பரீட்சை வினாத்தாள் பொதியில் வேறுபட்ட வினாப்பத்திரங்கள் இருந்ததால் 2 மணி நேர தாமதமும் குழப்பநிலையும்-ஏ.எச்.ஏ. ஹுஸைன் 

தற்போது சகல அரசாங்கப் பாடசாலைகளிலும் ஆண்டிறுதிப் பரீட்சைகள் இடம்பெற்று வருகின்றன.

மட்டக்களப்பு மத்தி கல்வி வலய ஏறாவூர் கோட்டப் பாடசாலைகளில் நேரசூசி அடிப்படையில் திங்கட்கிழமை 26.11.2018  காலை 8 மணிக்கு நான்காம் ஆண்டுக்கான சுற்றாடல் பரீட்சை இடம்பெறுவதாக இருந்தது.

ஆயினும், மாணவர்கள் பரிட்சைக்காகக் காத்திருந்து களைத்துப் போன நிலையில் சுமார் 2 மணித்தியாலங்கள் கழித்தே காலை 10 மணியளவில் உரிய சுற்றாடல் பரீட்சை வினாத்தாள் மாணவர்களின் கைக்குக் கிட்டியது.

பரீட்சை வினாத்தாள் பொதியில் வேறுபட்ட வினாப்பத்திரங்கள் இருந்ததால் 2 மணி நேர தாமதமும் குழப்பநிலையும் ஏற்பட்டதாக ஆசிரியர்களும் மாணவர்களும் பெற்றோரும் தெரிவித்தனர்.

பாடசாலைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்த வினாத்தாள் பொதி மேலுறையில் 'சுற்றாடல்'பாட வினாத்தாள் என எழுதப்பட்டிருந்த போதும் பொதியினுள்ளே 'தமிழ்'ப்பாட வினாத் தாள்களே இருந்துள்ளன.

இந்த விடயம் தொடர்பாக பாடசாலை அதிபர்கள் கல்வி அதிகாரிகளுக்கு உடனடியாகத் தெரியப்படுத்தியதின் பேரில் சுமார் 2 மணி நேரம் கழித்து சுற்றாடல் பாடத்திற்கான வினாத் தாள்கள் வந்து சேர்ந்து மாணவர்கள் பரீட்சையை எழுதி முடித்துள்ளனர்.

இது குறித்து கல்வி வலய அதிகாரியொருவர் கருத்துத் தெரிவிக்கும்போது 'ஆண்டிறுதிப் பரீட்சைக்கான இந்த பரீட்சை வினாத்தாள் பொதிகள் மாகாண மட்டத்திலிருந்து வலயத்திற்குக் கிடைப்பவை.

வினாத்தாள் பொதி முகப்பில் ஒரு பாடத்தின் பெயருக்குப் பதிலாக இன்னொரு பாடத்தின் பெயர் குளறுபடியாக எழுதப்பட்டிருந்தது பரீட்சை வினாத்தாள்களை அச்சிடும் அச்சகத்தில் வினாத்தாள்களைப் பொதியிட்டு தயார்படுத்தும் ஊழியர்களின் பிழையே தவிர கல்வி வலயத்தின் பிழையல்ல' என்றார்.

எனினும் இதுபோன்ற தவறுகள் எதிர்காலத்தில் இடம்பெறாதவாறு நடவடிக்கை எடுப்பது அதிகாரிகளின் முக்கிய பொறுப்பாக இருக்க வேண்டும் என அதிபர்களும், ஆசிரியர்களும், மாணவரி;களும் பெற்றோரும் எதிர்பார்க்கின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.