(S.சஜீத்)
'வாருங்கள் தொழுவோம்' எனும் மகுடத்தின் கீழ் சிறார்களின் தொழுகையை நெறிப்படுத்தி அதன்பால் ஆர்வத்தை ஏற்படுத்துவதற்காக, 7 வயதை அடைந்த மாணவர்களுக்கு பிஸ்மி அல்குர்ஆன் பாடசாலையினால் வருடந்தோரும் நடாத்தப்பட்டு வரும் தொழுகை பயிற்சி முகாம் இம்முறையும் 2018-11-11 ஞாயிற்றுக்கிழமை காலை 07.30 மணி முதல் மதியம் 01.30 மணிவரை காத்தான்குடி கர்பலா அல்மனார் ஜும்ஆ பள்ளிவாயலில்; நடைபெற்றது.
அல்குர்ஆன் பாடசாலை என்பது வெறுமனே அல்குர்ஆனை ஓதப்பயிற்றுவிப்பதோடு தமது பணியை சுருக்கிக் கொள்ளாமல் சிறார்கள் தமது அன்றாட வாழ்வை ஒழுங்கு படுத்தவும் இஸ்லாமிய வாழ்க்கையை பேணி நடக்கவும் வழிகாட்ட வேண்டும். அந்த வகையில் பிஸ்மி அல்குர்ஆன் பாடசாலை தமது மாணவர்களை தொழுகை பற்றி அறிவூட்டுவதையும் அதனை நடைமுறை ரீதியாக பழக்குவதையும் இலக்காகக் கொண்டு தொழுகை பயிற்சி முகாமை நடாத்தி வருகின்றது.
பிஸ்மி அல்குர்ஆன் பாடசாலையின் பணிப்பாளர் அஷ்ஷெய்க் A.R.M அஸ்ஹர் நளீமியின் நெறிப்படுத்தலில் இடம்பெற்ற மேற்படி தொழுகை பயிற்சி முகாமில் பிஸ்மி இஸ்லாமிய பாடசாலையின் பணிப்பாளர் அஷ்ஷெய்க் MSM நுஸ்ரி நளீமி அவர்கள் பயிற்றுவிப்பாளராக கலந்து கொண்டார்.
இப்பயிற்சி முகாமில் அதான், இகாமத் சொல்லும் முறைகள், வுழு, தயம்மம் செய்யும் முறைகள், தொழுகையின் ஒழுங்குகள், அதில் ஓதும் அவ்றாதுகள், தொழுகையின் பின் ஓதும் அவ்றாதுகள் என பல்வேறு விடயங்கள் காணொளிகள், பயிற்சிகள், விளையாட்டுக்கள், கார்டூன்களினூடாக ஒவ்வொரு மாணவருக்கும் தனிப்பட்ட கவனம் செலுத்தி பயிற்றுவிக்கப்பட்டது.
பிஸ்மி அல்குர்ஆன் பாடசாலையில் கல்வி பயிலும் 7 வயதை அடைந்த மாணவர்களில் 32 மாணவர்கள் இத் தொழுகை பயிற்சி முகாமினூடாக பயிற்றுவிக்கப்பட்டதோடு தொழுகையின் முக்கியத்துவத்தை உணர்ந்த சிறார்கள் தாம் எம் மீது கடமையாக்கப்பட்டுள்ள தொழுகைகளை உரிய முறையில் நிறைவேற்றுவோம் என உறுதிமொழியும் வழங்கினர்.
இந் நிகழ்வில் காத்தான்குடி ஜம்இய்யத்துல் உலமாவின் தலைவர் மௌலவி MI அப்துல் கையூம் (ஷர்கி), தஜ்வீதுல் குர்ஆன் கலாசாலையின் அதிபர் மௌலவி முஸ்தபா (பஹ்ஜி), ஜாமிஅதுல் பலாஹ் அறபுக் கல்லூரியின் விரிவுரையாளர் மௌலவி MBM பாஹிம் (பலாஹி), மௌலவியா பர்ஸானா (இஸ்லாஹி) ஆகியோர் அதிதிகளாக கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் உரையாற்றிய பிஸ்மி அல்குர்ஆன் பாடசாலையின் பணிப்பாளர் அஷ்ஷெய்க் MRM அஸ்ஹர் நளீமி அவர்கள், சிறுவர்களை மையப்படுத்திய எமது பணியில் காலத்தின் தேவை கருதி மேற்படி தொழுகை பயிற்சி முகாமை எதிர்வரும் வருடம் முதல் நாடளாவிய ரீதியில் நடாத்த திட்டமிட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார். அத்தோடு நிகழ்வின் இறுதியில் கலந்து கொண்ட அனைத்து மாணவ மாணவிகளுக்கும் சான்றிதழ்களும், சிறார்களுக்காக அழகிய முறையிலும், எளிய நடையிலும் படவிளக்க வழிகாட்டலுடன் வடிவமைக்கப்பட்ட 'வாருங்கள் தொழுவோம்' என்ற தொழுகைப்பயிற்சி புத்தகமும் வழங்கி வைக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment