முஸ்லிம் தலைவர்கள் 50 கோடி பணத்திற்கும், பதவிக்கும் விலைபோகாமல் உறுதியாக இருந்தது அவர்களுக்கு முஸ்லிம் சமூகத்தின் மத்தியில் நல்லதொரு மரியாதையை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.
சென்ற வெள்ளிக்கிழமை இரவு ஜனாதிபதியினால் பாராளுமன்றம் கலைக்கப்பட்ட செய்தி அதிரடியாக வெளியாகி பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இவ்வாறு தான் சென்ற 26/10/2018 ஆம் திகதி வெள்ளிக்கிழமை இரவு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக நியமித்தும் அதன் பின் இரண்டரை மணித்தியாலங்கள் கழித்து பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை பிரதமர் பதவியில் இருந்து நீக்கியும் அதிரடிகள் இடம்பெற்றன. 

இவ்வாறு வெள்ளிக்கிழமைகள் வந்தாலே என்ன நடக்க போகிறதோ என்ற அச்சம் நாட்டு மக்களுக்கும் அரசியல் வாதிகளுக்கும் தற்போது ஏற்படுகின்றது. தனது நெருங்கிய நண்பனான சபா நாயகர் கரு ஜெயசூரிய முன்னுக்கு பின் முரணாக நடந்து கொன்டதாலும் 14ஆம் திகதி பாராளுமன்றம் கூடினால் பல கொலைகள் பாராளுமன்றத்தினுள் நிகழும் என தான் அஞ்சியதாலும் பாராளுமன்றத்தை கலைத்ததாக ஜனாதிபதி கூறினார்.

கரு ஜெயசூரிய, முரண்பாடாக பெரிதாக ஒன்றையும் கூறவில்லை மஹிந்த ராஜபக்ஷ தனது பெரும்பான்மையை நிரூபிக்கும் வரை அவருக்குரிய பிரதமர் ஆசனத்தை வழங்க மாட்டேன் என்றே கூறினார். இது ஒரு ஜனநாயக நாட்டில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்பது சாதாரண விடயம். இதைச் சொன்னதற்காகப் போய் யாரும் பாராளுமன்றத்தைக் கலைக்க தேவையில்லை. இதைப் பேசித் தீர்க்கலாம் ஆனால் பின்னர் 14ஆம் திகதி பாராளுமன்றம் கூடிய போது கரு ஜெயசூரிய தான் மஹிந்தவுக்கு பிரதமர் கதிரையை வழங்க மாட்டேன் என மறுத்ததற்கு மாற்றமாக மஹிந்தவுக்கு பெருந்தன்மையாக கரு பிரதமர் ஆசனத்தை வழங்கியிருந்தார் என்பதை நாங்கள் கவனிக்கத்தக்கது.

பாராளுமன்றத்தைக் கலைக்க ஜனாதிபதி கூறிய காரணங்களில் மற்றுமொன்று பாராளுமன்றத்தினுள் பதினான்காம் திகதி பல கொலைகள் நிகழும் என்பது, பாராளுமன்றத்தினுள் பல கொலைகள் நிகழ இருப்பதாக ஜனாதிபதிக்கு துப்பு கிடைத்திருந்தால் அதனை சபாநாயகருக்கு அறிவித்து பாதுகாப்பை பலப்படுத்த ஏற்பாடு செய்திருக்க வேண்டும். பாராளுமன்றத்தின் பாதுகாப்பு சோதனைகளைப் பலப்படுத்தி பாராளுமன்ற உறுப்பினர்களை கடுமையாக பரிசோதித்து கத்தி, துப்பாக்கி போன்ற ஆயுதங்கள் எதனையும் மறைத்து எடுத்துச் செல்கின்றார்களா என அறிந்திருக்கலாம். சரி அவ்வாறு பாராளுமன்ற உறுப்பினர்கள் யாரும் ஆயுதங்களுடன் உள் செல்லாமல் நிராயுதபாணிகளாக்கிய பின்பும் பாராளுமன்றத்தினுள் ஒருவருக்கொருவர் கழுத்தை நெரித்து கொன்று விடுவார்கள் என ஜனாதிபதி சந்தேகப்பட்டால் ஒரு பாராளுமன்ற உறுப்பினருக்கு பக்கத்தில் இரண்டு இரண்டு இராணுவத்தினரை நிறுத்தி மற்ற பாராளுமன்ற உறுப்பினரின் குரல்வளைப் பக்கம் இந்த பாராளுமன்ற உறுப்பினரின் கை செல்லாமல் பார்த்துக் கொண்டிருக்கலாம்.

Big Boss வீட்டில் 36 கமராக்கள் பூட்டியிருந்தது போல் பாராளுமன்றத்தினுள்ளேயும் 36 கமராக்கள் பூட்டியுள்ளதால் யாராவது கொலை செய்ய துணிவார்களா? உதாரணமாக முன்பு ஒருமுறை பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் பாராளுமன்றத்தினுள் தன்மீது பெட்ரோலை ஊற்றி தற்கொலை செய்யும் எண்ணத்தோடு பெட்ரோல் கேனுடன் பாராளுமன்றம் செல்லும்போது பாதுகாப்பு உத்தியோகத்தர்களால் பெட்ரோல் பறிமுதல் செய்யப்பட்டு தற்கொலை தடுக்கப்பட்டது. இதனைவிடுத்து மைத்திரி கொலைகளுக்கு அஞ்சி பாராளுமன்றத்தை கலைத்தது மைத்திரிக்கே இது ஓவராக படவில்லையா? பாராளுமன்றத்தினுள் கொலை நடக்கும் என  பாராளுமன்றத்தை  கலைத்தால் ஊருக்குள் நடக்கும் கொலைகளுக்கு என்ன செய்வது? ஊரையே கலைத்து விடுவதா? 

ஆனால் அமைச்சர் ஹிஸ்புல்லா, ரஊப் ஹகீம் முஸ்லிம் சமூகத்திற்காக தூக்கி எறிந்த நீர் வழங்கல், நகரத் திட்டமிடல் என்ற அமைச்சை பொறுப்பேற்று விட்டு வந்த கையோடு காத்தான்குடியில் பேசிய முதலாவது கூட்டத்திலே "வெள்ளியன்று இரவு ஜனாதிபதியின் அழைப்பின் பெயரில் அவரைக் காண நான் சென்றபோது பாராளுமன்றத்தைக் கலைப்பது தொடர்பாக சட்ட அறிஞர்கள் உடனான கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது ஜனாதிபதி மக்காவில் இருக்கும் முஸ்லிம் காங்கிரஸ், மக்கள் காங்கிரஸ் தலைவர்களான ரஊப் ஹகீம் உடனும் ரிஷாத் பதியுதீன் உடனும் தொடர்புகொண்டு இறுதி முடிவை கேட்குமாறு கேட்டார்.

இரு கட்சிகளும் வந்தால் பாராளுமன்றத்தை கலைக்க மாட்டேன் என்று ஜனாதிபதி தெரிவித்தார். இரு தலைவர்களிடனும் இருந்து ஆதரவாக பதில் கிடைக்காததையடுத்தே ஜனாதிபதி பாராளுமன்றத்தை கலைக்கும் வர்த்தமானிக்கு கையொப்பமிட்டார்" என ஹிஸ்புல்லாஹ் கூறினார். 

பாராளுமன்றத்தை கலைத்ததற்காக ஜனாதிபதி கூறிய காரணத்திற்கும் ஹிஸ்புல்லா கூறும் காரணத்திற்கும் முரண்பாடு உள்ளது. ஆனால் ஹிஸ்புல்லா கூறிய காரணமே உண்மையானது. இன்று ரஊப் ஹகீம், ரிஷாத் பதியுதீன் சம்மதித்திருந்தால் ஆட்சிமாற்றத்தை கொண்டுவந்திருக்க முடியும். 50 கோடி ரூபாய் பணத்துக்கு ஆசைப்படாமல் அமைச்சு பதவிகளுக்கும் அதன் மூலம் கிடைக்கும் வரப்பிரசாதங்களுக்கும் ஆசைப்படாமல் முஸ்லிம் சமூகத்தின் மானம், மரியாதையை காப்பாற்றும் நோக்கில் இரு முஸ்லிம் கட்சிகளினதும் பாராளுமன்ற உறுப்பினர்களும் நடந்து கொண்டார்கள். 18ஆம் அரசியல் யாப்புத் திருத்தத்திற்கு ஆதரவு வழங்கியமைக்காக ரஊப் ஹகீமுக்கு அதனால் ஏற்பட்ட கறையை இன்று வரைக்கும் நீக்கிக் கொள்ள முடியவில்லை. 18ஆம் திருத்தத்திற்கு ஆதரவு தெரிவித்தது எவ்வாறான தவறு என்று ரஊப் ஹகீம் பின்வருமாறு வர்ணித்தார், "நாங்கள் கண்ணை திறந்து கொண்டே குழிக்குள் விழுந்தோம்" என ரஊப் ஹகீம் வர்ணித்தார். ஆனால் இம்முறை இவ்வாறான தவறை ரஊப் ஹகீம் செய்யவில்லை. அதற்குப் பிரதான காரணம் இம்முறை அவருக்கு கிடைத்த பாராளுமன்ற உறுப்பினர்கள் அவருக்கு ஒரு தலையிடி இல்லாத உறுப்பினர்களாக அமைந்தது தான். இதற்குமுன் அமைந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் அவருக்கு மிகவும் தலையிடி கொடுப்பவர்களாக இருந்தார்கள். இதற்குப் பிரதான காரணம் முன்னாள் அமைச்சர் பசீர் சேகுதாவூத் தான். பசீர் சேகுதாவூத் பணம், பதவி என்பவற்றை இலக்காகக் கொண்டு செயல்படுபவர்,


சமூக நோக்கம் கிடையாது. நாட்டின் இன்றைய பிரச்சினையான பிரதமர் யார் என்பதை தீர்மானிக்கின்ற இந்த பிரச்சனையை வைத்தே பஷீர் சேகுதாவூத் குறைந்தது ஒரு கப்பலாவது வேண்டியிருப்பார். மஹிந்தவுக்கு அதிகாரம் இல்லாமல் ஒரு நாள் கூட இருக்க முடியாதோ அதே போல பஷீரிற்கு கப்பலின் சொந்தக்காரராக இல்லாமல் ஒரு நாள் கூட இருக்க முடியாது. இம்முறைதான் பசீர் சேகுதாவூத் இல்லாத பாராளுமன்ற குழு ரஊப் ஹகீமுக்கு கிடைத்திருக்கின்றது. தலையிடியும் இல்லாமல் இருக்கின்றது. பசீர் சேகுதாவூதுக்கு தொடர்ச்சியாக தேசியப்பட்டியலை வழங்கி ரஊப் ஹகீம் தனக்குத் தானே தலையிடியை தேடி கொள்வார். இதுதான் காசு கொடுத்து சூனியம் வைப்பது என்பது, இதுதான் வேலியில் செல்லும் ஓணானை வேட்டிக்குள் விடுவது என்பது.

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் கூட்டத்திலே அமைச்சர் SB. திசநாயக்க “மக்கா சென்று உள்ள முஸ்லிம் கட்சித் தலைவர்களான ரஊப் ஹகீமும், ரிஷாத் பதியுதீனும் எங்களுடன் இணைந்து கொள்வார்கள். அவ்வாறு அவர்கள் கட்சியாக அனைவரும் இணைந்து கொள்ளாவிட்டால் அவர்களின் பாராளுமன்ற உறுப்பினர்களை தனித்தனியாக நாங்கள் அபகரித்துக் கொள்வோம். எந்த, எந்த பாராளுமன்ற உறுப்பினர்களை நாங்கள் அபகரிப்போம் என்பது ரஊப் ஹகீமிற்கும் ரிஷாத் பதியுதீனிற்கும் நன்றாகவே தெரியும்” என  SB. திசநாயக்க முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களை கிள்ளுக்கீரை போல் நினைத்து பேசினார். ஆனால் இவரின் இவ்வாறான அலட்சியமான பேச்சுக்கு முஸ்லிம் கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்கள் உறுதியாக இருந்து ஆப்பு அடித்தது முஸ்லிம் சமூகத்தை பெருமை கொள்ளச் செய்தது. 

இவ்வாறு முஸ்லிம் தலைவர்கள் விலைபோகாமல் உறுதியாக இருந்தது அவர்களுக்கு முஸ்லிம் சமூகத்தின் மத்தியில் நல்லதொரு மரியாதையை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. முஸ்லிம் சமூகத்திற்கும் இந்த நாட்டில் நல்லதொரு மரியாதையை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் மாத்திரமல்ல தமிழ், சிங்கள பாராளுமன்ற உறுப்பினர்களும் 50 கோடி பணத்திற்கும், பதவிக்கும் சோரம் போகாமல் ஜனநாயகத்தை பாதுகாக்க உறுதியாக இருந்தமை எமக்கெல்லாம் மெய்சிலிர்க்க வைக்கின்றது. இவ்வாறான உறுதிமிக்க தலைவர்கள் இருக்கும் வரை இந்த நாட்டில் ஜனநாயகத்திற்கு எந்த தீங்கும் வந்துவிடாது என்ற ஒரு நம்பிக்கை ஒளிக்கீற்று இந்நாட்டு மக்களுக்கு தென்படுகின்றது. 

இன்று பாதுகாப்பற்று அலரிமாளிகையில் இருக்கும் ரணிலை பாதுகாப்பதில் பெரும்பங்கு முஸ்லிம்களே வகிக்கின்றனர். ரணிலின் உயிரை பாதுகாப்பதில் இருந்து அவரின் பதவியை பாதுகாப்பது வரைக்கும் முஸ்லீம் மக்களின் பங்களிப்பு காத்திரமானது. இந்த சந்தர்ப்பத்திலே முன்னாள் அமைச்சர் அதாவுல்லா முஸ்லிம் மக்களை நோக்கி அறைகூவல் விடுத்ததையும் நாங்கள் கவனிக்க வேண்டும். அதாவது ரணில் பதவி இறக்கப்பட்டதை அடுத்து ரணிலை ஆதரித்து ஒரு ஆர்ப்பாட்டப் பேரணி ஒழுங்கு செய்யப்பட்டது. இந்தப் பேரணிக்கு கொழும்பு முஸ்லிம்கள் செல்லக்கூடாது என்று அதாவுல்லாவினால் அறைகூவல் விடுக்கப்பட்டது. காரணம் முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டால் முஸ்லிம்களுக்கு எதிராக இந்த நாட்டிலே சிங்கள காடையர்களால் நடாத்தப்படும் வன்முறைகளை காரணம் காட்டி அதாவுல்லா கொழும்பு முஸ்லிம்கள் ஆர்ப்பாட்ட தினத்தன்று வீட்டை விட்டு வெளியேறக்கூடாது என கேட்டிருந்தார்.

இந்த நாட்டிலே ஜனநாயகத்தை பாதுகாப்பதற்குரிய உரிமை முஸ்லிம்களுக்கு இல்லையா? அதாவுல்லாவின் கூற்றானது இந்த நாட்டின் முஸ்லிம்களுக்குள்ள பிறப்புரிமை, பிரஜாவுரிமையை மறுப்பதாக உள்ளது. சிங்களவர்கள் ஜனநாயகத்தை பாதுகாக்க போராடினால் சிங்களத் தலைவர்கள் யாரும் சிங்களவர்களுடைய கடை உடைப்போம், கொல்லுவோம் என அச்சுறுத்துவது இல்லை. ஆனால் அதே வேலையை முஸ்லிம்கள் செய்தால் அதாவுல்லா போன்றோர்கள் முஸ்லிம்கள் சூறையாடப்படுவார்கள் என அச்சுறுத்துவது ஏன்?

 மைத்திரிபால சிறிசேன ஆட்சிக்கு வரும்போது பல விடயங்களை இந்நாட்டில் ஒழிப்பேன் என்றார். அதாவது குடும்ப ஆட்சியை ஒழிப்பேன், லஞ்சம் ஊழல், வீண்விரயம் புரிந்த முன்னாள் ஆட்சியாளர்களை சட்டத்திற்கு முன்னிறுத்தி தண்டனை பெற்றுக் கொடுப்பேன். முன்னாள் ஆட்சியாளர்கள் துபாயிலே, சீ செல்ஸ் தீவிலே பதுக்கி வைத்திருக்கும் திருட்டுப் பணத்தை நாட்டிற்கு கொண்டு வருவேன், நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி முறையை ஒழிப்பேன், சர்வாதிகாரத்தை ஒழிப்பேன் என்றார். "நிறைவேற்று அதிகாரத்தை பாவிக்க மாட்டேன்" என்றார். இன்று இவ்வளவு அனைத்தையும் நாட்டிலே செய்துள்ளார். தனது நிறைவேற்று அதிகாரத்தை 19ஆம் திருத்த சட்டத்தின் கீழ் குறைத்துவிட்டதாக பெருமைப்பட்டுக் கொண்டார். அத்திருத்தத்தின் மூலம் ஜனாதிபதிக்கு பிரதமரை அகற்ற முடியாது, பாராளுமன்றத்தைக் கலைக்க முடியாது. இந்த திருத்தத்தின் நோக்கத்தை சரியாகப் புரிந்திருந்தும் இன்று இந்த திருத்தத்தின் சொல்லுக்குச் சொல் அர்த்தம் எடுத்து அந்த அதிகாரங்கள் தனக்கு இருப்பதாகக் கூறி பிரதமரை அகற்றினார், பாராளுமன்றத்தை கலைத்தார். 19 ஆவது திருத்தத்தில் தனது அதிகாரத்தை குறைத்தவர் இப்போது தனது அதிகாரம் குறைக்கப்படவில்லை தனக்கு நிறைவேற்று அதிகாரம் இருப்பதாகக் கூறி குறைக்கப்பட்ட நிறைவேற்று அதிகாரத்தை மீண்டும் கோலோச்சுகிறார். கத்தரிக்கப்பட்ட நிறைவேற்று அதிகாரத்திற்கு மீண்டும் உருவம் கொடுத்துள்ளார்.


பாராளுமன்றம் கலைப்பதற்கு முதல் நாள் கூட "வரவு செலவுத் திட்டத்தை தோற்கடிப்பதன் மூலமே பாராளுமன்றத்தை கலைக்க முடியும் என்று வரவு செலவுத் திட்டத்தை தோற்கடிக்க எதிர்க்கட்சிகள் முஸ்தீபு எடுக்கின்றன, அதனை நான் ஆசீர்வதிக்கிறேன். அதன்மூலம் பாராளுமன்றம் கலைக்கப்பட்டு தேர்தல் வருவதையே விரும்புகின்றேன்" என மஹிந்த கூறினார். அவரும் ஜனாதிபதிக்கு பாராளுமன்றத்தை கலைக்க அதிகாரம் இல்லை என ஏற்றுக்கொண்டிருந்தார். ஆனால் இன்று மைத்திரியால் பாராளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளது. தான் ஜனாதிபதியாக இருந்தபோது பாவிக்காத அதிகாரங்களை மைத்திரி பாவிப்பதை கண்டு மஹிந்தவே அதிர்ந்து போயுள்ளார் இவ்வளவு மடத்தனமான ஆளாக மைத்திரி இருக்கின்றாரே என்று. எனவே நிறைவேற்று அதிகாரத்தை ஒழிக்க வந்த மைத்திரி சட்டத்தின் மூலம் ஒழித்துவிட்டு மீண்டும் அதற்கு ஒரு செயற்கையான தோற்றப்பாட்டை கொடுத்துள்ளார். 

மைத்திரி மக்களுக்கு கொடுத்த வாக்குறுதியை மீறி உள்ளார். சதொசவில் திருடியதாக விளக்கமறியலில் இருந்த ஜோன்ஸ்டன் பெனாண்டோ  இற்கு சதொசவிற்கு அமைச்சராக நியமித்துள்ளார். வீடமைப்பில் ஊழல் புரிந்த குற்றச்சாட்டில் சிறையிலிருந்த விமல் வீரவன்சவிற்கு வீடமைப்பு அமைச்சையே கொடுத்துள்ளார். திருடர்களுக்கு தண்டனை வழங்குவேன் என வாக்குறுதி அளித்த மைத்திரி இன்று அதனை மீறி உள்ளார். இன்று ஊழல் மோசடிகளின் மொத்த உருவமான மஹிந்தவிற்கு பிரதமர் பதவியை வழங்கி ஊழல் மோசடிகளை ஒழிப்பேன் என வந்த மைத்திரி அதனை மீறி உள்ளார். மஹிந்தவுக்கு பிரதமர், அவரது அண்ணன் சமல் ராஜபக்ஷவிற்கு சுகாதார அமைச்சு என வழங்கி குடும்ப ஆட்சியை ஒழிப்பேன் என வாக்குறுதி வழங்கி வந்த மைத்திரி அதனை மீறி உள்ளார். 

நிறைவேற்று அதிகாரத்தை தான் பாவிக்க மாட்டேன் என வாக்குறுதி அளித்து வந்த மைத்திரி இன்று தனக்குள்ள, தனக்கு இல்லாத அதிகாரங்களை எல்லாம் பாவித்து அதுவும் தனது நண்பன் ரணிலின் மீது பாவித்து அந்த வாக்குறுதியையும் மீறியுள்ளார். ஒருமுறை மாத்திரம்தான் தான் ஜனாதிபதி தேர்தலில் போட்டி போடுவேன் என வாக்குறுதி அளித்த மைத்திரி அதனை மீற மாட்டார் என்பதற்கு என்ன உத்தரவாதம். அதுவும் நடக்கலாம். அதற்காகத்தான் இவ்வளவு ஆட்டம் மைத்திரி ஆடுகின்றார் என அரசியல் விமர்சகர்கள் கூறுகிறார்கள். 

மைத்திரி பிரதமர் பதவியிலிருந்து ரணிலை நீக்கினார். பிரதமரை நீக்கும் அதிகாரம் மைத்திரிக்கு இல்லை என்றனர் ரணில் தரப்பினர். ஆனால் அவ்வதிகாரம் மைத்திரிக்கு இருக்கிறது என்றும் இல்லையென்றால் நீதிமன்றம் செல்லுமாறு மஹிந்த தரப்பினர் ரணில் தரப்பினரை கோரினர். இதற்கு ஏன் நீதிமன்றம் செல்ல வேண்டும் இதற்கு தீர்வு பாராளுமன்றத்திலே பெரும்பான்மையை நிரூபிப்பதன் மூலம் தீர்க்கலாம் என ரணில் தரப்பினர் நம்பியிருந்தனர். ஆனால் மைத்திரி தனக்கு பாராளுமன்றத்திலே பெரும்பான்மை இல்லை என்பதை அறிந்து திடீரென பாராளுமன்றத்தை கலைத்தார்.

பாராளுமன்றத்தில் தீர்வை காணலாம் என நம்பியிருந்த ரணில் தரப்பினர் பாராளுமன்றம் கலைக்கப்பட்டதால் பாராளுமன்றத்தை கலைக்கும் அதிகாரம் மைத்திரிக்கு இல்லை என அதற்கு தீர்வு காண நீதிமன்றம் சென்று வெற்றியும் பெற்றனர். நீதிமன்றம் செல்லுங்கள், நீதிமன்றம் செல்லுங்கள் என தூண்டிய மஹிந்த தரப்பினர், தற்போது தேர்தல் வேண்டாம் என ரணில் நீதிமன்றம் சென்றுள்ளார். நீதிமன்றம் செல்லுமாறு தூண்டிய மஹிந்த தரப்பினரே ரணில் நீதிமன்றம் சென்றதை கொச்சைப்படுத்தி எதிர்மாறாக பேசுகின்றனர். இதைவிட ஒரு சந்தர்ப்பவாத அரசியலை காணமுடியாது. 

நிறைவேற்று அதிகாரத்தை எதிர்த்து நீதிமன்றங்கள் தீர்ப்பு கூற முடியாது நிறைவேற்று அதிகாரத்தை எதிர்த்து நீதியரசர்கள் தீர்ப்பு வழங்க துணிய மாட்டார்கள் என்றெல்லாம் கூறப்பட்டது, எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவ் எதிர்பார்ப்புகளை எல்லாம் தவிடுபொடியாக்கும் வண்ணம் உச்சநீதிமன்றம் தனது இடைக்கால தீர்ப்பை வழங்கியுள்ளது. இன்று இவ்வுத்தரவு சர்வதேசரீதியாக பேசப்படுகின்றது. இவ்வாறு அரச ஊழியர்கள் தமது கடமையை துணிந்து செய்ய வேண்டும். தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர் ஒருவர் பாராளுமன்றத்தைக் கலைக்கும் வர்த்தமானியை தடை செய்யுமாறு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். சபாநாயகரும் நிறைவேற்று அதிகாரத்திற்கு பயப்படாமல் சில நடவடிக்கைகளை எடுக்க முற்பட்டார். 

இத்தீர்ப்பின் மூலம் 14 ஆம் திகதி பாராளுமன்றம் கூடுவதற்கு ஏதுவானது. அன்று பாராளுமன்றத்தை கூட்டி சபாநாயகரும் ஏற்கனவே தான் கூறியவற்றிற்கு மாற்றமாக மஹிந்த ராஜபக்ஷவுக்கு பிரதமர் ஆசனத்தை வழங்கி மஹிந்தவை ஆற அமரச் செய்துவிட்டு நம்பிக்கையில்லா பிரேரணைக்குரிய வாக்கெடுப்பை நடத்தி முடித்திருக்கிறார். அதிலே 122 வாக்குகள் மஹிந்தவுக்கு எதிராக அளிக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் தனது பெரும்பான்மையை மஹிந்த நிரூபிக்க தவறியிருக்கிறார். இதனால் மஹிந்த தனது பிரதமர் பதவியை இழக்க வேண்டும் அல்லது தனது பதவியை துறக்க வேண்டும். 

இவ்வாறு 14ஆம் திகதி பாராளுமன்றம் கூடி கலைந்தும் விட்டது ஆனால் ஜனாதிபதி கூறியதுபோல் அங்கு எந்த கொலைகளும் விழவில்லை. எனவே ஜனாதிபதி பொய் சொல்லி பாராளுமன்றத்தைக் கலைத்துள்ளார் என்பது இதன் மூலம் புலனாகின்றது.

இந்த நிலைமை மைத்திரிக்கு மஹிந்தவை பிரதமராக நியமிக்க முன்பே புரிந்திருக்க வேண்டும். பொதுஜன ஐக்கிய முன்னணியின் செயலாளர் மஹிந்த சமரசிங்க தேசிய அரசாங்கத்தில் இருந்து தாங்கள் விலகுகிறோம் என கடிதம் கொடுத்ததில் இருந்து தான் இந்த விடயங்கள் அரங்கேற தொடங்கின. தேசிய அரசாங்கத்தில் இருந்து பொதுஜன ஐக்கிய முன்னணி விலகினாலும் ஐக்கிய தேசிய கட்சிக்கு 107 ஆசனங்கள் இருக்கின்றன,

பொதுஜன ஐக்கிய  முன்னணிக்கு 95 ஆசனங்கள் மாத்திரமே இருக்கின்றன. அரசியலமைப்பின்படி பாராளுமன்றத்தில் அதிக ஆசனங்களை கொண்டவராக தான் கருதுவதாக உள்ளவரைதான் மைத்திரியால் பிரதமராக நியமிக்க முடியும். பொதுஜன ஐக்கிய முன்னணி தேசிய அரசாங்கத்தில் இருந்து விலகினாலும் ரணில் 107 ஆசனங்களை கொண்டிருப்பதால் பிரதமர் பதவியை இழந்து இருக்கமாட்டார். 107 பெரியதா? 95 பெரியதா? 107 தானே பெரியது. இந்த சாதாரண கணக்கு கூட மைத்திரிக்கு புரியவில்லையே. மைத்திரி கணக்கிலே புலியாக இருப்பார் என எதிர்பார்த்தோம் அல்லது மைத்திரி கணக்கிலே சிறுத்தையாக இருப்பார் என எதிர்பார்த்தோம் ஆனால் மைத்திரி கணக்கிலே காண்டாமிருகம் ஆக இருப்பார் என இந்த நாட்டிலே யாருமே எதிர்பார்க்கவில்லை. 

இறுதியாக நடந்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கூட்டத்திலே தான் ஏற்கனவே 113 ஆசனங்களை பெற்றுவிட்டதாகவும் எல்லோரும் இரவைக்கு நிம்மதியாக தூங்கலாம் யாரும் அதைப்பற்றி கவலைப்பட தேவையில்லை, தானும் இரவைக்கு நிம்மதியாக தூங்குவேன் என்று கூறிய மைத்திரி அது தவறும் பட்சத்தில் தான் இறுதியாக ஒரு துரும்பை வைத்திருப்பதாகவும் தனது ஆதரவாளர்கள் மத்தியில் கூறியிருந்தார். இறுதியாக மைத்திரி வைத்திருந்த துரும்பையும் பாவித்தாகிவிட்டது. இப்போது அந்த துரும்பும் வீணாகிவிட்டது. அதுதான் பாராளுமன்ற கலைப்பு.

எனவே பாராளுமன்றத்திலே பிரதமர் மஹிந்தவும், அவரது அமைச்சர்களும் செல்வாக்கின்மையால் அவர்களை பதவி இழக்கச் செய்து புதிய அரசாங்கத்தை அமைக்க வேண்டிய பொறுப்பு ஜனாதிபதிக்குள்ளது. இனி மைத்திரி புதிய அரசாங்கத்தை அமைக்க ரணில் தரப்பினரை அழைப்பாரா? அல்லது புதிய ஏதாவதொரு துரும்பை கொண்டு வருவாரா? என்பது அடுத்து வரும் நாட்களில் தெரியும். பேராசிரியர் GL.பீரிஸ் போன்ற சட்டவல்லுனர்கள் 19ஆவது திருத்தத்தில் உள்ள ஓட்டைகளின் படி மஹிந்தவுக்கு நான்காவது முறையாகவும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட முடியும் என்றனர். இப்படியான கருத்தின் மூலம் மஹிந்தவின் ஆசையை தூண்டி நான்காவது முறையாகவும் தான் ஜனாதிபதித் தேர்தலில் போட்டி போட முடியும் என கனவு காண வைத்தனர். அதன் பிற்பாடு முன்னாள் பிரதம நீதியரசர் சரத் N சில்வா ரணிலை பிரதமர் பதவியிலிருந்து நீக்கி மஹிந்தவை பிரதமராக்க முடியுமென வியாக்கியானம் கொடுத்து அதனையும் செய்தனர்.

பாராளுமன்றத்திற்கு உரிய ஆசனங்களை விலை கொடுத்து வாங்க முடியாமல் போனதால் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல் போகும் என பயந்து ஜனாதிபதிக்கு பாராளுமன்றத்தை கலைக்க முடியும் என ஆலோசனை வழங்கி சரத் N சில்வா பாராளுமன்றத்தை கலைக்க வைத்து அதன் மூலம் பொதுத்தேர்தலுக்கு சென்றால் வெற்றி பெற்று மஹிந்த பெரும்பான்மையோடு பிரதமராவார் என்று ஆசை காட்டி உள்ளனர். அதுவும் இடைக்கால தடை மூலம் தவிடுபொடியாகி விட்டது. இவ்வாறு GL. பீரிஸ் உம் சரத் N சில்வா உம் மஹிந்தவை ஒரு கனவு உலகத்திலேயே வாழ வைத்துக் கொண்டிருக்கின்றார்கள். மகிந்தவை கனவுலகத்தில் இன்பம் காண செய்வது GL. பீரிஸ் இற்கும் சரத் N சில்வா இற்கும் ரொம்ப பிடித்த விடயம்.

பாராளுமன்றத்தில் மஹிந்தவும் அவரது அரசாங்கமும் பெரும்பான்மை இழந்துள்ளது இன்று சபாநாயகர் அனுப்பிய கடிதத்தை இன்று மைத்திரி நிராகரித்துள்ளார் பாராளுமன்ற சம்பிரதாயங்களை நிலையில் கட்டளைகளை மீறி இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார் ஜனாதிபதி பாராளுமன்றத்தில் புதிய அரசாங்கத்திற்கு கதிரைகள் ஒதுக்க வேண்டும் வரவு செலவு திட்டத்தை தயாரிக்க வேண்டும் போன்ற அற்ப காரணங்களுக்காக பாராளுமன்றத்தை இருபத்தொரு நாட்களுக்கு ஒத்திவைத்தது பாராளுமன்ற சம்பிரதாயங்களை மீறவில்லை பாராளுமன்றத்தில் கொலை விழுமென்று கோரி பாராளுமன்றத்தை ஜனாதிபதி கலைத்தது பாராளுமன்ற ஜனநாயகத்தை மீறவில்லையா இன்று நீதிமன்றம் பாராளுமன்றம் கலைத்த வர்த்தமானிக்கு தடைவிதிக்கவில்லை இன்று நாட்டின் மிக முக்கிய பிரச்சனையான பிரதமர் யார் என்பதை தீர்மானிக்க பாராளுமன்ற சம்பிரதாயங்களை மீறியது தவறா? ஒத்திவைக்கப்பட்ட பாராளுமன்றம் கூடும் போது ஜனாதிபதியின் கொள்கை பிரகடன உரை பாரளுமன்றத்தில் இடம்பெற வேண்டும். 14 ஆம் திகதி ஜனாதிபதி பாரளுமன்றத்தில் உரையாற்றவில்லையே? இந்த பாராளுமன்ற சம்பிரதாயத்தை ஜனாதிபதி மீறவில்லையா? மைத்திரி பாராளுமன்ற சம்பிரதாயங்களை மீறலாம் ஆனால் மற்றவர்கள் பாராளுமன்ற சம்பிரதாயங்களை மீற கூடாது. மைத்திரிட உம்மா மட்டும் உம்மா மற்றவர்களின் உம்மா சும்மாவா? மைத்திரிட இரத்தம் மட்டும் இரத்தம் மற்றவர்களுடைய இரத்தம் தக்காளி சட்னியா? 

மகிந்தாவுக்கு பிரதமர் பதவிப் பிரமாணம் செய்த கையோடு பாரளுமன்றத்திற்கு முன்பாக நாட்டு மக்களை திரட்டி மஹிந்த அணியினர் நடத்திய கூட்டத்தில் பேசிய மைத்திரி “மீண்டும் ரணில் பிரதமர் ஆகினால் நான் எனது ஜனாதிபதி பதவியை ராஜினாமா செய்து விட்டு மஹிந்தவோடு சேர்த்து வீதியில் இறங்கி போராடுவேன்” என மைத்திரி பேசினார். இதன்படி மைத்திரி தன் பதவியை துறந்து வீதியில் இறங்குவாரா என பொருதுதிருந்து தான் பார்க்க வேண்டும். 

எனவே அரசியலமைப்பை காலால் அடித்து ஒரு சதி மூலம் மைத்திரி அரங்கேற்றுகின்ற இந்நிகழ்ச்சிகளை வைத்து அண்மையில் வெளிவந்த சர்க்கார் படம் போல ஒரு படத்தை தயாரிக்கலாம். அந்தப் படத்திற்கு ஹீரோ யார்? நம்ம தல தான்.

ஆக்கம்
மர்சூக் அகமட் லெவ்வை

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.