையீட்டில் வெளிநாடு அனுப்பினார். இதன் காரணமாக ஒரே இரவில் அவ் விசாரணைகள் குற்றவியல் பிரிவிலிருந்து பயங்கரவாத தடுப்புப் பிரிவிற்கு மாற்றினர். இதன் விளைவாக அவ் அப்பாவி மெக்கானிக் மேல் சகல குற்றங்களும் சுமத்தப்பட்டு திரிப்பொலி ராணுவப் பிரிவினர் தங்கள் குற்றங்களை மூடி மறைத்தனர். இவை யாவற்றையும் நம்மால் அறிய முடிந்தமைக்குக் காரணம் நிஸந்த சில்வா அவர்களின் விசாரணைகளின் விளைவுகளே. இவை குறித்து மேலும் தெரிவிப்பதானால் அந்த மெக்கானிக் 2011ம் ஆண்டு அக்டோபர் மாதம் சிறைக்குள் புரிந்து கொள்ள முடியாத வகையில மரணித்துக் கிடந்தான்.
இந்த விபரங்களை நான் அறிய முடிந்தமைக்குக் காரணம் நான் அவுஸ்ரேலியாவிலுள்ள மெல்பேர்ன் இல் இருந்த போது நிஸாந்த சில்வா எனது தந்தையின் மரணம் தொடர்பாக எனது சாட்சியங்களைப் பதிவு செய்யும் பொருட்டு அங்கு வந்திருந்தார். அப்போது அவரிடம் எனது தந்தை தான் கோதபய ராஜபக்ஸவால் ‘மிக்’ விமான ஊழல் சம்பந்தமாகத் தான் கொல்லப்படுவதற்கான சூழல் இருப்பதாக அடிக்கடி தெரிவித்ததாகக் குறிப்பிட்டிருந்தேன். இந்த விபரங்களை நிஸாந்த சில்வா எதுவித அச்சமுமின்றி மவுன்ட் லவுனியா நீதிமன்றத்தில் அறிவித்திருந்தார். எனது தந்தை தெரிவித்தது சரியான விபரங்களா? யார் உத்தரவிட்டார்கள்? என்பதை நீதிமன்றமே முடிவு செய்ய முடியும்.குற்றவியல் புலனாய்வுத்தறை விசாரணைகளின்படி இலங்கை விமானப்படைக்கு வழங்கப்பட்ட நிதியின் பாதி இடைத் தரகர்களால் நடத்தப்படும் போலிக் கம்பனிக்கும், கோதபயவின் மைத்துனரான உதயங்கா வீரதுங்க இதன் இறுக்கமான பங்காளி என்பதும் எனது தந்தையால் தெளிவாகவே அம்பலப்படுத்தப்பட்டன.
நான் நிஸங்க சில்வா அவர்களைச் சந்தித்த பின்னர் அவரின் மென்மைப் போக்கு, தனித்துவம், தொழில் மீதுள்ள ஈடுபாடு என்பவற்றை அறிய முடிந்தது. அதன் பின்னர் அவரின் நடவடிக்கைகளை ஆழமாக அவதானித்தேன். மிகவும் சிக்கலான விசாரணைகளை அவர் மேற்கொண்ட விதம் போற்றுதற்குரியது. இவரே நேஷன் பத்திரிகையின் துணை ஆசிரியரான ஹீத் நொயர் அவர்கள் மீது 2008ம் ஆண்டு மேற்கொண்ட தாக்குதல் தொடர்பான பிரதான விசாரணை அதிகாரியாகவும்செயற்பட்டு பல லட்சக் கணக்கான தொலைபேசி விபரங்கள், நூற்றுக் கணக்கான சாட்சிகளைப் பதிவு செய்தல், ராணுவ உளவுப் பிரிவின் கட்டுப்பாட்டிலிருந்த பாதுகாப்பான இல்லம் வாடகைக்கு பெற்ற விபரங்கள் என பல கடுமையான முயற்சிகளின் பெறுபேறாக 8 ராணுவ உளவுப் பிரிவு அதிகாரிகள், முன்னாள் ராணுவ பிரதம அதிகாரி என்போர் கைது செய்யப்பட்டனர். இச் சந்தேக நபர்களில் 7 பேர் ‘திரிப்போலி’ என்ற வெள்ளைவான் கடத்தல்காரர்கள் எனது தந்தையின் மரணத்திலும் சம்பந்தப்பட்டமை தெரிய வந்தது. இந்த பிரபலமிக்க வெள்ளை வான் நீதிமன்றத்திற்குக் கொண்டு வரப்பட்டிருந்தது.
இவ்வாறான மரணங்களின் அடையாளங்கள் உங்கள் தேர்தல் பிரச்சாரங்களில் உங்கள் எதிரிகளின் கொடுமைகளை எடுத்தியம்பின. இவ்வாறான நேர்மை மிக்க ஒருவரை உங்களைப் போல ஒருவர் பதவி உயர்வு கொடுத்துக் கௌரவிப்பீர்கள் என்றே எண்ணியிருப்பார்கள். ஆனால் நீங்கள் தேசிய பாதுகாப்பின் நிமித்தம் ராணுத்தினர் அவரது விசாரணையில் ஒத்துழைக்க வேண்டாம் என நீதிமன்றம் ராணுவத்திடமிருந்து பதிவுகளைக் கோரிய போது உத்தரவிடாதிருந்தால் நிஸாந்த சில்வா அவர்கள் திரிப்போலி ராணுவப் பிரிவில் அமைந்துள்ள அதிகாரச் சங்கிலித் தொடரை கண்டு பிடித்திருப்பார்.
நிஸாந்த சில்வா தலமையிலான இன்னொரு விசாரணைப் பிரிவினரே பத்திரிகையாளர் பிரகீத் இக்னலியகொட அவர்களை 2010ம் ஆண்டு ஜனவரியில் இடம்பெற்ற தேர்தலுக்கு முதன் நாள் கடத்திக் கொலை செய்த இன்னொரு ராணுவ உளவுக் கொலைப் பிரிவினரையும், அவர்களது தொலைபேசி உரையாடல் பதிவுகளையும், சாட்சியங்களையும் பதிவு செய்திருந்தார். நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட விபரங்களின் அடிப்படையில் பார்க்கையில் அரச தரப்புச் சாட்சிகளாக மாறிய இரண்டு சந்தேக நபர்கள் குற்றவியல்துறை விசாரணையின் போது எக்னலியகொட அவர்களைப் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதபய ராஜபக்ஸ இன் உத்தரவுக்கு அமையவே கடத்திக் கொலை செய்ததாகக் கூறியுள்ளனர்.
கடலில் மிதக்கும் ஆயுதக் கப்பல் ‘அவன்காட்’ நிறுவனத்தின் பெயரில் செயற்பட்ட விவகாரம் விசாரணைகளின் போது தெரிய வந்ததால் 2015ம் ஆண்டளவில் நிஸந்த சில்வா தலைமையிலான குழுவினர் கோதபய ராஜபக்ஸ வெளிநாடுகளுக்குச் செல்வதைத் தடுக்குமாறு கோரியது. இவர்களின் வங்கிக் கொடுக்கல் வாங்கல்கள், ஆயுத விபரப் பட்டியல் ஆய்வு, வெடிமருந்துகள் பற்றிய விபரங்கள் எனமிக விபரமான விசாரணைகளை மேற்கொண்டனர். இவ் விசாரணைகள் உங்கள் சட்ட மா அதிபரின் 2015ம் ஆண்டு அறிக்கையில் இக் கம்பனி நாட்டின் ஆயுத மற்றும் வெடிமருந்துப் பிரமாணங்களை மீறவில்லை எனத் தெரிவித்தமையால் அவை பூச்சிய நிலைக்குச் சென்றன.
நிஸாந்த சில்வா அவர்களே 2008ம் ஆண்டு கடத்தப்பட்டுக் கொடுமையான விதத்தில் பெற்றோரிடம் பணம் பறிக்கப்பட்டுக் கொலை செய்யப்பட்ட இளைஞர்கள் பற்றிய விசாரணைகளிலும் பின்னணியில் செயற்பட்டார். இவற்றின் பின்னணியில் பல மூத்த கடற்படை அதிகாரிகள் அடையாளம் காணப்பட்டுக் கைது செய்யப்பட்டனர். இவ்வாறான சேவை நோக்கம் கொண்ட அதிகாரியினால்தான் திறந்த நீதிமன்ற சாட்சியங்களின் பிரகாரம் உங்கள் முன்னாள் கடற்படைக் கமான்டரும் தற்போதைய பிரதான பாதுகாப்பு அதிகாரி பல குற்றங்களைப் புரிந்து மறைந்து வாழும் கடற்படை அதிகாரியான குற்றவாளியைப் பாதுகாப்பதில் உடந்தையாக இருந்தமை வெளியாகியது.
இதில் பிரதான அம்சம் எதுவெனில் இந்த பிரதான பாதகாப்பு அதிகாரியை சந்தேகத்தின் பேரில் நிஸந்த சில்வாவே கைது செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. இந்த அதிகாரி நிஸந்த சில்வா புலிகளின் உளவாளி என எந்தவித ஆதாரமும் இல்லாமல் குற்றம் சுமத்தி உங்கள் பொலீஸ் மா அதிபரின் குரல்வளையைத் திருகி அந்த இனிய அதிகாரியை, பொலீஸ் கடமையில் அர்ப்பணிப்புத் தவறாத மனிதரின் பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தியுள்ளீர்கள்.
இத் தருணத்தில் நிஸந்த சில்வா அவர்களின் நிலமை குறித்துக் கவலை கொள்கிறேன். எனது சிறு பராயம் முதல் நான் அவதானித்த ஒன்று எதுவெனில் எனது தந்தை யாரையாவது அம்பலப்படுத்தினால் அது மிகவும் காரமானதாகவும், மறுத்துரைக்க முடியாததாகவும் அது சம்பந்தப்பட்டவரின் புகழை அழித்துவிடும் தரம் வாய்ந்ததாகவும் இருக்கும். அதனால் பாதிக்கப்படுபவர்கள் எந்தவித ஆதாரமும் இல்லாமல் தந்தை மீது குற்றம் சுமத்தி ‘புலியின் உளவாளி’ என்பார்கள். எனது தந்தை ‘மிக்’ விமான ஊழல் தொடர்பாக எழுதிய போது உதாரணமாக பாதுகாப்பு அமைச்சு எனது தந்தையைப் புலியின் உளவாளி, சன்டே லீடர் பத்திரிகை புலிகளின் குரல் எனவும் தொடர்ச்சியாக கூறினர். ஆனால் உண்மை வெளியாகியது. உண்மை எப்போதும் வெளிவரும்.
உண்மை என்னவெனில் நிஸந்த சில்வா அவர்களே குற்றவியல் விசாரணைக் குழுவில் புலிகள் தரப்பில் இருந்த மிகப் பெரும் முள் ஆகும். அவர் இளைய அதிகாரியாக குற்றவியல் விசாரணைக் குழுவில் இருந்த போது 2000ம் ஆண்டு கட்டுநாயக்க விமான நிலையத் தாக்குதலின் போது தகவல்களை வழங்கி ஆதரித்து உதவிய வலைப் பின்னலை உடைத்தவராகும். இவரே 2006ம் ஆண்டில் கோதபய ராஜபக்ஸ, சரத் பொன்சேகா என்போர் மீதான கொலைத் தாக்குதல் தொடர்பான விசாரணைகளில் முன்னணியில் செயற்பட்டவராகும். புலிகளின் வலைப் பின்னல் இச் சம்பவங்களில் தொழிற்பட்டது. 2008ம் ஆண்டில் ஜெனரல் ஜானக பெரேரா கொலையிலும் காணப்பட்டது. இவரே புலிகளில் பிளவுகளை ஏற்படுத்தக் காரணமாக இருந்தார்.
இவ்வாறான தீரமும், நேர்மையும் மிக்க நிஸந்த சில்வா போன்ற பொது ஊழியனை, தேசத்தின் நாயகனை உங்களின் தற்போதைய அரசியல் கூட்டாளிகளான தகர டப்பா வீரர்களாக பவனி வருபவர்களைக் குஷிப்படுத்துவதற்காக நீங்கள் எடுத்து வரும் முயற்சிகள் நாட்டின் ஜனாதிபதியின் அந்தஸ்தினை மலினப்படுத்துவது போல உங்கள் முன்னாள் தலைவர்கள் ஒருபோதும் செயற்பட்டதில்லை.
எனது தந்தை முன்னாள் ஜனாதிபதிகளான சந்திரிகா குமாரதுங்க, மகிந்த ராஜபக்ஸ ஆகியோரிடையே பலத்த கருத்து வேறுபாடுகள் கொண்டிருந்தார். பல முடிவுகளைத் தவிர்த்திருக்கலாம் எனத் தெரிவித்ததுண்டு. ஆனால் இந்த இருவரும் ஒருபோதும் எனது தந்தையை புலிகளின் உளவாளி எனத் தரக் குறைவாகக் கூறியதில்லை. ஆனால் அதிலிருந்து விலகிய கோதபய ராஜபக்ஸ, தற்போது நீங்களும் சிறு மனிதர்களாகவே தென்படுகிறீர்கள்.

நீங்கள் அரசியல் அமைப்பின் பிரகாரம் செயற்படுவதாக சத்தியப் பிரமாணம் எடுத்தீர்கள்,அதன் நோக்கம் உங்கள் பிரதான பாதுகாப்பு அதிகாரியை அல்லது வெள்ளை வான் கடத்தல்கள் மூலம் ஆட்சி நடத்தியவர்களைப் பாதுகாக்க அல்ல என்பதை ஞாபகமூட்ட விரும்புகிறேன்.இக் குற்றங்களைப் புரிந்த குற்றவாளிகள் யார்? என்பதை நானோ அல்லது நீங்களோ அறியோம். நிஸந்த சில்வா போன்ற தளராத நேர்மை மிக்க அதிகாரிகள் நீங்கள் அவர்களின் கால்களை வெட்டினாலும் விசாரணைகளை மேற்கொண்டு நீதி மன்றத்தின் மூலம் தண்டனை வழங்கப்படும்.
எமது பணி எதுவெனில் நாட்டின் குற்றவியல் நீதித்துறை விசாரணை செய்யும் அதிகாரிகளுக்குப் பூரண ஆதரவு வழங்குவதை உறுதி செய்வதாகும். என்னைப் பொறுத்த வரையில் சாட்சி என்ற வகையில் கேள்விகளுக்கு உண்மையாகவும், முழுமையாகவும் பதிலளிக்கக் கடமைப்பட்டுள்ளேன்.
அரசின் தலைவர் என்ற வகையில் உங்கள் பணி என்பது தனிப்பட்ட உறவுகள், அரசியல்களுக்கு அப்பால் சட்டத்திற்கு முன்னுரிமை கொடுப்பதாகும். அதன் அர்த்தம் என்னவெனில் விசாரணை புரியும் அதிகாரிகள் உண்மையை வெளிக் கொணர்வதற்காக, தகுதி வாய்ந்த நீதிமன்றத்தின் முன்னிலையில் சமர்ப்பிப்தற்காக அரசு என்ற வகையில்; தேவையான ஏற்பாடுகளை, வசதிகளை வழங்குதல், அதற்கான அரசியல் பலத்தையும், ஆதரவையும் கொடுத்தல் வேண்டும்.
இவற்றிற்கும் மேலாக கடமை உணர்வோடு நாடு முழுவதும் பணி புரியும் நிஸாந்த சில்வா போன்ற அதிகாரிகளுக்குப் பதிலடி அல்ல மரியாதை கிடைக்கும் என்பதை உறுதி செய்வதே உங்கள் பணியாக அமையும்.
நாட்டிலுள்ள குற்றவியல் விசாரணைத் திணைக்களம், சுயாதீன ஆணைக் குழுக்களான தேசிய பொலீஸ் ஆணைக்குழு, அரசியல் அமைப்பு சபை என்பவற்றில் எனக்கு நம்பிக்கை உண்டு. அவை உங்களின் அப்பட்டமான அதிகார துஷ்பிரயோகத்தினை மேற்கொண்டு தப்பிக்க அனுமதிக்க மாட்டார்கள். 
உங்களுக்கு முன்னால் இரண்டு தெரிவுகள் உண்டு. உங்கள் வரலாறு நிலைக்க வேண்டுமெனில் தவறான ஆலோசனை காரணமாக குற்றவியல் விசாரணைக் குழவிலிருந்து மாற்ற எடுத்த நிஸந்த சில்வா தொடர்பான முடிவினை உடனடியாக மாற்றி அவரது கடமையை மேற்கொள்ள அனுமதிக்க வேண்டும்.

இல்லையேல் சுயாதீன பொலீஸ் ஆணைக்குழு அல்லது நீதிமன்றம் உங்கள் முடிவு குறித்து தெரிவிக்கும் வரை காத்திருக்க வேண்டும். இவ்வாறு நீங்கள் செயற்பட்டால் நாட்டின் சில முக்கிய குற்றவியல் வழக்கு விசாரணைகளைத் தடுக்க ஜனாதிபதி எடுத்த முயற்சிகள் தோல்வி அடைந்தன என வரலாறு எழுதப்படும். தவறுகளை மேற்கொள்ளாதீர்கள். எனது தந்தைக்கு வழங்கும் நீதிக்குக் குறுக்கே நின்று தடுக்க நீங்கள் எண்ணினால் அதில் தோல்வி அடைவீர்கள்.
உங்கள்நேர்மைக்குரிய
அகிம்சா விக்ரமதுங்க 
தேனீ Vol:17 22.11.2018
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.