மைனாரிட்டி பிரதமர் மஹிந்தஇன்று எமது நாட்டில் எண்ணிக்கை சம்பந்தமான பிரச்சினையே பெரும் பிரச்சினையாக காணப்படுகின்றது. ஜனநாயகம் என்பது எண்ணிக்கை சம்பந்தமானதே. அதாவது வாக்குகளின் எண்ணிக்கையை வைத்தே ஆட்சி அதிகாரங்கள் தீர்மானிக்கப்படுகின்றன.

2015ஆம் ஆண்டு ஜனவரி 8ஆம் திகதி நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலிலே மைத்திரிபால சிறிசேன 62 லட்சத்து 50 ஆயிரம் வாக்குகளைப் பெற்றதனால் தேர்தல் ஆணையாளரினால் அதிகப்படியான வாக்குகளைப் பெற்ற மைத்திரி ஜனாதிபதியாக பிரகடனப்படுத்தப்பட்டார். இவருக்கு அடுத்ததாக 58 லட்சம் வாக்குகளைப் பெற்ற மஹிந்த தோல்வியடைந்தார். வாக்குகள் குறைவாக எடுத்த மஹிந்தவை தேர்தல் ஆணையாளர் ஜனாதிபதியாக பிரகடனப்படுத்தவில்லை. மஹிந்த ஒரு வாக்கு தானும் மைத்திரியை விட அதிகமாக எடுத்திருந்தால் மகிந்த ஜனாதிபதியாக வந்திருப்பார். இரண்டுமுறை மாத்திரம்தான் ஒருவர் ஜனாதிபதியாக இருக்க முடியும் என்ற சட்டத்தை திருத்தி தான் காலமெல்லாம் ஜனாதிபதியாக இருக்கத்தக்க சட்டத்தை இயற்றி தனது அதிகாரத் தாகத்தை வெளிப்படுத்திய மஹிந்தவை வீட்டுக்கு அனுப்ப மைத்திரியால் முடிந்தது. இந்த வாக்குகளின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது தான் காரணம். 

இதே எண்ணிக்கையை அடிப்படையாகக் கொண்ட சட்டத்தின் மூலம் மைத்திரி பதவிக்கு வந்து விட்டு அதே எண்ணிக்கையை பெரும்பான்மையாக வைத்திருக்கின்ற ரணிலுக்கு பிரதமர் பதவியை மறுத்தது எந்த வகையில் நியாயம்? எந்த வகையில் மனச்சாட்சிக்கு உட்பட்டது? என்பது புரியவில்லை. மைத்திரி தனக்கு ரணில் மீதுள்ள விருப்பு வெறுப்புக்கமைய  தீர்மானம் எடுக்க முடியாது. எண்ணிக்கையை வைத்துதான்  தீர்மானிக்க முடியும்.

2015ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெற்ற மைத்திரி ரணிலை பிரதமராக நியமிக்கும்போது ரணில் வெறும் 45 ஆசனங்களை மாத்திரம் வைத்திருந்தார் என்ற வாதம் தற்போது முன்வைக்கப்படுகின்றது. அன்று இருந்த சூழல் வேறு இன்று இருக்கும் சூழல் வேறு. அன்று ஜனாதிபதித் தேர்தலின் போது தான் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டால் தெரிவு செய்யப்பட்டு 24 மணித்தியாலங்களி னு ள் ரணிலை பிரதமர் ஆக்குவேன் என மைத்திரி இந்நாட்டு மக்களின் ஆணையை கோரியிருந்தார். அந்த ஆணை மைத்திரிக்கு கிடைத்தது. இதனால் மைத்திரி பதவியேற்று 24 மணித்தியாலம் வரை காத்திராமல் உடனடியாகவே ரணிலை பிரதமராக நியமித்தார். தற்போது மஹிந்த கூறுவதுபோல் இந்தப் பிரச்சினையை பாராளுமன்றத்தில் உள்ள 225 பேர் இடம் கேட்காமல் நாட்டிலுள்ள ஒரு கோடியே 50 லட்சம் வாக்காளர்களிடம் இப் பிரச்சினைக்கான தீர்வை கோருவோம் என்பது போல் மைத்திரியும் ஒரு கோடியே 50 லட்சம் வாக்காளர்கள் இடம் அனுமதியை பெற்று தான் ரணிலை பிரதமராக நியமித்தார். அதுமாத்திரமல்லாது மஹிந்த தோல்வி அடைந்ததும் அலரி மாளிகையை விட்டு  வெளியேறுவதற்கு முன் ரணிலை கூப்பிட்டு கதைத்துவிட்டு அலரிமாளிகையை ரணிலிடம் ஒப்படைத்து விட்டுத்தான் சென்றார். ஏன் மஹிந்த மைத்திரியிடம் கதைத்துவிட்டு மைத்திரியிடம் அலரிமாளிகையை ஒப்படைத்து விட்டுச் செல்லவில்லை? ஏனெனில் நாட்டில் மைத்திரியை விட ரணிலே செல்வாக்குமிக்கவர் என மஹிந்தவே கருதியதனால் தான் ரணிலிடம் ஒப்படைத்து விட்டுச் சென்றார். மஹிந்தவின் இந்தச் செயலும் மைத்திரி ரணிலை இந்நாட்டில் அதிகம் செல்வாக்கு மிக்கவர் எனக் கருதுவதற்கு ஒரு காரணமாக அமைந்து. ரணிலை பிரதமராக நியமித்தார்.

அதுமாத்திரமல்லாமல் மைத்திரி பதவி ஏற்ற போது இருந்த பிரதமர் மைத்திரி நியமித்த பிரதமர் அல்ல. மஹிந்த நியமித்த ஊனமுற்ற ஒருவரே பிரதமராக இருந்தார். மஹிந்த நியமித்த அந்த அங்கவீனமான பிரதமரை நீக்கி தான் நியமித்த பிரதமர் இருப்பதுதான் சரியென மைத்திரி ரணிலை நியமித்தார். 

பாராளுமன்றத்திலே ரணிலுக்கு 45 பேர் தான் உள்ளார்கள், இதனால் ரணிலுக்கு பெரும்பான்மை இல்லை என்று சொல்லி யாரும் பாராளுமன்றத்திலே சவாலுக்கு உட்படுத்தவில்லை. யாரும் ரணிலுக்கு எதிராக நம்பிக்கை இல்லா பிரேரணை கொண்டு வரவில்லை. தங்களுடைய ஊழல்கள் எங்கே வெளியே வந்து விடுமோ என்று பயந்து போய் வாலைச் சுருட்டிக் கொண்டு சும்மா இருந்தார்கள். அப்போது மஹிந்தவும் பாராளுமன்ற உறுப்பினராக இருக்கவில்லை. எனவே ரணிலுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டு வந்து அது வெற்றி பெற்றால் பிரதமராக நியமிப்பதற்கு இவர்களிடத்தில் ஒழுங்கான பிரதமர் வேட்பாளரும் இல்லை. 

பாராளுமன்றத்தைப் பொருத்தவரைக்கும் ரணில் ஒரு மைனாரிட்டி பிரதமர் என்பதைச் சுட்டிக்காட்டி அதற்குரிய நடவடிக்கையில் இறங்கினால்தான் காரியம் நடக்கும். உதாரணமாக பாராளுமன்றத்தின் கோரம் 25 உறுப்பினர்களாக காணப்படுகின்றது. ஆனால் 25 உறுப்பினர்களுக்கு குறைவாக இருந்து கோரம் இல்லாமல் ஒரு தீர்மானம் எடுக்கப்பட்டாலும் அது செல்லும். ஏனெனில் கோரம் இல்லை என்று எந்த உறுப்பினர்களாவது சுட்டிக் காட்டினால் தான் கோரம் இல்லை என்பதை சபாநாயகர் ஏற்றுக்கொண்டு அத் தீர்மானத்தை நிறை வேற்ற மாட்டார். மற்றபடி கோரம் இல்லாமல் இருந்தும் யாரும் அதனை சுட்டிக் காட்டப்படாத பட்சத்தில் கோரம் உள்ளதாகவே கருதப்படும். பாராளுமன்றம் கோரத்தை கவனிக்காது தீர்மானங்களை நிறைவேற்றி விட்டு பாராளுமன்றம் போயிட்டே இருக்கும். இதுதான் பாராளுமன்ற வழக்கம். இதுபோலத்தான் ரணிலுக்குச் செல்வாக்கில்லை என்பதை யாரும் சுட்டிக்காட்டி அவருக்குரிய நடவடிக்கையில் இறங்கவில்லை. 

ஆனால் நாட்டிலே இன்று பாராளுமன்றத்தில் நடக்கின்ற விடயம் வேறுவிதமானது. மஹிந்த வெறும் மைனாரிட்டி பிரதமர் என்பது பாராளுமன்றத்தில் கேள்விக்கு உட்படுத்தப்பட்டு நம்பிக்கையில்லா பிரேரணை நிறைவேற்றப்பட்டு அது நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே வேறு பிரதமரை ஜனாதிபதி நியமிக்க வேண்டும் பிரதமராக இருக்க பெரும்பான்மை தேவையில்லை என்று மஹிந்த அடம்பிடிப்பது பிழை. எனவே ரணில் பிரதமராக அன்று நியமித்ததை இன்று நடக்கின்ற நிலமையோடு ஒப்பிட முடியாது. 

இன்று மஹிந்த பொதுத் தேர்தலை நடத்த வேண்டும் என கோரிக்கை விடுகின்றார். அதேநேரம் ரஊப் ஹகீம், ரணில் போன்றோர் ஜனாதிபதித் தேர்தலை நடாத்த வேண்டும் என பதிலுக்கு கூறுகின்றனர். பாராளுமன்றம் குழப்பமான சூழ்நிலையில் இருக்கின்ற காரணத்தினால் இந்த 225 பேரிடமும் தீர்மானம் பெறாமல் நாட்டில் உள்ள 1 கோடியே 50 லட்சம் வாக்காளர்களிடம் தீர்வை கோரும் முகமாக பாராளுமன்றத் தேர்தலை நடத்த வேண்டும் என மஹிந்த கோருகின்றார். 
உண்மையிலேயே குழம்பிய நிலையில் பாராளுமன்றம் இருக்கின்றதா? அல்லது குழம்பிய நிலையில் ஜனாதிபதி இருக்கின்றாரா? என்று நாங்கள் பார்க்கவேண்டும். ரணிலுக்கு பெரும்பான்மை இருக்கின்ற போதே ரணிலுக்கு பெரும்பான்மை இல்லை என மைத்திரி தான் குழம்பிப் போயிருந்தார். மைத்திரி தான் குழம்பிய நிலையில் தனக்கு பாராளுமன்றத்தைக் கலைக்கும் அதிகாரம் இருப்பதாகக் கற்பனை செய்து கொண்டு பாராளுமன்றத்தைக் கலைத்தார். ஆனால் அதற்கு எதிராக உச்ச நீதிமன்றம் stay கொடுத்தது மைத்திரிக்கு பெரும்பான்மை எல்லாம் சிறுபான்மையாகவும் சிறுபான்மை எல்லாம் பெரும்பான்மையாகவும் தெரிகின்றது. ஐக்கிய தேசிய முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர்களின் 107 எண்ணிக்கையை விட பொதுஜன ஐக்கிய முன்னணியின் 95 உறுப்பினர்களின் எண்ணிக்கை தான் கூட என குழம்பிய மைத்திரிக்கு விளங்குகின்றது. கணக்கிலேயே ரொம்ப பலவீனமாக இருக்கின்றார். எனவே குழம்பி இருக்கின்ற மைத்திரியை என்ன செய்வது? ஜனாதிபதித் தேர்தலை நடாத்தி தான் 1 கோடியே 50 லட்சம் வாக்காளரிடம் தீர்வுக்கு விடவேண்டும். 

இதனைவிடுத்து மைத்திரியால் குழப்ப நிலைக்குத் தள்ளப்பட்ட பாராளுமன்றத்தை கலைத்து பாராளுமன்றத் தேர்தலை நடாத்துவதால் எந்தப் பிரயோசனமும் இல்லை அவ்வாறு பாராளுமன்றத் தேர்தலை நடாத்தி பாராளுமன்றத் தேர்தலின் பின் ஒரு கட்சி 115 ஆசனங்களையும் இன்னுமொரு கட்சி 90 ஆசனங்களையும் பெற்று கணக்கில் பலவீனமாக இருக்கின்ற மைத்திரி 90 ஆசனங்கள் தான் பெரிது என்று அக்கட்சித் தலைவருக்கு பிரதம மந்திரியாக முடிசூடி விட்டால் என்ன செய்வது? அந்த பிரதம மந்திரி பெரும்பான்மையை காட்ட வசதியாக பாராளுமன்றத்தை ஒத்திவைப்பார், தேவைப்பட்டால் கலைப்பார். எனவேதான் பாராளுமன்றத் தேர்தலை நடத்துவதால் எந்தப் பயனும் இல்லை. எனவேதான் எதிர்வரும் ஜனவரி மாதத்திலிருந்து மைத்திரிக்கு எந்த நேரமும் ஜனாதிபதித் தேர்தலை நடாத்தும் அதிகாரம் வந்துவிடும். எனவே பொறுத்ததோடு பொறுத்திருந்து இன்னும் ஆறு வாரங்களில் ஜனாதிபதித் தேர்தலை நடத்துவது தான் சிறந்தது. இவ்வாறு அதிகார துஷ்பிரயோகம் செய்கின்ற ஜனாதிபதி நாட்டுக்குத் தேவையா? என மக்களிடம் கேட்கலாம். இவருக்கு அதிகாரம் வழங்கப்பட்டிருப்பது துஷ்பிரயோகம் செய்வதற்கு அல்ல. குழப்ப நிலையில் உள்ள ஜனாதிபதி சரியாகினால் குழம்பிய நிலையில் உள்ள பாராளுமன்றமும் தானாக சரியாகிவிடும். 

பொதுத் தேர்தலை நடாத்துவதற்கு விருப்பமில்லாமல் பாராளுமன்றக் கலைப்பை எதிர்த்து ரணில் தரப்பினர் நீதிமன்றம் சென்று தடை உத்தரவு பெற்றிருக்கின்றார்கள் என்ற குற்றச்சாட்டை மஹிந்த தரப்பினர் முன்வைக்கின்றனர். 

ஐந்து வருடங்கள் ஆட்சி செய்வதற்கு ரணிலுக்கு மக்கள் ஆணை வழங்கியிருக்கிறர்கள். ரணிலும் தன்னுடைய பொருளாதாரக் கொள்கையை ஐந்து வருடங்களுக்குத் திட்டமிட்டிருக்கிறார். ஐந்து வருடங்களின் முடிவில்தான் இதனுடைய நன்மைகளை நாட்டு மக்கள் புரிந்துகொள்வார்கள். இது இல்லாதிருக்க மூன்று வருடங்களில் பாராளுமன்றத் தேர்தலை நடாத்துவதற்கு ரணில் எவ்வாறு முன்வருவார். ஆட்சியை பாரம் எடுக்கும்போது நாட்டிலே கஜானாக்கள் காலியாக இருந்தன. ட்ரில்லியன் கணக்கில் கடன்கள் பெறப்பட்டிருந்தன. நாடு மிக மோசமான அதலபாதாளத்தில் செல்வதை அறிந்த மஹிந்த தனக்கு ஆறு வருடங்கள் ஜனாதிபதியாக இருக்க அவகாசம் இருந்தும் இனிமேல் நாட்டை ஒரு நாளைக்கு கூட முன்னெடுத்துச் செல்ல முடியாது. அவ்வாறு முன்னெடுத்துச் சென்றால் நாட்டிலே பொருட்களின் விலை மேலும் உயர்ந்து மக்கள் தொழில் அற்றவர்களாகி தன் மீது வெறுப்பு ஏற்பட்டு ஆறு வருட முடிவில் தான் தோல்வி அடைய நேரும் என்பதை உணர்ந்த மஹிந்த நான்கு வருட முடிவில் ஜனாதிபதித் தேர்தலை நடாத்த முன்வந்தார். இல்லாவிட்டால் தான் ஆள வேண்டிய இன்னும் இரண்டு வருடங்களை அதிகார வெறி பிடித்த மஹிந்த இழப்பாரா? இல்லை. 

நாட்டின் பொருளாதாரம் மிக மோசமாக இருந்தது தான் நான்கு வருடங்களில் மஹிந்த தேர்தலை நடாத்துவதற்கு உள்ள ஒரே காரணம். ஆனால் இன்னும் ஒரு காரணமும் ஜனாதிபதித் தேர்தலை முற்படுத்தி நடாத்த இருந்தது. அதுதான் ஜோசியர் ஒருவர் தேர்தலை இப்போது நடத்தினால்தான் வெல்லலாம் என மஹிந்தவுக்கு கயிற்றை கொடுத்தது. பின்னர் ஜோசியர் நாட்டை மஹிந்தவிடமிருந்து காப்பாற்றவே இவ்வாறான கயிற்றைக் கொடுத்தேன் என்று கூறியது வேறு விடயம்.

எனவே இவ்வாறான மோசமான நிலையிலிருந்த நாட்டைக் கட்டி எழுப்புவது என்றால் வெறும் மூன்று வருடங்கள் போதுமா? போதாது. எடுத்த மாத்திரத்தில் நாட்டிலுள்ள பள்ளத்தை நிவர்த்தி செய்ய ரணில் ஒன்றும் வித்தைக்காரன் இல்லையே. அவருடைய கம்ரெலிய, என்டர்ப்ரைஸ் ஸ்ரீ லங்கா போன்ற திட்டங்கள் வெற்றிபெற 5 வருடங்கள் தேவை. இவ்வாறு இருக்கும்போது மூன்று வருடங்களில் எவ்வாறு ரணில் ஒரு பொதுத் தேர்தலுக்கு முகம்கொடுக்க துணிவார்? எமது நாட்டு மக்கள் இந்த அரைகுறை நிலையை புரிந்து கொள்ளக் கூடியவர்களா? இவ்வாறுதான் 1970ஆம் ஆண்டு முன்னாள் பிரதமர் ஸ்ரீமாவோ RD. பண்டாரநாயக்க பிரதமராக ஆட்சிப் பொறுப்பை ஏற்றார். அவர் உள்ளூர் உற்பத்தியை மேம்படுத்துகின்ற ஒரு பொருளாதாரக் கொள்கையை நடைமுறைப்படுத்தினார். இதே கொள்கையை இந்தியாவிலே பாரதப் பிரதமர் இந்திரா காந்தியும் கூட நடைமுறைப்படுத்தினார். ஆனால் துரதிஷ்டவசமாக ஸ்ரீ மாவின் கொள்கையை புரிந்து கொள்ளாத மக்கள் 1977 ஆம் ஆண்டு தேர்தலிலே அவரைத் தோற்கடித்தனர். ஆனால் இந்தியாவில் அதே கொள்கையைத் தொடர்ந்து பின்பற்றியமையால் இன்று இந்தியா வல்லரசாக மிளிர்கின்றது. ஆனால் இலங்கையிலே காலத்துக்குக் காலம் கொள்கையை மாற்றுவதனால் பொருளாதாரம் மிக மோசமாக உள்ளது. 

இதே நிலமைதான் ரணில் மூன்று வருட முடிவில் தேர்தலுக்குச் சென்றால் இடம்பெறும். குறை வேலையை குசவனிடமும் காட்டக் கூடாது என்பார்கள். அதுபோல் அரைகுறையான வேலையை மக்களிடம் காட்ட முடியாது. எமது நாட்டு மக்களை தெரியும்தானே, மூக்கிலே கோபத்தை கொண்டு திரிபவர்கள் பொறுமையாக இருந்தால் நாடு நல்ல பொருளாதார நிலைமைக்கு வரும் என்பதை உணராதவர்கள் எதிர்காலத்தைப் பற்றி யோசிக்காமல் அன்றைய நிலைமையை யோசிப்பார்கள். துரதிஷ்டவசமாக ரணிலுக்கு ஆறு வருடங்கள் ஆட்சி செய்கின்ற சந்தர்ப்பம் எப்போதும் கிடைப்பதில்லை. குறைந்தது ஆறு வருடங்களாவது ஒருவருக்கு ஆட்சியை கொடுத்தால் தானே அதன் நன்மை தீமை மக்களுக்குப் புரியும். ரணிலின் பொருளாதாரக் கொள்கையின் வெற்றி தோல்வியை ரணிலும் அறிந்து கொள்ள நாட்டு மக்களுக்கும் ரணில் அறிவிக்க ஒரு சந்தர்ப்பம் இல்லாமல் இருக்கின்றது. 

தற்போது அவசரப்பட்டு அல்லது கோபப்பட்டு மைத்திரி ரணிலிடம் இருந்த அரசாங்கத்தை பிடுங்கி மஹிந்தவிடம் கொடுத்து விட்டதால் இனி மஹிந்தவிடமிருந்து அரசாங்கத்தை மைத்திரி இயலுமென்றால் வாங்கி பார்க்கட்டுமே. சிறு பிள்ளைகளிடம் ஒரு பொருளைக் கொடுத்தால் கூட அதை மீண்டும் அப்பிள்ளைகளிடமிருந்து வாங்க எவ்வளவு கஷ்டப்பட வேண்டியிருக்கிறது. உதாரணமாக TV பார்ப்போம் என்று TVக்கு முன்னால் குடும்பமாக உட்கார்ந்தால் குடும்பத்தில் ஆக சிறியவர் ரிமோட்டை எடுத்துக் கொள்கின்றார். அச்சிறியவரிடமிருந்து ரிமோட்டை பெற்றுக்கொள்ள முடியாமல் குடும்பத்தவர் அனைவரும் கார்ட்டூன் பார்த்துக் கொண்டிருக்கின்றனர். நாம் விரும்பிய நிகழ்ச்சியை TVயில் பார்க்க முடிகின்றதா? ரிமோட்டை திரும்பப் பெறுவதில் எமக்கு இவ்வளவு கஷ்டம் இருந்தால் அரசாங்கத்தை மஹிந்தவிடம் கொடுத்துவிட்டு மீண்டும் மைத்திரி திரும்பப் பெறுவது என்பது சாதாரண விடயமா? 

இன்று மைத்திரி தான் முன் வைத்த காலை பின் வைக்கப் போவதில்லை என்கின்றார். அவ்வாறு மைத்திரி விடாப்பிடியாக இருக்க முடியாது. முன் வைத்த காலை பின் வைக்க மாட்டேன் என்றால் கயிறு இழுத்தல் போட்டிக்கு கூட மற்றவர்கள் மைத்திரியை சேர்த்துக்கொள்ள மாட்டார்கள். சித்திரை பெருநாட்களில் எமது கிராமங்களில் கயிறு இழுத்தல் போட்டி நடைபெறுவது எமக்குத்தெரியும். கயிறு இழுத்தல் போட்டியில் பின்னுக்கு இழுத்த அணியே வெற்றி பெற்ற அணியாக கருதப்படும். முன்னுக்கு கால் வைத்தவர்களின் அணி தோல்வி அடைந்தவர்கள் ஆக கருதப்படும். முன் வைத்த காலை பின் வைக்க மாட்டேன் என்ற கொள்கையை மைத்திரி கயிறு இழுத்தல் போட்டியிலும் செயற்படுத்தினால் மைத்திரி உடைய அணி தோற்று விடும். எனவே மைத்திரியை கயிறிழுத்தல் போட்டியில் கூட யாரும் சேர்த்துக் கொள்ள மாட்டார்கள். 

டெங்கு  பரிசீலனைக்கு வரும்  PHI மார்களுக்கு  வீட்டிலே கிடக்கும்  டயர்களை எவ்வாறு  கண்ணிலே காட்ட முடியாதோ  அதேபோல  ரணிலை மைத்திரிக்கு கண்ணிலே  காட்ட முடியாதிருக்கின்றது. எனவே மைத்திரி தான் விட்டுக்கொடுக்க வேண்டும். 

ஆரம்பத்தில் மஹிந்தவுக்கு பெரும்பான்மை இருக்கும் என்ற சந்தேகம் இருந்தாலும் இப்போது மஹிந்தவுக்கு பெரும்பான்மை இல்லை என்பது துலாம்பரமாக தெரிகின்றது. மைத்திரி ரணிலின் ஆட்சியை இரண்டு கட்டமாக பிரிக்கலாம் அதாவது அரசாங்கத்தை மாற்றுவதற்கு முன் உள்ள உறவை முதலாம் கட்டமாகும் அரசாங்கத்தை மாற்றியதற்கு பின்னர் உள்ள உறவை இரண்டாம் கட்டமாகவும் கொள்ளலாம் எனவே ரணிலின் ஒளியில் வெளிச்சத்திற்கு வந்த மைத்திரி ரணிலோடு சேர்ந்து இரண்டாம் கட்டமாக பயணிக்கின்ற புதிய பாதையை மைத்திரி தான் கண்டுபிடிக்க வேண்டும்.

ஆக்கம்
மர்சூக் அகமட் லெவ்வை


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.