-ஏ.எச்.ஏ. ஹுஸைன்-
நாட்டின் சுபீட்சத்தையும், மக்களின் நலனையும் கருத்தில் கொண்டு ஜனாதிபதி சிறந்த தீர்மானத்தை முன்வைக்க வேண்டும் என்பதை ஏறாவூர் நகர சபை சார்பாக முன்வைப்பதாக ஏறாவூர் நகர சபைத் தலைவர் றம்ழான் அப்துல் வாஸித் தெரிவித்தார்.
ஏறாவூர் நகர சபையின் மாதாந்த அமர்வு நகர சபை கேட்போர் கூடத்தில் திங்கட்கிழமை 19.11.2018 இடம்பெற்றது.
நிகழ்வை ஆரம்பித்து வைத்து ஏறாவூர் நகர சபையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் முஸ்லிம் தமிழ் உறுப்பினர்கள் மத்தியில் ஆரம்ப உரை நிகழ்த்திய நகர மேயர் மேலும் கூறியதாவது, சமீப சில நாட்களாக நாடாளுமன்றத்தில் இடம்பெறும் விரும்பத் தகாத குழப்ப நிலை ஆரோக்கியமானதல்ல, அந்த விடயங்கள் நாட்டு மக்களால் கேலிக்கும் கிண்டலுக்கும் உரியதாகப் பாரக்கப்படுகிறது.
சட்டமியற்றும் நாடாளுமன்றத்தின் மதிப்பு மக்களிடத்தில் கேலிக்குரியதொன்றாக மாறியிருக்கிறது.
நாடு தளம்பல் நிலையிருந்தால் நாட்டுக்கு கிடைக்கவேண்டியிருக்கும் அத்தனை அனுகூலங்களும் பாதிக்கப்படும், உல்லாசத்துறை ஆர்வமில்லாத பாதுகாப்பற்றதாக மாறிவிடும், வெளிநாட்டு முதலீடுகள் ஸ்தம்பித்து விடக் கூடிய சாத்தமியங்கள் உண்டு,
இந்த நாடு பாரம்பரியமாக பாஸிஸ வாதத்தையோ சர்வாதிகாரத்தையோ பின்பற்றும் ஒரு நாடு அல்ல, இது ஒரு ஜனநாயக விழுமியங்களைப் பின்பற்றி வந்திருக்கின்ற வரலாறுகளைக் கொண்டிருக்கின்ற நாடு என்பதால் நாட்டின் உயர் தலைவர் என்கின்ற வகையில் ஜனாதிபதி நாடாளுமன்றத்தைக் குழப்பங்களிலிருந்து மீட்டெடுத்து ஜனநாயகத்தை மலரச் செய்யும் கைங்கரியங்களில் உடனடியாகவே ஈடுபடவேண்டும்' என்றார்.
நகர சபையின் மாதாந்த அமர்வில் உள்ளூராட்சி திணைக்களத்தினால் மீளளிப்பு செய்யக்கூடிய வகையில் நகரசபைக்கு இணைப்பு செய்யப்பட்டுள்ள பட்டதாரிப் பயிலுநர்களுக்கான மாதாந்த வேதனத்தை நகரசபை நிதியில் இருந்து வழங்க அனுமதி கோரல்,
வெள்ள இடராயத்த வேலைத்திட்டத்துக்காக ஏறாவூர் நகர சபை வாகனங்கள் மற்றும் ஆளணி வளங்களை நகரசபை எல்லைக்கு அப்பாற்பட்ட பகுதிகளிலும் பயன்படுத்த அனுமதி வழங்குதல்,
அனர்த்த காலங்களில் பொது அமைப்புக்களுடன் இணைந்து 24 மணி நேரமும் இயங்கக் கூடிய வகையில் அலுவலக ஒழுங்கமைப்பு ஒன்றினை நகரசபையில் ஏற்படுத்துதல்,
ஏறாவூர் நகர வர்த்தக நிலையங்களுக்கு முன்பாக வடிகான்களுக்கு மேலால் பொருட்களை காட்சிப்படுத்தி வைத்திருக்கும் வர்த்தகர்களிடம் விசேட கட்டண அறவீடு மேற்கொள்ளல் தொடர்பான விடயங்களும் ஆராயப்பட்டன.
Post a Comment